Skip to main content

மாண்புறு தொழில்வாண்மையாளர் - வி.சொக்கநாதன்


'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

இப் பூவுலகில் பல மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயல்பானதே. எனினும் இவ் வையத்திலே வாழவேண்டிய அறநெறிமுறையில் நின்று வாழ்பவர்கள் வானுலகத்திலே உள்ள இறைவனுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவார்கள். இந்த வகையில் யாழ்ப்பாணம், வடமராட்சி, புலோலியைப் பிறப்பிடமாகவும் சைவமும் தமிழும் ஒருங்குசேரப்பெற்ற உடுப்பிட்டி, பண்டகைப் பிள்ளையார்  ஆலயச் சூழலை புகுந்த இடமாகவும் கொண்ட ஓய்வுநிலை வங்கியாளார்  அமரர்  வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்களின் திடீர  மறைவு எம் அனைவருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அமரர்  அவர்கள் தமது வங்கிப் பணியுடன், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த வடமராட்சி மாணவாகளது நலன்கருதி 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்என்ற அமைப்பினை உருவாக்கி, அதனூடாக அம்மாணவர்களுக்கு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்துக் கல்வியை முறைப்படியாக வழங்கி, தொழில் வாய்ப்புக்களுக்கான தொழில்வாண்மைச் சான்றிதழ்களை வழங்கி வந்தார் .

1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் அனைத்து அரச அலுவலக ஆவணங்கள் மற்றும் கடிதப்  பரிமாற்றங்கள் யாவும் தட்டச்சுப் பொறியினூடான தட்டச்சின் மூலமே இடம்பெற்றுவந்தமையால், வடமராட்சி சுருக்கெடுத்துக்கழகத்தில் முறையாகப் பயின்ற பலர்  பெரும்பாலான அரச அலுவலகங்களில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வழியமைத்த ஒரு பெருந்தகையாவார் .

நாடளாவிய ரீதியில் 2004ஆம் ஆண்டில் முகாமைத்துவ உதவியாளார்  சேவை உருவாக்கப்பட்டபோது, தட்டெழுத்தாளர்  சேவையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களும் இச்சேவைக்குள் உள்வாங்கப்பட்டமையானது வடமராட்சி சுருக்கெடுத்துக் கழகத்தில் பயின்ற பலருக்கு கிடைத்த உயர்  அந்தஸ்தாக அமைந்தது.

1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது சிறிய தந்தையார் அமரர்  வி.செ.சுவாமிநாதன் (ஓய்வுநிலை செயலாளர்  புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு, வடக்கு, கிழக்கு மாகாணம்) அவர்களுடாக அமரர்  சிவச்சந்திர தேவன் ஐயா அவர்களுடன் அறிமுகம் கிடைக்கப் பெற்றது. அதன் மூலம் எனக்கும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் கல்விகற்பதற்கான வாய்ப்பினை அமரர்   சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் ஏற்படுத்தித் தந்திருந்தார். அமரர் அவர்களது வழிகாட்டலில் கழகத்தினது ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நிர்வாக ஒழுங்குகள் மிகவும் நேர்த்தியாகவும் கண்டிப்பாகவும் இருந்ததனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அமரரது இத்தகைய வழிகாட்டல் பண்புகள் எமக்கு மேலதிக பல அனுபவங்களைத்  தந்திருந்தது.

அமரர் சிவச்சந்திரதேவன் ஐயா அவர்களது திடீர்  மறைவினால் துயருற்றிருக்கும் அமரரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் துயரத்தில் பங்கேற்பதோடு, ஐயாவினது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

வி.சொக்கநாதன்
உதவித் திட்டமிடல் பணிப்பாளர், 
பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - திட்டமிடல்,
வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம்.

Comments