அமரத்துவம் அடைந்த திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்களை நான் நேரடியாகச் சந்தித்து உரையாடிய வாய்ப்புக்கள் மிக அரிது. இருப்பினும் தொலைபேசியில் உரையாடிய சந்தர்ப்பங்கள் அதிகம். எனக்கு அவருடைய தொடர்பினை ஏற்படுத்தித் தந்தவர் அன்னாரின் கழகத்தில் படித்து அங்கு ஓர் உறுப்பினராக இருந்துவருபவரும் தற்போது நீதிமன்றத்தில் தமிழ்த் தட்டெழுத்தாளராகக் கடமை புரிபவரும் எனது நண்பியுமான செல்வி இ. மாலினி என்பவர்தான்.
மேலும், நான் நீதிமன்றச்
சுருக்கெழுத்தாளராகக் கடமையாற்றியவர் என்பதால்
அன்னாரின் செயற்பாடுகள், சேவைகள்பற்றி அறிந்திருந்தேன். அவருடைய சேவைகளைப் பொறுத்தமட்டில் தான் நேசித்த ஒரு
துறையில் வடமராட்சியில் ஒரு சுருக்கெழுத்துக் கழகத்தை
ஸ்தாபித்த பெருமைக்குரியவர். அதன் ஸ்தாபகராக இருந்து
சுருக்கெழுத்துக் கலையைப் பரப்புவதில் மிகவும் ஆர்வம் நிறைந்தவராகவும் விளங்கினார். தன்னுடைய கழகத்தில் பயிற்சி நெறியினை முடித்தவர்கள் வெறும் கல்விச் சான்றிதழுடன் வெளியேறினால் போதும்
என்ற மனநிலையில் இல்லாமல், எங்கெல்லாம் வெற்றிடங்கள் இருக்கின்றதோ அவற்றை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி, விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுரை வழங்கி, அதற்கான மேலதிக பயிற்சிகளையும் கழகத்தின் மூலம் வழங்கியுள்ளார் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். போட்டிப் பரீட்சைக்குக்
கழக மாணவர்களுக்குத் தட்டச்சு இயந்திரத்தையும் வழங்கி, பரீட்சை நிலையங்களுக்கு தானும் கூட்டிக்கொண்டு போயிருப்பதை நானும் பார்த்திருக்கின்றேன். இவர் ஸ்தாபித்த கழகத்தில்
படித்த மாணவர்கள் பாராளுமன்றம், நீதிமன்றங்கள் இன்னும் பல அரசாங்க, தனியார்
நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்
இவருடைய சுருக்கெழுத்து, தட்டெழுத்துக் கலையின் ஆர்வம் பற்றிக் கூறுவதனால் என்னுடன் கடைசியாக உரையாடிய போது இந்தக் கலை
அழிந்துபோய்விடக்கூடாது
என்றும், இக்கலையின் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்
என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கி
இருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. இந்தக் கலைபற்றி ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, வலம்புரி போன்ற பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதியுள்ளதாக என்னால் அறிய முடிந்தது. இவரால்
எழுதப்பட்ட "சுருக்கெழுத்து தட்டச்சுத் தொழில்நுட்பக் கலை வரலாறு" என்ற
நூலில் இந்தக் கலை தொடர்பான வரலாற்று
ஆவணங்கள் ஏதும் தொகுப்பாக வெளிவந்ததாகத் தெரியவில்லையென்று குறிப்பிட்டிருப்பது அவருடைய தேடல் இக்கலையில் ஆழமாக இருந்ததை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
வடமராட்சி
சுருக்கெழுத்துக் கழகத்தின் முகநூலில், அக் கழகத்தின் பாவனையில்
இருந்த தட்டச்சு இயந்திரங்கள்
விற்பனை செய்யப்பட விருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் யாழ்ப்பாணம்
பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றுபவர் என்ற ரீதியில் அங்கு
தட்டச்சு இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவிய
சூழ்நிலையை அவரிடம் எடுத்துக்கூறி, அந்த இயந்திரங்களை அந்நிறுவனத்திற்கு
வழங்க முடியுமா? என்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காது அவ் இயந்திரங்களை வழங்கியிருந்தார்.
அத்துடன் சுருக்கெழுத்துச் சம்பந்தமான பல நூல்களையும் வழங்கியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் அச்செயற்பாட்டுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டவள் ஆவேன்.
மனிதர்
பிறப்பதும் இறப்பதும் காலத்தின் கட்டளை. பிறப்பின் நொடிகள் அழகானது. அதை மீண்டும் காலத்தின்
நகர்வால் அடையும் போது வாழ்த்துக்கள் அழகானது.
அதேபோல திரு.வ.சிவச்சந்திரதேவனும்
பிறந்த பலனைத் தான் வாழும் காலத்தில்
மிக அழகாக மெருகூட்டிச் சென்றிருக்கின்றார். மேலும் அவருடைய அயரா முயற்சிக்குத் துணையாக
இருந்து வழிகாட்டிய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம்
சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்
சாந்தி!!!
சுப்பையா
ஜெயலெட்சுமி
ஓய்வுபெற்ற
சுருக்கெழுத்தாளர் (அதிவிசேட தரம்),
வருகைதரு
விரிவுரையாளர் - யாழ். தொழில்நுட்ப பயிற்சித்
திணைக்களம்.
Comments
Post a Comment