வதிரி தட்டச்சு, சுருக்கெழுத்து கழகத்தில் 1995ஆம் ஆண்டு நான் பயிலுனராக இணைந்த போது திரு. சிவச்சந்திரதேவன் Sir அவர்களுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, சிறந்த ஓர் ஆசானாக, நல்லதொரு வழிகாட்டியாக இருந்த Sir அவர்களிடம் நான் பெற்றுக் கொண்ட பயிற்சியே எனது வாழ்க்கையின் அரச தொழில் பயணத்திற்கான அச்சாணியாக இருந்தது என்றால் அது மிகையல்ல. கழகத்தில் இவரிடமிருந்து பெற்றுக்கொண்ட சுருக்கெழுத்துப் பயிற்சியின் மூலமாகவே 2001ஆம் ஆண்டில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கொழும்பில் எனக்கு சுருக்கெழுத்தாளர் பதவி கிடைத்தது. அன்றிலிருந்து இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றுவது வரை Sir வழங்கிய தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகளானது எனது அலுவலகக் கடமைகளை வினைத்திறனுடன் ஆற்றுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. பலதடவை எமது அலுவலகப் பணியுடன் தொடர்பான ஆலோசனைகளைக்கூட நாம் அவரிடமிருந்து தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ பெற்றுக் கொண்டுள்ளோம்.
Sir அவர்கள் கற்பித்தலில் மட்டுமன்றி தோழமையுடன் பழகுவதிலும் முன்னுதாரணமான ஒரு மனிதர்
ஆவார். நாங்கள் கழகத்தில் பயிலுனர்களாக இருந்தபோது சுற்றுலாக்கள் ஒழுங்கு செய்து எம்மையெல்லாம்
அழைத்துச் சென்றிருக்கின்றார். இவ்வாறு கல்வி தவிர்ந்த மாணவர் நலனோம்பு நடவடிக்கைகளிலும் Sir அவர்கள் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர். இதனாலேயே கழகத்திலிருந்து வெளியேறிய
பின்னரும் சிவச்சந்திரதேவன் Sir அவர்களின் மாணவர்கள் அவருடன் தொடர்பிலிருந்தனர். அவ்வாறே Sir உடன் எனது நட்பும் தொடர்ந்தது. Sir எம்மை எங்கு நேரில் கண்டாலும் கதைக்காமல், நலம் விசாரிக்காமல் சென்றதில்லை. இவ்வருட ஆரம்பத்தில்கூட அவர் எமது பிரதேச செயலகத்திற்கு
வந்த போது எம்மிடம் வழமை போல் மிகவும் அன்புடனும் உற்சாகமாகவும் பேசினார். இவ்வாறிருக்க, Sir அவர்களின் மறைவுச் செய்தி எம்மையெல்லாம் மிகவும்
வேதனைக் குள்ளாக்கியது. பண்பும், மனித நேயமும் மிக்க நல்லதொரு மனிதரான சிவச்சந்திரதேவன் Sir இன்று இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தாலும் அவரிடம் பயிற்சிபெற்ற என்னைப் போன்ற
பலர் இன்று அரச சேவையிலும், தனியார் சேவையிலும் அவர் பெயர் சொல்லும் மாணவர்களாக இருக்கின்றார்கள், என்றும் இருப்பார்கள். தன்னுடைய மாணவர்களிடையே வினைத்திறன் மிக்க தொழிற்கல்வி ஆளுமையை
மட்டுமன்றி தனிப்பட்ட நலன்களினையும் ஆலோசித்து சிறந்த தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவதில்
வல்லவரான இவ் ஆசானுக்கு அவருடைய மாணவர்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
திரு.சிவச்சந்திரதேவன் Sir அவர்களின் தூய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி
கமலநாதன் தவமலர்
முகாமைத்துவ
சேவை உத்தியோகத்தர் 1,
பிரதேச
செயலகம், கரவெட்டி.
Comments
Post a Comment