Skip to main content

மனிதருள் மாணிக்கம்! - சஞ்ஜீவ் ஹோபிதா

"செய்யும் தொழிலே தெய்வம் அதன்கண் அவரவர் திறமையே செல்வம்என்பதற்கேற்ப தனது தொழிலை மனவிருப்பத்தோடு ஏற்று, அதில் வெற்றியும் கண்ட மதிப்பிற்குரிய அமரர் திரு.சிவச்சந்திரதேவன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன், அவரைப் பற்றிய வரலாற்றில் சிலவற்றை நினைவுகூர விரும்புகின்றேன்.

அமரர் திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள் வடமராட்சி வதிரிப் பகுதியில் அமைந்துள்ள சுருக்கெழுத்துக் கழகத்தின் ஸ்தாபகராகவும் அதன் வளர்ச்சிக்கு இரவு பகல் பாராது அயராது அரும்பாடுபட்டு அதனை மிகவும் கட்டுக்கோப்புடனும் கண்ணியத்துடனும் பேணிவந்தார்.  அதன் பயனாக பலநூறு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வு ஒளிமயமாக வழிகாட்டியவர் என்ற பெருமை அமரர் திரு.சிவச்சந்திரதேவன் அவர்களையே சாரும். அன்னாரின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளிலும் உறுதுணையாக நின்றவர் அவரது அன்புக்குரிய துணைவி திருமதி கிருஷ்ணகுமாரி என்பதும் பெருமைக்குரிய ஒன்றே. 

அன்னாரின் கழக ஒளிவிளக்கின் மூலம் ஒளியைப்பெற்று பயனடைந்தவர்களில் நானும் ஒருவராக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.  2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை வங்கியில் ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் தேவையேற்பட்ட போது வடமராட்சியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா என அனைத்து மாவட்டங்களிலும் சுருக்கெழுத்துக் கழகத்தினூடகOut Source Employees என அடையாளப்படுத்தப்பட்டு பலநூறு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தந்தவர் திரு.சிவச்சந்திரதேவன் அவர்கள்.

அந்தவகையில், ஆங்கிலச் சுருக்கெழுத்தாளராக இலங்கை வங்கி, நெல்லியடிக் கிளையில் நியமனம் பெற்றேன்.  அதுமட்டுமல்லாது நாம் வேலையில் சேர்ந்து சில காலங்களிலேயே எமது தற்காலிக நியமனங்களை நிரந்தர நியமனங்களாக மாற்றுவதற்கு அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்ட உத்தமர். 

அன்னாரது சேவையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றோர் பல அரச, தனியார் நிறுவனங்களில் கடமைபுரிகின்றனர். அந்தப் பெருமையும் அவரையே சாரும். அன்னாரது முயற்சி பலரது வாழ்க்கையில் ஒளியேற்றிவைத்தது என்ற உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தொழில் விடயங்கள் மட்டுமன்றி குடும்பத்திற்கு நல்லதொரு தலைவனாகவும் விளங்கிய அமரர், தனக்குரிய ஆலய வழிபாட்டு விடயங்களிலும் மிகவும் அக்கறையுடனும் பக்திசிரத்தையுடனும் செயற்பட்டு வந்தார். 

அன்னாரது இழப்பு அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும்.  அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பண்டகைப் பிள்ளையார் துணைபுரிவாராக

திருமதி சஞ்ஜீவ் ஹோபிதா
வாசிகசாலையடி, உடுப்பிட்டி
தற்பொழுது லண்டன்

Comments