Skip to main content

பாலைவனத்தில் ஒரு நதி - சி.முகுந்தன்

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் இயக்குநரும் ஆசானும் ஆகிய அமரர் சிவச்சந்திரதேவன் அவர்களைப் பற்றிய என் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதில் மன அமைதி  அடைகின்றேன். இற்றைக்கு சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நான் .பொ.. உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு, பல்கலைக்கழகத் தெரிவிற்காகக் காத்திருக்கும் நேரம் எமது பெரும்பாலான பொழுதுகள் வீணாக நகர்ந்து கொண்டிருந்தன. தற்செயலாக இலவச சுருக்கெழுத்து, தட்டச்சு பயிற்சி எனும் அறிவித்தல் பலகையை வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் வாயிலில் பார்க்க நேரிட்டது. எனது நண்பர்களிடம் இச்செய்தியைப் பகிர்ந்தபோது, அவர்களும் விரும்பினார்கள்குறித்த இலவசப் பயிற்சிக்கு  விண்ணப்பித்தோம்எங்களுக்கு சில நிபந்தனைகளுடன் பயிற்சிபெற அனுமதி கிடைத்தது.

சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சிபெறச் சென்றபோது ஆசான் சிவச்சந்திரதேவன் அவர்களைச்  சந்தித்துப் பழகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் எனக்குப் பிடித்திருந்தன. மிகவும் கண்டிப்பு மிக்கவராகவும் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுபவராகவும் தனது பெரும் பாலான நேரத்தைக் கழக வளர்ச்சிக்காகவும் அபிவிருத்திக்காகவும் செலவிடுபவராகச் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது மதிப்பிற்குரிய ஆசான், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் மற்றும் இருபாலையில் இயங்கிய மக்கள் நலன்காக்கும் பிரிவு ஆகியவற்றினூடக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படாமல் இருப்பவர்களுக்குத் தமிழ் ஆங்கிலச் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் பயிற்சி நெறியினை வழங்கியமையானது,  கல்வியைத்  தொடரமுடியாதவர்களுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் மிகவும் ஒரு வரப்பிரசாதமாகவே அக்காலகட்டத்தில் இருந்தது.

சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தனது சேவையினை எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் எமது சமூகத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் செவ்வனே ஆற்றியிருந்தார். தான் கற்ற கல்வியினை சிறப்பாக மற்றவர்களுக்கும் வழங்கி உன்னத பணியாற்றிய கல்வியாளனாக  சம்மாந்துறை மற்றும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் வருகைதரு விரிவுரையாளராக சுருக்கெழுத்து, தட்டச்சுக் கல்விநெறிக்காகச் சேவையாற்றியிருந்தமை என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளுக்குத் தயார்ப்படுத்தி, பரீட்சையிலும் சிறந்த சித்தி யினைப் பெறச்செய்து, நிரந்தர தொழில் கிடைப்பதற்கான அற்புத மான சூழலை ஏற்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே! இதனால் இங்கு பயிற்சி பெற்ற 90 வீதமானோர் அரசாங்க திணைக்களங்களில் நிரந்தர பணியாளர்களாக சிறந்த பணியினை மேற்கொள்வது, எங்களுக்கெல்லாம்  பாலைவனங்களில் நதி பாய்ந்து நிலத்தை சோலைவனமாக மாற்றிய உணர்வினைத்  தந்திருக்கின்றது.

இவ்வாறு தன்னலமற்ற சேவையினையாற்றி, சுகயீனம் காரணமாக சில காலம் கொழும்பில் வதிவிடத்தை மாற்றியபின்பும் கழகமானது இயங்கிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நானும் எனது உயர்கல்விக்காக பல்கலைக்கழகம், பின்னர் தொழில் என பிறமாவட்டங்களுக்குச் சென்ற போதும் அடிக்கடி கழக செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவேன். உண்மையில் இவரைப்பற்றி எத்தனையோ  நிகழ்வுகளைப் பகிரமுடியும். இவ்வாறாக அற்புதமான சமுதாய வழிகாட்டியாக,  சமூக சிற்பியாக இருந்த  சுயநலமற்ற ஒளிச்சுடர் எம்மையெல்லாம் ஆறாத்துயரில் விட்டுவிட்டுச் சென்றமை மிகவும் வேதனையளிக்கின்றது. இவருடைய நற்பணிகளும் நேர் சிந்தையும் நிச்சயமாக இவரின்  துனைவியார் மற்றும் பிள்ளைகளின் வாழ்வில் எப்போதுமே ஒளியூட்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக என வேண்டி, எமது ஆசான் மறைந்தாலும் அவர் பணி, புகழ், புண்ணியம்  அனைத்தும் எமக்கும் எமது சமூகத்திற்கும் மிகவும் பயன்படும்.

அமரர் எமது ஆசான் சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக!

சி.முகுந்தன்
விரிவுரையாளர்,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லலூரி,
கோப்பாய்.


Comments