Skip to main content

நீங்காது நிறைந்த மனம் - த.ஜெயசீலன்

நீங்காத எண்ணங்கள் நிறைந்து ஓடும்.

நினைவில் அவர் சிரித்தமுகம் வந்து போகும்.

பாங்காகப் பழகும் முறை, பணிவும் பண்பும்,

பரிவும், அவர் தகைமைகளின் பெருமை பேசும்.

வாங்கி அவர் பெற்ற வரமான இந்த

“வடமராட்சிச் சுருக்கெழுத்துக் கழகம்” இன்று

தேங்கிநிற்கும் கண்ணீரில் எதனை நாளை

செய்வதெனத் தெரியாது திகைத்து வாடும்!


வங்கியாளன் ஆனபோதும் நடந்து வந்த

வழிச்சுவடை மறக்காமல் சுருக்கெழுத்தின்

மங்காத பெருமைபேசி, அதனின் நன்மை

மகத்துவத்தை இளையோர்க்கும் பரப்ப ஏங்கி,

எங்கும் திறம் மாணவரை ஆக்கி, சேவை

இதயமுடன் "வாழ்நாளில் பாதிக் காலம்

பங்களித்த "சிவச்சந்திரதேவன் பாதம்

பணிந்து அன்னார் நினைவுகளில் கரைந்து போனேன்!


"வடமராட்சிச் சுருக்கெழுத்துக் கழகம் என்ன

மாற்றங்கள் கொள்ளவேண்டும் என்று வந்து

இடைவிடாது அளவளாவிச் செல்வார் நல்ல

விழாக்கள் இடையறாதெடுத்து, திறமையாளர்

தடங்களுக்கு மதிப்பளிப்பார் முப்பதாண்டு

தாண்டியதை பெருவிழாவாய்க் கண்டார் அன்றக்

கடும்பயணத் துணைவர்களை வாழ்த்தி நின்றார்

கனவிலும் அக்கழகமுய்ய நேர்ந்து வென்றார்!

 

சுருக்கெழுத்தைச் சுவாசமாக்கி, அதை எல்லோரும்

தொடர வழி காட்டி, காலமாற்றம் நோக்கித்

திரும்பி, அதும் சேர்த்தியக்கி, கழகம் ஓங்கச்

சேவையாற்றி, கவிதையினால் என்னை நாடி,

விருப்போடு கூடி, இருபத்தைந் தாண்டாய்

மிகு நட்பைப் பாராட்டி, மிளிர்ந்த தேவன்.

இறையடியைச் சேர்ந்தாராம்! வருந்தி, அன்னார்

ஆன்மாவின் சாந்திக்காய்த் தொழுவேன் ஏங்கி!

 

த.ஜெயசீலன்
ஆணையாளர்,
மாநகர சபை,
யாழ்ப்பாணம்.

Comments