Skip to main content

செயல் வீரன் - கந்தையா கனகரத்தினம்

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்த புலோலி, புற்றளைப்  பகுதியில் 1950 மார்கழி 17ஆம் நாள் கால்பதித்த சிவச்சந்திரதேவன் அவர்கள், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் என்ற பெரியல் அமைந்த நிறுவனத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து என்னுடன் சிறந்த நட்பைப் பேணி வந்தார்.

கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி, தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் திருமதி திருத்தேவி ஏகாந்தன் அவர்கள் திரு. சிவச்சந்திரதேவன் 23.05.2020 அன்று காலமாகிவிட்டார் என்ற செய்தியைத் தெரிவித்தபோது அதிர்ச்சியும் ஆறாத் துயருமுற்றேன். அமரராகிவிட்ட சிவச்சந்திர தேவன் அவர்கள் மனிதநேயம் மிக்கவர், சிறந்த சமூகசேவையாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர்.

அன்னாரின் பிரிவு குறித்து அன்னார் இச்சமூகத்திற்கு ஆற்றிய சேவையை நினைவுகூர வேண்டியது காலத்தின் தேவையாகும். இன்று ஒவ்வோர் அலுவலகத்தின் ஒவ்வோர் ஊழியரிடமும் தனியாரிடமும் கணினி உள்ள நிலையில், அன்று கணினி என்ற ஒரு வார்த்தையே தெரியாதிருந்த - அறிந்திராத காலம். அன்று அரச அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் ஓரிரு தனியாரிடமும் தட்டச்சுக் கருவிகள் காணப்பட்டன. அரச அலுவலகங்களில் கூட ஒன்று அல்லது இரண்டு தட்டச்சு இயந்திரங்களே இருந்தன.  திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள் தனது 28ஆவது வயதில் 1978இல் மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளராகச் சேர்ந்து, 45ஆவது வயதில் யாழ்ப்பாணம் மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தில் அந்தரங்கச் செயலாளராகப் பதவியுயர்வு பெற்று கடமையாற்றி, 2006இல் ஓய்வு பெற்றவர்.

நாட்டில் சுருக்கெழுத்தாளர்களுக்கும் தட்டெழுத்தாளர்களுக்கும் நிலவிய பற்றாக்குறை காரணமாகவும் வடமராட்சிப் பகுதி சிறார்களை தட்டச்சு - சுருக்கெழுத்துத் துறையில் ஊக்குவிக்கும் நோக்குடனும் திரு. சிவச்சந்திரதேவன் தனக்கிருந்த தட்டச்சு - சுருக்கெழுத்துப் புலமை, நுண்ணறிவு, சேவை அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வடமராட்சிப் பிரதேசத்தில் வதிரி சந்திக்கு அருகாமையில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் என்ற பெயரில் ஒரு பயிற்சி நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  இந்நிறுவனத்தின் ஆரம்ப வைபவம் யாழ். அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் 01.10.1985இல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திரு. சிவச்சந்திரதேவன் இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மட்டுமன்றி, இறுதிவரை அதன் இயக்குநராகவும் திகழ்ந்தார்.

திரு. சிவச்சந்திரதேவன் இந்நிறுவனம் சட்ட அந்தஸ்துள்ள ஒரு நிறுவனமாக இயங்கவேண்டுமென்ற நோக்குடன் கொழும்பு தொழில் கல்வி ஆணைக்குழுவின் மூன்றாம் நிலைக் கல்விப் பிரிவிலும், கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவைப் பகுதியிலும் தனித்தனி பதிவு செய்துள்ளார். இப்பயிற்சி நிறுவனத்திற்கென கழக கீதம் ஒன்றை "கோப்பாய் சிவம்" என அழைக்கப்படும் திரு.ப.சிவச்சந்திரசர்மா அவர்கள் மூலம் உருவாக்கியுள்ளார். இக்கழகத்தின் கடிதத் தலைப்பில் கழகத்திற்கென விசேட சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வருடாந்தம் பல தட்டெழுத்தாளர்களையும் சுருக்கெழுத்தாளர்களையும் உருவாக்கியது. இதற்கு அன்னாரின் மனைவியும் உறுதுணையாக விளங்கினார். இன்று நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அரச திணைக்களங்களில் சுருக்கெழுத்தாளர், தட்டெழுத்தாளர்களாகக் கடமையாற்றி பொது முகாமைத்துவ உதவியாளர்களாக உள்ள பலர் இந்நிறுவனத்தில் பயின்று வேலை வாய்ப்புப் பெற்றவர்களே!

"தோன்றின் புகழோடு தோன்றுக் அது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"

என்ற குறளுக்கு அமைய அன்னார் வாழ்ந்து காட்டியவர்.

இந்நிறுவனத்தின் எல்லைப் பரப்பாக வடமாகாணம் உள்ள போதும் வெளிமாவட்டத்தவரும் இங்கு வந்து தங்கியிருந்து இப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிபெற்று வெளியேறினர். இந் நிறுவனத்தின் பதவிவழிக் காப்பாளர்களாக வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச செயலரும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலரும் பதவி வகிக்கின்றனர்.

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்"

என்ற குறளுக்கு அமைய தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய அமரரின் ஆத்மா சாந்தியடையவும் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் மனைவிஇ பிள்ளைகள், குடும்பத்தினர் ஆறுதலடையவும் எல்லாம் வல்ல செல்வச் சந்நிதியானின் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

திரு.கந்தையா கனகரத்தினம்
ஓய்வுநிலை பிரதேச செயலர்,
'மணிமகால்', மகாத்மா வீதி, நெல்லியடி,
கரவெட்டி.

Comments