Skip to main content

ரயில் பயணத்தில் சகபயணியான ஆருயிர் நண்பன் - செ.ஸ்கந்தராஜா

1975ஆம் ஆண்டு கொழும்பு - யாழ். ரயிலில் பயணிக்கும்போது சகபயணியாக சிவாவை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் 1976ஆம் ஆண்டில் கல்முனையில் கடமையாற்றும்போது வீட்டில்  இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அக்காலத்தில் இவர் எமது குடும்ப நண்பராகி எமது குடும்ப நன்மை தீமைகளில் எல்லாம் கலந்து கொண்டார். கல்முனையில் வேலை செய் யும்  காலத்தில் சகல திணைக்கள யாழ். உத்தியோகத்தர்களும் மாலை வேளைகளில் கல்முனை கடற்கரையில் ஒன்றுகூடுவோம். இந்நண்பர் குழாமில் யாராவது மாற்றலாகிச் செல்லும்போது சிவாவே முன்னின்று எமது வீட்டில்  பிரியாவிடையை நடத்துவார்.

கல்முனை வங்கியில் வேலைசெய்யும்  காலத்தில் ஒவ்வொரு வாணி விழாவை யும் பெருவிழாவாக நடாத்தி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இக்காலத்தில் இவரது ஆசான் திரு. இராமலிங்கம் மாஸ்டர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றினார். அவர் பணியை இவர் பிற்காலத்தில் தொடர்ந்து நடாத்தினார்.

நான் 1979ஆம் ஆண்டு திருமலைக்கு மாற்றலாகிச் செல்லும்போது பிரியாவிடை தந்து அனுப்பி வைத்தபோதும் ஒரு வாரத்தில் என்னைப் பார்ப்பதற்குத் திருமலைக்கு வந்துவிட்டார். பின்னர் இருவரும் யாழ்ப் பாணத்தில் கடமையாற்றும்போது அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். 1994ஆம் ஆண்டு இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நண்பர்; குழாத்துடன் நடைபெற்ற இவரது திருமணத்தை  சந்தர்ப்பவசமாக தந்தை தாயாக இருந்து நானும் என் மனைவியும் நடாத்தி வைத்தோம்.  அன்றிலிருந்து இறுதிவரை தந்தை தாயாக எம்மைக் கௌரவித்து மகிழ்ந்தார். 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வும் எனது வெளிநாட்டுப் பயணமும் எங்களைப் பிரித்தபோதும் 2007ஆம் ஆண்டு நாம் மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர்தாத்தாஎன தனது பிள்ளைகளுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். கடந்த வருடம் அவர்களது 25ஆவது ஆண்டு திருமண நாளுக்கு எங்களை அழைத்து பெற்றோர்கள் எனக்கூறிக் கௌரவித்தார்.

ஒரு ரயில் பயணத்தின் சகபயணி எனது நண்பனாகி வாழ்நாள் முழுவதும் இணைந்திருந்தோம் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கின்றது. அன்னாரின் திடீர் மறைவு எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்தியபோதும் இதிலிருந்து மீண்டு வரவேண்டியதுதானே மனித வாழ்வு.

அவரின் மரணத்தின்பின்னர் அவரது வீட்டிற்குச் சென்றபோது மகன் சுஹநிதன் என்னை எங்கள் தாத்தா என அறிமுகம் செய்து வைத்தபோது எமது நட்பின் ஆழத்தையும் சிவாவின் அன்பையும் எண்ணிப் பெருமைப்பட்டேன்.  தாத்தா இந்தப் பேரப்பிள்ளைகளுக்கு என்ன செய்யப்போகின்றேன்?

அன்னாரின் ஆத்மா வல்லிபுர ஆழ்வார் திருவடியில் அமைதியடையப் பிரார்த்திக்கின்றேன்.

அன்பு நண்பன்
செ.ஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்,
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை.

Comments