Skip to main content

என் நினைவில் நிற்கும் அன்புள்ளம்! - எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி


சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமடைந்தோம். நீண்டகாலம் எமது குடும்ப நண்பராக இருந்துவந்த ஓர் அன்பரை இழந்திருக்கிறோம். எமது தந்தையாருடன் மக்கள் வங்கியில் சமகாலத்தில் பணியாற்றியமை காரணமாக அவர் எமக்கு அறிமுகமாகியிருந்தார். பின்னர் கொழும்பு, சொய்சாபுர மாடிக் குடியிருப்புத் தொகுதியில் எனது சகோதரரின் வீட்டுக்கு மேலுள்ள வீட்டில் வசித்ததன் காரணமாக அவரும் அவர்தம் குடும்பத்தினரும் எமக்கு மிகவும் நெருக்கமானார்கள்.  எனது சகோதரரின் நிச்சயதார்த்தத்திற்காக சிவச்சந்திரதேவன் ஐயாவும் அவரின் பாரியாரும் எங்களுடன் ஒன்றாக களுத்துறை வந்த நினைவுகளை இந்நாளில் மீட்டிப் பார்க்கிறேன்.  அதுமட்டுமன்றி, கொழும்பில் நடைபெற்ற திருமண உபசார நிகழ்விலும் ஐயாவும் துணைவியாரும் ஒரு முழுநாள் பொழுதையே எங்களுடன் கழித்து உறவாடி எம்மை மகிழ்வித்ததை எண்ணும்போது நெஞ்சம் கனக்கிறது. 

கடந்த வருடம் நான் கொழும்பு வந்திருந்தபோது சிவச்சந்திரதேவன் ஐயா ஒரு பழைய புகைப்படத்துடன் எமது வீட்டிற்குத் திடீரென வந்தார். கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் எனது தந்தையாரும் தானும் மக்கள் வங்கி ஊழியர்களுடன் எடுத்திருந்த புகைப்படமே அது. அப்படத்தைக் காட்டி தம் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார். அவர் தனது நண்பர்களிடமும் அயலவர்களிடமும் எவ்வளவு தூரம் அன்பு பாராட்டுகிறார் என்பதை அவரின் இச்செயற்பாட்டின் மூலம் அறிய முடிகிறது.

எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவதிலும் சகஜமாகப் பழகுவதிலும் அவருக்கு நிகர் அவரே தான். மிகவும் அமைதியான மனிதர், ஆடம்பர வாழ்வுக்கு அடிபணியாதவர், எளிமையே அவரது சுபாவம்.

கொழும்பில் எமது தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். அடிக்கடி வீடு வந்து நலம் விசாரித்து செல்பவர். உதவி செய்யும் மனப்பான்மை அன்னாருடன் கூடப் பயணிக்கும் ஒரு பண்பு என்பதனை அவருடன் பழகிய நாட்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.

அன்னாரின் திடீர் மறைவு அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் பெரிதும் பாதித்திருக்கிறது. அவர்களுக்கு ஆறுதல் கூற எம்மிடம் வார்த்தைகள் இல்லை. அன்னாரின் மறைவினால் வாடி இருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரக்கங்களை எமது குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் சமர்ப்பித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனையையும் அஞ்சலியையும் காணிக்கையாக்குகிறேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி M .A., M.Ed.,
ஆசிரியர் ‘காந்தீயம்”
யாழ்ப்பாணம்.
செல்பேசி: 0776624377

Comments