"சமூக நலன் கருதி உழைப்பவர்கள் இறப்பினும் வாழ்வர் என்பது உலக நியதி”
யாழ்ப்பாணம்
தொழில்நுட்ப கல்லுரியிலிருந்து 1971ம் ஆண்டின்
இறுதிப் பகுதியில் பயிற்சிநெறியை முடித்த நான் வெளியேறிய காலப்பகுதியில் சிவச்சந்திரதேவன்
அவர்களை துறைசார்ந்த கல்வியை மேற்கொள்ள வந்த ஒரு மாணவனாக அறிவேன்.
காலச்சக்கரம்
சுழன்றது. 1980களில் கல்முனை காணி மாவட்டப் பதிவகத்தில் கடமையாற்றிவந்த காலத்தில்
நண்பா; சிவச்சந்திரதேவன் அவர்களை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. தாம் மக்கள் வங்கியில்
கடமையாற்றி வருவதாகவும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதிநேர போதனாசிரியராகக்
கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அவ்வாண்டுடன் தாம் மாற்றலாகிச் செல்லவுள்ளதால்
அப்பதவியை தொடர முயற்சிக்குமாறு எனக்கு ஆலோசனை தெரிவித்ததுடன், தமது நண்பர்கள் அனைவரையும
உள்ளடக்கிய ஓர் ஒன்றுகூடலை நடாத்தவுள்ளதாகவும் அதில் தவறாது பங்குபற்றுமாறும் அன்பு
வேண்டுகோள் விடுத்தார். ஒரு மாலைப்பொழுதில் சுமார் 50 பேரைக்கொண்ட ஒன்றுகூடல் எளிமையாக, ஆனால் சிறப்பாக நடைபெற்றமை நினைவில் அழியாப் பதிவாகும். அதற்கான காரணகார்த்தாவாக விளங்கியவர் அவரே. அவரின் ஆலோசனையின் பேரில் மேற்குறித்த
பதவியை 5 ஆண்டு காலம் வகித்தேன்.
1986ம் ஆண்டின்
நடுப்பகுதியில் ஒருநாள் பருத்தித்துறை காணிப்பதிவு அலுவலகத்தில் எனது வேலையில் மூழ்கியிருந்த
காலைவேளையில் என் எதிரே ஓர் உயர்ந்த, திடகாத்திரமான, சுறுசுறுப்பான, செந்நிறமேனியுடைய
உருவம் கரங்களில் சில தட்டச்சு செய்யப்பட்ட வெள்ளைப்பத்திரங்களுடன் தென்பட்டது. நிமிர்ந்து
பார்த்தேன். வேறு யாருமல்ல, வழமையான புன்னகை யுடனும் சுறுசுறுப்புடனும் தென்பட்டார் நண்பர் சிவச்சந்திரதேவன். அப்பொழுது கலந்துரையாடிய வேளையில்தான் கழகத்தின் தலைமைப்
பொறுப்பை ஏற்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார் பல்வேறு காரணங்களைக் கூறியும் அவர் ஏற்காத நிலையில் வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
நான் அவருடன் சேர்ந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவரது தூரநோக்கு, கடின உழைப்பு, அர்ப்பணிப்பான சேவை ஆகியவற்றுடனும் செயற்குழுவின் ஒத்துழைப்புடனும் கழக நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசேடமாக அவர் ஒருவரை அணுகி கலந்துரையாடினால் அது ஆழ்ந்த
தொலைநோக்கைக்கொண்ட பொருள் பொதிந்ததாக இருக்குமென
உணர்கிறேன்.
சுருக்கெழுத்துப் பயின்ற மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நன்மைதரக்கூடிய அமைப்பொன்றை உருவாக்கவேண்டும் என்ற அவரதும் அவரது மாணவர்களின் சிந்தையிலும் சமகாலத்தில் உதித்த எண்ணக்கருவின் அடிப்படையில் பிரதம அமைப்பாளராக அவரே இருக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டு, அக்காலப்பகுதியில் கரவெட்டி உதவி அரசாங்க அதிபர் அமரர் இ. ஐயாத்துரை (ஓய்வுநிலை அரசாங்க அதிபர், கிளிநொச்சி), பருத்தித்துறை உதவி அரசாங்க அதிபர் அமரர் வை.வேலுமயிலும் (ஓய்வுநிலை செயலாளர் வட, கிழக்கு மாகாணசபை) ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு அவர்கள் இருவரும் பதவி வழியாக காப்பாளர்களாக செயற்பட சம்மதித்ததன் பேரில் திரு.சிவச்சந்திரதேவன் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை 01.10.1985ல் ஸ்தாபித்து, அதன் ஸ்தாபகராக, செயலாளராக, இந்நாள் தலைவராக பரிணமித்து வந்தார்.
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக படிமுறை வளர்ச்சியடைந்து பல்வேறு துறைசார்ந்த சான்றோரின் அரவணைப்பு, ஆலோசனை ஆகியவற்றுடன் கழக நிர்வாகிகள் உறுபினர்கள், அபிமானிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பல்வேறு வகையான சவால்களுக்கும் முகம் கொடுத்து இறுதிவரை இக்கழகம் தனது பெருமையை உள்நாட்டிலும்
வெளிநாடுகளிலும் பறைசாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
அவர் காலத்துக்குக்
காலம் சுருக்கெழுத்து, தட்டச்சுச் சார்ந்த
பல விடயங்களை பத்திரிகைகள் மூலமும் வழிகாட்டல் பிரசுரங்கள், தொகுப்புகள் மூலமும் வெளியிட்டிருந்தார்.
தமது இளமைக்காலத்தில் தமிழ், ஆங்கில சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள், நாவல்கள் ஆகியவற்றில் துறை தொடர்பான விடயங்களைச் சேகரித்தும் குறிப்பெடுத்தும், சுருக்கெழுத்து, தட்டச்சுத் துறைசார் ஆர்வலர்களைச் சந்தித்தும் பல அரிய தகவல்களைப் பெற்று அவற்றைக்கொண்டு "சுருக்கெழுத்து தட்டச்சுத் தொழில்நுட்பக்கலை வரலாறு”
என்னும் நூலை அப்போதைய அருந்தலைத் தவிர்க்கும்
வகையில் தொகுத்து வெளியிட்டமை இத்துறைசார்ந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாவதுடன், அவரின் உச்சக்கட்டத்தின் ஒரு பதிவாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அக்காலகட்டத்தில்
கழகம் மல்லாகம் மகாவித்தியாலயம், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம், உடுப்பிட்டி அமெரிக்கன்
மிஷன் கல்லூரி, கோப்பாய் வட்டாரக்கல்வி மூலவள நிலையம் (சோமஸ்கந்தாக் கல்லூரி), யாழ்.
4ம் குறுக்குத்தெரு நற்சமூக நடு நிலையக் கேட்போர்கூடம், யாழ். செஞ்சிலுவைச்சங்கம், கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி, பருத்தித்துறை
ஞானசம்பந்தர் கலை மன்றம், இருபாலை மக்கள் நலன்காக்கும் பிரிவு என பல்வேறு இடங்களில்
சம்பந்தப்பட்ட நிறுவன அதிபர்கள், பொறுப்பாளர்களின் ஆதரவுடன் சுருக்கெழுத்துப்போட்டி, சான்றிதழ் வழங்கும் வைபவம், பிற்மன் வாரவிழா, தட்டச்சு தந்தைகள் ஷோல்ஸ் முத்தையா விழா, தமிழ் சுருக்கெழுத்து தந்தை சி.இராமலிங்கம் அவர்களின் நினைவு தினம் கருத்தரங்குகள் கலை நிகழ்ச்சிகள் போன்ற இன்னும் பலவகை நிகழ்வுகளையும்
நடாத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றமை நண்பர் சிவச்சந்திரதேவன் அவர்களின் மகிமையை என்றும்
கட்டியம் கூறி நிற்பனவாகும். ஓர் ஆணின் வெற்றியின் பின்னணியில் ஒரு பெண் இருப்பார் என்ற வகையில் திருமதி கிருஷ்ணகுமாரி சிவச்சந்திரதேவன் அவர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பும் மகத்தானது.
நாட்டில் எங்கெல்லாம்
கழக மற்றும் வங்கி நிகழ்வுகளில் தமது கைங்கரியங்களை செய்தாரோ அங்கெல்லாம் உள்ள புகைப்படங்களும் வீடியோ படங்களும் சிவச்சந்திரன் அவர்களின் உருவத்தையும் செயற்பாடுகளையும் அனைத்துள்ளங்களின்
கண்முன்னே என்றென்றும் நிலைநிறுத்தும்.
அமரர் திரு வி.செ.சுவாமிநாதன் திட்டமிடல் பணிப்பாளர் யாழ்ப்பணம் (செயலாளர் புனர்வாழ்வு புனரமைப்பு சமூகநலன் அமைச்சு வடக்கு - கிழக்கு மாகாணம் திருகோணமலை) அமரர் திரு.க.மாணிக்கவாசகர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பதவிவழியாக காப்பாளர்களாக விளங்கி பலவகையிலும் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்பு வழங்கிய திரு.செ. ஸ்ரீநிவாசன் பிரதேச செயலார் கரவெட்டி (ஓய்வுநிலை மேலதிக அரசாங்க அதிபர் கிளிநொச்சி) திரு.க.கனகரத்தினம் (ஓய்வுநிலை பிரதேச செயலாளர் கரவெட்டி) திரு.இ.சிவபுண்ணியம் (ஓய்வுநிலை பிரதேச செயலாளர் கரவெட்டி) அமரர் திரு.வே.வீரபத்திரபிள்ளை பிரதேசசெயலாளர் கரவெட்டி, திரு.சி.சத்தியசீலன் பிரதேச செயலாளர் கரவெட்டி (செயலாளர் ஆளுநர் அலுவலகம் வடமாகாணம்) திரு.எஸ்.சிவஸ்ரீ பிரதேச செயலாளர் கரவெட்டி அமரர் திரு.எஸ்.முருகேசபிள்ளை பிரதேச செயலாளர் பருத்தித்துறை திரு.ஆ. சிவசுவாமி பிரதேச செயலாளர் பருத்தித்துறை (ஓய்வுநிலை பிரதம செயலாளர் வடமாகாணம்), திரு.எஸ்.வசந்தகுமார், பிரதேச செயலாளர், பருத்தித்துறை, திரு.இ.வரதீஸ்வரன் பிரதேச செயலாளர் பருத்தித்துறை (Secretary, Industry of Women's Affairs, Rehabilitation, Social Service, Co-operatives Food Supply and Distribution Industries & Enterprise & Promotion), திரு. த. ஜெயசீலன் பிரதேச செயலகம்இ பருத்தித்துறை (உள்ளூராட்சி ஆணையர் யாழ்ப்பாணம்) திரு. க.இராசரத்தினம் ஓய்வுநிலை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் (முகாமைத்துவ ஆலோசகர், ஞானசம்பந்தர் கலைமன்றம், பருத்தித்துறை) ஆகியோரும் இக் கழகத்தில் பயிற்சி பெற்று உரிய தகைமையானவார்களை வங்கித் துறையில் வெளிவள ஊழியர்களாகவும் பின்னர் அவர்களில் பலரை நிரந்தர அலுவலர்களாகவும் ஆக்கிய பிரதான காரண கர்த்தாவாயிருந்த திரு.க.பாலசுப்பிரமணியம், ஓய்வுநிலை உதவி பொதுமுகாமையாளர் வட பிராந்தியம் அவர்களும், அவரைத் தொடர்ந்து ஓய்வுநிலை உதவி பொது முகாமையாளார் திரு.பி.ஏ.அருமைநாயகம், ஓய்வுநிலை உதவி பொது முகாமையாளர், திரு.என.சிவரத்தினம் ஆகியோர் அக்காலப்பகுதயில் கழக வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த செம்மல்கள்.
தேசிய பயிலுனர் அதிகாரசபை பயிற்சிநெறியை 1993ல் இருந்து கழகத்தில் தொடர மிகுந்த ஆர்வத்துடன் வழிசமைத்தவர் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தார் அமரர் பேராசிரியர் அ.துரைராசா அவர்கள். தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் அதிகாரிகள், வரிசையில் இறுதிக்காலப்பகுதியில் கடமையாற்றிய அமரர் திரு.பி.இராமநாதன், மாகாண முகாமையாளார், திரு. கே.கிருஷ்ணபாலன், ஓய்வுநிலை மாகாண முகாமையாளர் ஆகியோரின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அமரர் திரு.க.அருளானந்தம் (ஆசிரியர், யா/ஹாட்லி கல்லூரி ) வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் செயற்பட வதிரியில் கட்டடம் ஒன்றை தமது பெருமுயற்சியால் பெற்றுக்கொடுத்து தமது இறுதிக்காலம் வரை தமது துணைவியார் சகிதம் பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
சிவச்சந்திரதேவன்
அவர்களின் வாழ்க்கையும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 35 வருடகால படிமுறை வளர்ச்சியும்
ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவை என்ற ரீதியிலும் மேற் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்
அனைத்தும் சிவச்சந்திரதேவன் அவர்களின் உள்ளத்திலும்; என்றும் பதிவுபெற்றவை என்ற காரணத்
தாலும் அவரின் வாழ்க்கைச் சரிதத்தில் ஒருபகுதியாக உள்ளடக்கப் பட வேண்டிய அத்தியாவசியம்
கருதி தரப்பட்டுள்ளன. அனைத்து செயற்பாடுகள்
பற்றிய விபரங்கள் கழகத்தால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஆண்டுவிழா
மலர்களில் விரிவான முறையில் பதிவானவை ஆகும். இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய பலதுறை
சார்ந்த பெரியோர்கள் , சான்றோர்கள், அன்புள்ளங்கள் உள்ளமை பற்றி நன்கறிவேன். எனினும்
நிலைமையை பெருமனதுடன் புரிந்துகொள்வார்கள்
என எண்ணுகிறேன்.
இக்காலப்பகுதியில்
அவர் இல்லத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் நான் குடும்ப சகிதம் கலந்துகொண்டமையும்
அவ் வகையில் எமது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் அவா; கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கழக வரலாற்றில்
முக்கிய இடம் பிடித்த பின்வரும் விடயத்தை
கழகத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டும் காலத்தின் தேவை கருதியும்
சம்பந்தப்பட்ட அனைவரின் தகவலுக்கும் சிந்தனைக்கும் பொருத்தமான நடவடிக்கைக்கும் சாலப்
பொருத்தமானது எனக் கருதி தரப்படுகிறது.
அமரர் திருமதி கனகம்மா தம்பிப்பிள்ளை பெருமாட்டியின் இழப்பு
சுமார் 17 ஆண்டுகளின் பின்னர் கழகச் செயற்பாட்டை நிலைகுலையச் செய்ததுடன் மாத்திரமன்றி நண்பர் சிவச்சந்திரதேவன் அவர்களின் உள்ளத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. கழகமே தமது
உயிர்மூச்சென கடந்ந 35 ஆண்டு காலமாக அல்லும் பகலும் கட்டிக்காத்து வந்து வரலாற்றில்
இடம்பிடித்த நாயகனின் - செம்மலின் வாழ்வில்
விழித்திருக்கும் நேரத்தில் பிடிக்க முடியாது என எண்ணிய காலன் அவர் துயிலும் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி எவரும் எதிர்பார்க்காத வகையில் அவரின் உயிரை 23.05.2020ல் திடீரெனப் பறித்துச்
சென்றுவிட்டான்! இச் செய்தி முதலில் தொலைபேசிமூலம் கழக பழைய மாணவர் ஒருவர் மூலம் என் செவிகளுக்கு எட்டியதுதான்
தாமதம், அதிர்ந்தேன்! நம்பமுடியாத செய்தியல்லவா? அதைத் தொடர்ந்து அவரது கழக நடவடிக்கைகளும்
முக்கிய வைபவங்களும் மனத் திரையில் ஓடிக்கொண்டிருந்தனவே தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.
சில நாட்களின் பின்னர் ஓரளவு தெளிவடைந்து எனக்குள்ள கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம்;
கருதியும்; எழுதப்பட்டது.
“மரணம் என்பது முடிவு அல்ல இன்னொரு வாழ்க்கையின் ஆரம்பம்”
என்றே ஏராளமான ஞான நூல்கள் பறைசாற்றுகின்றன.
“ துன்பங்களும் துயரங்களும் அற்புதங்களை நிகழ்த்துகின்றன?”
நண்பர் சிவச்சந்திரன்
அவர்களின் பிரிவால் துயரத்தில் முழ்கியிருக்கும் துணைவி, பிள்ளைகள், உடன் பிறப்புக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இத்துயரிலிருந்து
மீள எல்லாம் வல்ல இறைவன் சக்தியைக் கொடுக்க வேண்டுவதுடன், அவரின் ஆன்ம ஈடேற்றத்திற்கும் என் குடும்ப சகிதம் பிரார்த்திக்கின்றேன்.
சிந்தையில்
வளர்ந்த சிறந்த கழகத்தின் சிற்பிதனை
விந்தைமுகு
துறைதனில் ஆழ்முத்தெடுத்து
இளைஞர்கள் வாழ்வில்
ஒளியேற்றி
வரலாற்றில் தடம்பதித்த நாயகனே
Comments
Post a Comment