வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் நிறுவுனர் சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் 23.05.2020அன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தி நண்பர் குணேஸ்வரன் அவர்களின் பதிவின்மூலம் அறியக் கிடைத்தது. அதிர்ச்சியாக இருந்தது.
அன்னாரை
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காணக் கிடைத்திருப்பினும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கவில்லை.
அதனால் சுருக்கெழுத்துத்துறையில் அவரது பணியின் முக்கியத்துவம் எனக்கு தெரியாமல் இருந்தது.
யாழில்
நடந்த புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு புகைவண்டியில் கொழும்புக்குத் திரும்பும் பயணத்தின்பொழுது அன்னாருடன் நெருக்கமாகப் பேசக் கிடைத்தது. இலங்கையில் சுருக்கெழுத்து வரலாற்றில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. அத்துறைபற்றி அறிய ஆவலுடன் இருந்த
எனக்கு (1970களில் தமிழ் சுருக்கெழுத்து ஆரம்ப வகுப்புக்குப் போய் வந்த அனுபவத்தில்)
அவருடனான ரயில் பயணத்தின் பொழுதான அந்த உரையாடல் மிகப் பயன்மிக்கதாக
அமைந்தது. பின் வந்த நாட்களில்
சுருக்கெழுத்து சம்பந்தமாக அவர் எழுதிய நூலின்
ஒரு பிரதியை எனக்கு நண்பர் பொன்னுத்துரை மூலம் சேர்ப்பித்தார். அந்த நூலின் பிரதி
கையில் கிடைத்ததும் வாழ்வு ஓட்டத்தில் அதைப்பற்றி அவருடன் பேசக் கிடைக்கவில்லை. சுருக்கெழுத்தை அவருடன் படித்த (உ+ம்: நந்தினி
சேவியர் அவர்கள்), அவர் படிப்பித்த
(உ+ ம்: நண்பர்
குணேஸ்வரன்) இலக்கியவாதிகள் மூலம் மேலும் அவர் பற்றி அறியக்
கூடியதாக இருந்தது. சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் சுருக்கெழுத்துத்
துறையில் வல்லுநராக இருந்தபொழுதும் ஈழத்து தமிழ் இலக்கிய இயக்கத்தைப் பற்றிய அறிதல் கொண்டவராகவும், அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களுடன் உறவாடியவராகவும் இருந்தார் என்பதை மேற்குறிப்பிட்ட ரயில் உரையாடல் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. அதற்கு ஆதார உதாரணங்களாக நந்தினி
சேவியர் அவர்களும், நண்பர் குணேஸ்வரன் அவர்களும் திகழ்கிறார்கள். மற்றும் கொழும்புத் தமிழ் சங்கத்துடனான அன்னாரின் தொடர்பும் இதில் அடங்கும்.
ஒவ்வொரு
துறையிலும் ஒருசில தனிமனிதர்கள் மட்டுமே முக்கியத்துவம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள்.
அந்த வகையில் சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் சுருக்கெழுத்துத்
துறையில் முக்கியத்துவமிக்க ஒருவராகத் திகழ்ந்தார். சுருக்கெழுத்துத்துறை வரலாற்றில் அவருக்கு என்றென்றும் ஒரு நிரந்தர இடம்
இருக்கும்.
சிவச்சந்திரதேவன்
ஐயா அவர்களின் இழப்பினால்
துயரில் மூழ்கி இருக்கும் அவரது குடும்பத்தின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.
மேமன்
கவி
memonkavi@gmail.com
Comments
Post a Comment