Skip to main content

முன்னுரை

‘எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு”

நாம் இவ்வாறு ஒரு நூலை உருவாக்குவதற்கு முன்பு ஏன்? எப்படி? எவ்வாறு? எனப் பல வினாக்களுக்கு விடை காண வேண்டியிருந்தது. குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முன்னோடியாக வாழ்ந்த எமது தந்தை என்றும் நீங்கா நினைவுகளுடன் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவர் என்ற பேரவா எமக்குண்டு. அதன் பிரதிபலிப்பாக அவரது 31ஆம் நாள் நினைவுமலரை வெறுமனே துதிப்பாடல்கள், அனுதாபச் செய்திகளுடன் உருவாக்குவதில் எமக்கு இணக்கப்பாடு இருக்கவில்லை. என்றும் அழிவடையாத முக்கியத்துவம் நிறைந்த கலைகளுள் ஒன்றான சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுக்கலைகளுக்குத் தந்தையாய் இருந்து அளப்பரிய சேவையாற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எங்கள் அப்பா என்றும் ஒரு காவியத் தலைவன். 

பிறப்பிலேயே அவர் தமிழ் இலக்கண, இலக்கிய சூழலில் தவழ்ந்தவராதலால் எழுத்தினையயும் வாசிப்பினையும் என்றும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாது. தனது வாழ்வியல் அனுபவங்களை ஒரு சுயசரிதையாக சில காலந்தொட்டு எழுதிவந்தார். அப்போது எமக்குக் கூறுவார், ‘இதனை நான் நிறைவூசெய்யாவிட்டால்இ நீங்கள் இதனை நிறைவுசெய்து நான் இல்லாவிட்டாலும் நூலாக வெளியிட வேண்டும்.” இது அவரது பெருவிருப்பு‚ அதற்கான தக்க தருணம் இதுவே. அப்பா எம்மை தனியே ஏட்டுக்கல்வியுடன் மட்டும் வளர்க்கவில்லை. ஒவ்வொருவரையும் பலதுறைகளில் வழிகாட்டி அவருக்கான இந்நூலை நாமே உருவமைக்கக் கூடிய ஆற்றலையும் திறமையையும் உருவாக்கித்தந்துள்ளார். எனவே அவர் நினைவாக இவ்வாவணப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.

இன்றைய உலகின் அசாதாரண சூழ்நிலையால் அவரது இறுதியஞ்சலி நிகழ்வில் பல மக்களால் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களது ஆதங்கங்களை, அனுதாபங்களை வெளிப்படுத்துவற்கு ஒரு களமாக இந்நூலை அமைத்துக் கொடுத்துள்ளோம். மேலும்இ அப்பாவின் சமூக சேவையும் மனிதநேயமும் பலரும் அறிந்ததே. இருந்தும் அவரது பல பரிமாணங்கள் பலரால் அறியப்பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நூல் அவற்றையெல்லாம் அறியக்கூடிய பல பெருந்தகைகளின் ஆக்கங்களைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது. குடும்பத் தலைவனாக, உறவினராக, அயலவனாக, நண்பனாக, அதிகாரியாக, நிர்வாகியாக, ஆசிரியராக, சமூக சேவையாளனாக, நலன்விரும்பியாக, இறை அடியவனாக, ஏன், ஒரு மாமனிதனாக எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாதாரம்.

பிள்ளைகளாகிய நாம்கூட இந்நூலை உருவாக்கத் தொடங்கியதிலிருந்துதான் அப்பாவைப்பற்றி நாங்கள் அறியாத பல பரிமாணங் களை எம்மால் தரிசிக்கக் கூடியதாயிருந்தது. அவர் தன்னலம் கருதாது ஆற்றிய சேவைகளும் அதனால் பயனடைந்து வாழ்க்கையில் சிறந்தோங்கும் பலரை இதனூடாகக் காணக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவரது வாழ்க்கைப்பாதை இனிவரும் இளம்தலை முறைக்கும் வழிகாட்டி போன்றதாயமையயும் என நம்புகிறோம். இம்முயற்சியை அப்பாவழி நாமும் செல்வதற்கான அனுமதிப்பத்திரமாகவே எண்ணுகிறோம்.

பிள்ளைகள்

Comments