Skip to main content

ஓ தேவனே! இலங்கை வங்கியையும் ஏனையோரையும் உயர்வடையச் செய்த உத்தமனே...

மக்கள் வங்கியில் பணியாற்றிய உன்னுடன் இலங்கை வங்கியில் பணிபுரிந்த என்னுடனான எமது நட்பு கல்முனையில் 1980களில் ஆரம்பித்தது. உனது தலையசைக்கும் பாங்கு உன் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் குறிகளாகவே எனக்கும் எனது மனைவிக்கும் இலங்கை வங்கியின் சக ஊழியர்களுக்கும் அடையாளம் காட்டியது. இதன் விளையுகள் பல.

அதுவரை காலமும் வங்கியாளர் பரீட்சைகள் (IBSL) அம்பாறையில் நடாத்தப்பட்டு வந்தபோதும், அதை கல்முனைக்கு மாற்றி சகல வங்கிகளினதும் ஊழியர்களினது பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தாய்.

எப்பொழுதுமே யாருக்குமே உதவ வேண்டும் என்ற சிந்தனையுடனும் சுறுசுறுப்புடனும் வாழ்ந்த உனக்கும் எனக்கும் நட்பு பலமாகியது.

உனது, "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே" எனும் சீரிய கொள்கையுடன் எனது கொள்கையும் ஒத்துப்போனதால், கல்முனையிலேயே உனது உயிரோட்டமான 'தட்டெழுத்து-சுருக்கெழுத்து' எனும் தொனிப்பொருளை எனக்கு தந்தமையால் அங்கேயே தமிழ் மாணவர்களுக்கு ஒரு சிறிய அமைப்பை உருவாக்கி வகுப்புக்களை நடாத்தினாய். இதில் எனது பங்களிப்பும் "இராமர் இலங்கை தீவிற்கு பாலம் (அணை) அமைத்த போது அணில் செய்த பங்களிப்பு போல" இருந்தது.

பின்நாட்களில் நாங்கள் யாழ். குடாநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு 1990களில் கிடைத்தது. இக்காலப்பகுதியில் மீண்டும் "வடமராட்சி சுருக்கெழுததுக் கழகம்" எனும் அமைப்பை புனரமைத்து உன் பணியை ஆரம்பித்தாய். இதற்கு என்னையும் கௌரவப்படுத்தி ஆலோசகராக்கி (Advisor) பெருமைப்படுத்தினாய்.

இதற்காகவல்ல ஆனால், எனது இயல்பிற்கிணங்கி என்னாலான நிதியுதவி மற்றும் தட்டச்சு இயந்திரம் போன்றவற்றை வழங்கி, ஊக்கப்படுத்தி, நானும் திருப்தியடைந்தேன். இந்த நிலையம் கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட வதிரியில் உள்ளது. பிரச்சினைகள் வரும்போது எனது ஆலோசனைகளைப் பெறவும் நீ தவறவில்லை. பல வருடாந்த நிகழ்வுகளுக்கு என்னை பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் என்ற கௌரவத்தைத்  தந்து, பெருமைப்படுத்தியது உன் பெருந்தன்மையே.

இலங்கை வங்கியின் ஆளணி மிக நலிந்த போர்க்கால கட்டத்தில் எமக்கு கைகொடுக்க நீ முன்வந்தாய். தலைமைப் பதவியை வகிக்காமல் மாவட்ட காணிப் பதிவகத்தில் கடமையாற்றிய திரு.சி.குலசிங்கம் போன்றோரைத் தலைவராக்கி உனது தன்னல மற்ற சேவையைச் செய்து வந்தாய். 

2001 - 2002 காலப்பகுதியில் இலங்கை வங்கிக்கு ஆளணிப் பற்றாக்குறை மிக மோசமாக இருந்த காலத்தில் "Out sourced staff" எனும் எண்ணக்கரு (Concept) உண்டாக்கப்பட்டு ஆட்சேர்ப்பைச் (Recruitment) செய்ய எமக்கு தலைமையகம் அனுமதி தந்தபோது அடியேனுடைய சிறிய உதவியுடன் நியமனங்களை வழங்கும் தகுதியுடைய வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் மூலம் எமது இலங்கை வங்கியின் வடபிராந்திய ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்க்க நீ செய்த அர்ப்பணங்கள் அளப்பரியவை.

உங்கள் அமைப்பினூடாக ஏறக்குறைய 100 பேரை அல்லலுறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்து தந்து பலகோடி நன்மைகளை சுயநலமற்று ஆற்றியிருந்தீர்.

இவர்களில் 98 வீதமானவர்கள் இன்று இலங்கை வங்கியில் நிரந்தரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் இலங்கை வங்கி மட்டுமல்ல, அந்தக் குடும்பங்களும் உனக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூறிக்கொண்டே இருக்கும்.

இதுமட்டுமா? உன்னிடம் கற்ற மாணவர்களுக்காக AGA’s office, கச்சேரி மற்றும் அரச சார்பற்ற (NGO's) நிறுவனங்களுக்கெல்லாம் படி ஏறியிறங்கி அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்புக்களுக்கு வழிவகுத்தாய்.

தன்னலமற்ற உனது சேவைக்காக தமது தியாகங்களை புரிந்த உன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எமது சமூகம் நிறையவே கடமைப்பட்டுள்ளது.

உன் சேவைகளைப் பற்றி தொடரப் போனால் எழுத்துக்களில அடங்காது. எனவே இத்துடன் விடைபெற்று உன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், ஏனையோருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்து இலங்கை வங்கி சார்பிலும் எமது நட்பின் அடையாளமாகவும் உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி விடைபெறுகின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

திரு.ந.சிவரட்ணம்
Rtd. Asst Gen Manager. BOC (NP),
வல்வெட்டித்துறை.

Comments