மக்கள் வங்கியிலும் வெளியிலும் தேவன் என்று அழைக்கப்பட்ட அன்புக்குரியவர் நண்பர் சிவச்சந்திரதேவன் ஆவார். மிக அன்னியோன்னியமாகவும் சகஜமாகவும் பழகக்கூடிய ஓர் அன்பர் எங்கள் நண்பர் சிவச்சந்திரதேவன் ஆவார்.
தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் அமரர் சிவச்சந்திரதேவன் ஆவார். சுருக்கெழுத்து, தட்டச்சு என்ற பாடநெறியை ஒரு கலையாகக் கொண்டவர். மக்கள் வங்கியினுடைய வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் பெரும்பணியாற்றிய முதற்தர வங்கியாளர். அவர் எங்கள் ஊழியர் மட்டத்திலுமே பல சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்து வழிநடாத்திய பெருமைக்குரியவர்.
வங்கியாளர், வாடிக்கையாளர் மட்டத்திலே அன்பான, இனிய உறவுகளை ஏற்படுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர் உறவினைப் பலப்படுத்தி மக்கள் வங்கியின் வெற்றிக்காக உழைத்தவர். அவர் எப்பொழுதும் எவ்விடத்திலும் இதயபூர்வமான அன்பையே வெளிப்படுத்துவார். இதனால் எல்லோரிடமும் அன்பாகவும் உணர்வூபூர்வமாகவும் பழகக்கூடிய ஓர் உத்தம வங்கியாளரும் நண்பரும் ஆவார்.
அவர் வடமராட்சியில் சுருக்கெழுத்துக் கழகத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் மிகவும் பிரபல்யமானவர். அவரது சுருக்கெழுத்துக் கழகத்தின் மூலமாக பல இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகத்தராக விளங்குவது அவர் சமூகத்திற்குச் செய்த தொண்டாகும். இதனை எப்போதும் வரலாறு பேசும்.
1982இல் அவரோடு சேர்ந்து சுருக்கெழுத்து, தட்டச்சு சேவையினை ஆரம்பிப்பதற்கு என்னாலான உதவிகளையும் நேர்முகப் பரீட்சைகளையும் விழாக்களையும் நடாத்துவதற்கு அடியேன் தோன்றாத் துணையாக நின்றிருக்கின்றேன். அந்த வகையில் அமரர் தேவன் என்னோடு அன்பாகவும் நட்பாகவும் இருந்துள்ளார். அண்மைக் காலத்தில் அவரது கழகம் நடாத்திய கவியரங்கிலேயே கவிஞர்களான ஜெயசீலன். பௌநந்திஇ குணேஸ்வரன் மற்றும் சின்னராஜா ஆகிய நானும் பங்குபற்றி விழாவினைச் சிறப்புறச்செய்த காட்சியானது எனது மனக்கண்ணில் இன்னமும் விரிகின்றது.
அமரர் தேவன் வங்கித்துறைக்கு சுருக்கெழுத்து, தட்டச்சுத் துறைக்கு ஆற்றிய பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் எவராலும் மறக்கமுடியாத மிக இனிய மாமனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
அன்பு நண்பன்,
க. சின்னராஜா
செயற்பாட்டு முகாமையாளர்,
மக்கள் வங்கி.
Comments
Post a Comment