நண்பர் சிவச்சந்திரதேவன் அவர்களின் மறைவுச் செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால், மிகுந்த மனவருத்தம் தருவதாக இருந்தது. கால் நூற்றாண்டுக்கு மேலாக நான் அவரை அறிவேன். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் மூலமாக அவர் செய்த பணிகள் பல. கணினிப் பயன்பாடு பரவலாக வருமுன்னர், தட்டெழுத்து, சுருக்கெழுத்தின் முக்கியத்துவத்தை தமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு அறிவித்து, வகுப்புகள் நடத்தி, பலரை அத்துறையில் பிரகாசிக்கச் செய்தவர். அவருடைய ஊக்கத்தினால் நல்ல வேலைகளைப் பெற்ற பலநூறு பயனாளர்கள் இன்றும் அவரை வாழ்த்திக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு துறையில் பயிற்சி பெறும் ஒருவர் அத்துறையின் பல்வேறு நுணுக்கங்களையும் சரியாகக் கற்றுத் தேறவேண்டும் என்ற கொள்கை உடையவர் அவர். அதனால், தமிழ்த் தட்டெழுத்தாளர்கள் என்போர் வெறுமனே கொடுப்பதை "டைப்" செய்து வைப்பவர் என்பதற்கு மேலாக, நல்ல தமிழை பிழையின்றிப் பயன்படுத்தினால்தான் அவர்களது சேவை முழுமைபெறும் என்பதை நன்குணர்ந்த அவர், நான் தமிழ் கற்பிப்பதை அறிந்து அந்த நாட்களில் என்னை அழைத்து அந்தத் தட்டெழுத்துப் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் இலக்கணத்தையும் சரியாக தமிழ் எழுதும் முறைமைகளையும் கற்பிக்கச் செய்தார். நான் செய்த இச் சிறு பணியைப் பெரிதாகக் கருதி சுருக்கெழுத்துக் கழகத்தின் ஆண்டு விழாவில் என்னை அழைத்துக் கௌரவித்த அவரது பெருந்தன்மையைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். தொடர்ச்சியாக அவர் என்னோடு நல்ல நட்பைப் பேணிவந்தார்.
இன்னொரு வகையிலும் எனக்கு அவரோடு தொடர்பு இருந்தது. உடுப்பிட்டிப் பண்டகைப் பிள்ளையார் கோவில் அடியவராகவும், உபயகாரராகவும் அவரை நான் அறிவேன். அந்த ஆலயத்தின் விழாக்களில் சாதகாச்சாரியாராக நான் செல்லும் வேளையில் அவரை அங்கு காணலாம். அங்கேயும் அவர் எல்லா விடயங்களும் மிகச் சரியாக நடைபெறவேண்டும் என மிகுந்த அக்கறையோடு செயற்படுவதை நான் கண்டிருக்கிறேன்.
இப்படித்தான் வாழவேண்டும் என வரையறைகளை ஏற்படுத்தி செப்பமான முறையில் நல்வாழ்வு வாழ்ந்த அவரது திடீர் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தேன். நண்பர் சிவச்சந்திரதேவனும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் விடாப் பிடியாக என்னைத் தம்மோடு அழைத்துச் சென்று தமது இல்லத்தில் சிறிதுநேரம் அன்போடு உரையாடி, உபசரித்து, தனது மகன் வெளியிட்ட நூல் ஒன்றையும் தந்து அனுப்பி வைத்தமை என்றும் மறக்க முடியாத நட்பின் மகிமை ஆகும். அவரது நல்லியல்புகளுக் கேற்ப அவரது பிள்ளைகளும் நல்ல துறைகளில் நன்கு முன்னேறி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.
அவரது குடும்பத்தினரின் துயரில் பங்குகொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களுக்குத் தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
ப. சிவானந்த சர்மா
Comments
Post a Comment