Skip to main content

அன்னாரும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும் - யோ. ஜெயவாணி

அன்னாரும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும்

1996இல் வதிரியில் அமைந்துள்ள வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் கற்றல் செயற்பாட்டுக்காக நான் இணைந்துகொண்டபோது கழகத்தின் செயலாளராக சிவச்சந்திரதேவன் சேர் இருந்தார். வடமராட்சியில் மட்டுமன்றி யாழ். மாவட்டமெங்கும் பெயர் பெற்றிருந்தது வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம். அன்னார் அவர்கள் மக்கள் வங்கியில் அந்தரங்கச் செயலாளராக இருந்த காலத்தில் 01.10.1985இல் இக்கழகத்தினை உருவாக்கி தன் இறுதிக்காலம் வரை கழகத்தின் செயலாளர், தலைவர், போதனாசிரியர் போன்ற பணிநிலைகளில் செயற்பட்டிருக்கின்றார். இவரால் உருவாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று  இலங்கை பூராகவுமுள்ள பல அரச, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

நெஞ்சில் உறுதியும்,நேர்மைத் திறனும் மிக்க இவர் கழகத்திற்காகச் சொந்த இடம் இல்லாத நிலையில் வாடகை வீடொன்றில் கழகத்தின் செயற்பாடுகளை நடாத்தி வந்தார். அத்தோடு கழகத்தின் சார்பில் அருகமைந்த பாடசாலைகளுக்கு நிதி ரீதியான உதவிச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இவ்வாறு கழகம் இயங்கி வந்த காலத்தில் 35 வருட கால சேவையின் பின்னரான காலத்தில் உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதன் நிமித்தம் கொழும்பு சென்று வசிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. அங்கு வசித்த காலத்திலும் மாதத்தில் ஒரு தடவை யாழ்ப்பாணம் வந்து கழகத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சியும் மாறுதலும் காரணமாக கழகத்துக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்களின் வருகை போதாமையால் கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை தொடரமுடியாதநிலை ஏற்பட்ட போதிலும், செயற்குழு உறுப்பினர்களை ஒன்றுகூட்டி கலந்துரையாடல்களை மேற்கொண்டு நிர்வாகச் செயற்பாடுகளைத் தொடர்ந்து வந்தார். இவ்வாறு தொடர்ந்த காலத்தில் கடந்த 23.05.2020 அன்று சேர் அவர்கள் திடீரென மாரடைப்பால் இயற்கையெய்திவிட்டதாக வந்த செய்தி கேட்டு மிக்க துயரத்தில் ஆழ்ந்தேன். ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகவே அன்னாரின் இழப்பை நான் பார்க்கின்றேன்.

கழகத்தில் நான் கற்கும் மாணவராக இருந்ததிலிருந்து 1997இல் தட்டச்சு ஆசிரியையாகி, அதன்பின் 2004 தொடக்கம் 2006வரை சுருக்கெழுத்துக் கற்பித்து, தொடர்ந்து 2014இல் கழகத்தின் உப தலைவராகவும்  நான் பணிபுரிந்த இந்த நாள்வரை சேர் அவர்களுடன் பணிபுரிந்த காலங்கள் பெறுமதிமிக்கவை, மறக்கமுடியாதவை.

எவருடனும் அன்புடனும் பண்புடனும் பழகும் நல் மனிதராய், முற்போக்குச் சிந்தனை, சமூக சேவை என்பவற்றில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கு இணங்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவர் எங்கள் க.வ. சிவச்சந்திரதேவன் சேர் அவர்கள்.

நாட்டில் நிலவும் COVID  19 வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளமுடியாதமையையிட்டு வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக குடும்பத்தினரும் மாணவரும் மிகவும் வேதனையுறுகின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவர்தம் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

யோ. ஜெயவாணி
உப தலைவர்,
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்.

 


Comments