Skip to main content

சீர்மையாளனுக்கு ஓர் அஞ்சலி - முத்துச்சாமி ஆசிரியர் குடும்பம்

வடமராட்சி, புலோலி பகுதியில் 1950.12.17அன்று வயிரவிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளுக்கு அருமைப் புத்திரனாக வந்துதித்தார். சிவமாகிய சந்திரன் சிவச்சந்திரதேவன் கல்வி, கேள்விகளால் சிறப்புற்று விளங்கிய அமரர். பெற்றோர் பெரிதும் உவந்த மகனாக இருந்து பெற்றோர், சகோதரர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். வாழ்வு என்பது வளம்பெற வாழ்வது மட்டுமல்ல குடும்பத்திடையே அன்பு, பண்பு, நற்குணம், நற்செய்கை என்பவற்றோடு சமூக சேவையும் தெய்வீகப் பணியும் சேர்த்து வாழ்வதே ஆகும். இதற்கு அமைய வாழ்ந்தவர் அமரர் சிவச்சந்திரதேவன் என்பது மிகையாகாது.

இன்று கம்பியூட்டர் யுகமாகக் காணப்படுகின்றது. ஆனால் 40 வருடங்களுக்கு முன் தட்டச்சும் சுருக்கெழுத்தும் தெரிந்தால் தான் அரச தனியார் துறைகளில் வேலைகளைப் பெறமுடிந்தது. இதனால் .பொ..(சா/த, உ/த) படித்த மாணவர்கள் பருத்தித்துறையை நோக்கிப் படையெடுத்து இவ்விரு கலைகளையும் பயில்வதில் ஆர்வம் காட்டினார்கள். மாணவர்களுக்கு இவ்விரு கலைகளைப் போதிக்கும் குருவாகவும் மக்கள் வங்கியிலும் கடமையாற்றி வந்துள்ளார். இவரிடம் நீண்டதொரு மாணவர் பரம்பரை  1980களில் உருவாகியிருந்தது.

சிறந்த ஒரு சமூகசேவையாளன்,  புரிந்துணர்வுள்ள குடும்பத் தலைவன், பொறுப்புவாய்ந்த ஒரு தந்தை, கடமை உணர்வுள்ள ஓர் அரச சேவையாளன், நெறிபிறழாத சீர்மையாளன், சுற்றம் போற்றும் ஆண்மகன்.

"அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

என வாழ்ந்து பலராலும் போற்றப்பட்டவர். 1980களில் இவரைத் தெரியாத மாணவர் சமூகம் இல்லையெனலாம்.

1980களில் குருவாக சந்தித்த அமரர் சிவச்சந்திரதேவனை 2012ஆம் ஆண்டின்பின் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வாசலில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின்பின் சந்தித்தேன். நீங்கள் சிவச்சந்திரதேவன் தானா என உறுதி செய்தபின் பிள்ளைகள் இந்துக் கல்லூரியில் படிக்கின்றார்கள் என சிறிதுநேரம் அளவளாவினார். பழைய நினைவுகளை மீட்டினார். எனது சகோதரர்கள் தனது மாணவர்கள் என்று கூறிப் பெருமைப்பட்டார். பாடசாலைக்கு பெற்றோர் சந்திப் புக்கு வரும் நேரங்களில் தனது மகன்மாரின் கல்வி நடவடிக்கைகள் பற்றி உரையாடுவார். அமரர் சிவச்சந்திரதேவனின் மனைவியார் எனது கிராமத்திற்கு அடுத்த கிராமமான உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். அவர்,  நான்,  எனது சகோதரிகள் யாவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள்.

அமரர் சிவச்சந்திரதேவனின் கனவு, தனது பிள்ளைகள் கல்வியால் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் புகழோடு இருக்க வேண்டும் என்பதாகும். தான் கற்றகல்வி தனக்கு வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுத்தந்தது, பல சிறப்புக்களைத் தந்தது என்பதை அடிக்கடி கூறிக்கொள்வார்.

"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து

அவர் கனவு நனவாகப் பிள்ளைகள் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.

23.05.2020அன்று இரவு 8.00 மணியளவில் தொலைபேசி அழைப்பு சிவச்சந்திரதேவன் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கொண்டுவந்தது. இரவு நித்திரைக்குச் சென்றவர் காலையில் எழும்ப வில்லை. செய்தி உண்மைதான் என உறுதிசெய்யப்பட்டது. திருமதி சிவச்சந்திரதேவனின் சகோதரிமூலம் கனடாவிற்கும் செய்தி பறந்தது. சகோதரிகளும் குருவை இழந்துவிட்டோம் என்று துயருற்றனர். மனிதநேயமிக்க ஒரு மனிதரை இழந்துவிட்டோம் என்ற சோகம்  அனைவரையும் வாட்டியது.

மண்ணில் பிறந்த யாவரும் என்றோ ஒரு நாள் இறப்பது திண்ணம்.

"கட்டியணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழங்கி அழுவார் மயானம் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

நாம் பிறக்கும்போது எதையும் கொண்டுவந்ததில்லை. அவ்வாறே இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை.

பிறக்கும்பொழுது கொண்டுவந்ததில்லை மண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குழாமருங் கென்சொல்வேன் கச்சி ஏகம்பனே

கருவினில் தோன்றும் அத்தனை உயிர்களின் உடல்களும் ஒருநாள் பூமியிலிருந்து விடைபெற்றுத்தான் ஆகவேண்டும் என்பது இறைவன் நியதிஅன்பாலும் நினைவாலும் சுமக்கும் எண்ணங்கள் தான் எம்மை இதயம் கலங்கவைக்கின்றன. அப்படி ஒருவருடைய வாழ்நாள் அன்பும் உறவும் எம்மைப் பந்தித்து அவர் பிரியும்போது துடியாய் துடிக்க வைக்கின்றது.

ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும் மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தில்,

ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே

என சிவன்பாதமடைந்த சிவச்சந்திரதேவனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

அமரர் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக் கின்றோம்.

முத்துச்சாமி ஆசிரியர் குடும்பம், வல்வெட்டி
திருமதி கு. சிவசுப்பிரமணியம்
ஆசிரியர், இந்துக் கல்லூரி, கொழும்பு 04

Comments