அமரர்
க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள்
என்றும் எம் அனைவரது சிந்தனையிலும்
நிலைநிறுத்திப் பார்க்க வேண்டிய ஒரு தூரநோக்குக் கொண்ட
சமூக சிந்தனையாளன். அமரர் அவர்களுடன் எனது தந்தை மூலமாகவே
முதன்முதலில் தொடர்பு ஏற்பட்டது. உயர்தரக் கல்வியை முடித்திருந்த காலத்தில், 2001 - 2002 கல்வியாண்டில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் தமிழ் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு நெறியைப்பயிலக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. 2002ஆம் ஆண்டின் பிற்பகுதியில்
நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் சான்றிதழ் பெற்றது இன்றும் என்கண்முன்னே நிழலாடுகின்றது. அவ்வருடம் 70க்கு மேற்பட்ட மாணவர்கள்
சான்றிதழ் பெற்றிருந்தபோது அமரர் அவர்களது முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அமரர்
அவர்களோடு தொடர்பினை வைத்திருக்க வேண்டுமென்ற சிந்தனையோடு 2003 - 2004 காலப்பகுதியிலிருந்து செயற்குழு உறுப்பினராக கழக செயற்பாடுகளில் இணைந்துகொண்டேன்.
எமக்கெல்லாம் நிர்வாக நடைமுறைகளையும் செவ்வனே எடுத்துரைத்து வழிப்படுத்திய சிறந்த வழிகாட்டியாக அமரர் அவர்கள் திகழ்ந்தார் என்று கூறுவது மிகையாகாது. திரு.சி.குலசிங்கம்
அவர்களுடன் இணைந்தவகையில் அமரர் அவர்கள் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைப் பேணி, சிறப்பான செயலாளராக இருந்து வழிப்படுத்தியதன் பயனாக நாமும் அவருடைய பின்பற்றுதலினால் பிற்பட்ட காலங்களில் செயலாளர், தலைவர் போன்ற பொறுப்புள்ள பதவிநிலையை வகித்து, கழகச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம் என்று கூறுவதில் மனம் பெருமைகொள்கின்றது.
இவ்வாறாக
எனது தனிப்பட்ட திறன்களை விருத்தி செய்வதற்கு கழகத்தினுடைய செயற்குழு அங்கத்தவர்கள் சிறந்த பங்களிப்பை
வழங்கினர். 35 வருடங்களுக்கு மேல் சேவையை வழங்கிய
பழைமையான நிறுவனத்தை ஸ்தாபித்து, சமூகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தமிழ், ஆங்கில தட்டச்சு, சுருக்கெழுத்துக் கல்வியைப் போதித்து, சிறந்த தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதன்மூலம் நல்ல பொருளாதார நிலையைக்
கட்டியெழுப்பும் சேவையை முன்வந்து செய்தார். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை 01.10.1985இல் ஆரம்பித்தபோது தனக்கு
இருந்த கனவினை நனவாக்கிய பல்துறை ஆளுமை கொண்டவர்தான் அமரர் அவர்கள். கழகத்தினுடைய வளர்ச்சியில் இவரின் தொடர்பாடல்திறன் மிகுந்த உறுதுணையாகக் காணப்பட்டது. காலத்திற்குக் காலம் மாணவர்களை செயன்முறைப் பயிற்சி பெறுவதற்கு வடமாகாணத்திலே இருந்த அனைத்து அரச நிறுவனங்களுடனும் தொடர்புகளை
ஏற்படுத்தி மாணவர்களை இணைத்தமை குறிப்பிடத்தக்கது. அம்மாணவர்களில் பலர் சிறந்த நிலைமைகளையும்
பெற்றுள்ளனர்.
தான்
கடமை புரிந்த வங்கிச் சேவையின் மூலம் பெற்றுக்கொண்ட உயர்மட்டத் தொடர்புகளையும் பயன்படுத்தி கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வெற்றிகண்ட நல்லதொரு திட்டமிடலாளன். நல்ல ஆரோக்கியமான சிந்தனையால்
சமூகத்தில் பலரும் விரும்புகின்ற வங்கிச் சேவையினூடாக வேலைவாய்ப்பைப் பெறும்பொருட்டு இலங்கை வங்கியின் வெளிவாரி ஊழியர் திட்டத்தின்மூலம் வடமாகாண ரீதியாக பலருக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இதன்மூலம் பலருக்கு வாழ்வளித்தும் கழகத்தின் சேவையை விருத்தி செய்யும் நிதியையும் பெற்றுக்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்தார்.
அமரர்
அவர்களுடைய சிந்தனை எப்போதுமே மாணவர்கள், அங்கத்தவர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் பயன் பெறத்தக்க முறையில்
திட்டங்களை வகுப்பதாகவே இருக்கும். ஆரம்ப காலத்தில் வகுப்புக்களை நடாத்துவதற்கு இடவசதிகளை வழங்கி ஊக்கமளித்த பாடசாலைகளின் நூல்நிலையங்களுக்கு சிறந்த நூல்களைப் பெறுவதற்கென தலா ஓர் இலட்சம் ரூபாய்
வழங்கும் திட்டத்தை முன்வைத்து மாணவர்களின் தேடல் பசியைப் போக்க வழிசமைத்தார்.
அமரர்
அவர்களின் வாழ்நாளில் அரைவாசியை கழகத்துக்காகவே செலவிட்டிருந்தார். ஒரு நாளில் நாம்
எப்போது தொடர்புகொண்டாலும் கழகம் தொடர்பாகவே உரையாடுவார். அத்துடன் கழகத்தில் அக்கறையுடைய நபர்களை அரவணைத்துக்கொள்வதில் என்றும் தவறியதில்லை. கழகத்தின் ஆவணப்படுத்தல்களைப் புரட்டிப்பார்த்தால், மாணவர்களைக் கற்பித்து அவர்களை சிறந்த தொழில் நிலைகளைப் பெறச்செய்து அவர்களையே அங்கத்தவர்களாகவும்கொண்டு சிறந்ததலைவர்களாக, நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக, சேவையாளர்களாக, மொழியாற்றல் உடையவர்களாக அழகுபார்த்த பெருமை அமரர் அவர்களையே சாரும்.
கால
ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி கண்ட சமூக சிந்தனையாளன்
நாமம் என்றும் எம்மனங்களை
விட்டு விலகாது. அவர்தம் வழியில் நாமும்.
அன்னாரின்
ஆத்மா சாந்திக்காக நாமும் பிரார்த்திப்போமாக‚
செ.விமலன்
Comments
Post a Comment