2020.05.23ம் திகதி
காலை தேவன் சேர் காலமான செய்தி
எனது சகோதரி மூலம் அறிந்து கொண்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஒருகணம் நிலைகுலைந்தே போய்விட்டேன். மீண்டும் சுதாரித்துக் கொண்டு, இச்செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா? என்ற மன எண்ணத்துடன்
மீண்டும் சகோதரிக்கு தொலைபேசி எடுத்து
விபரங்களைக் கேட்டறிந்து உறுதிப்படுத்திக்கொண்டு எனது ஆசிரியை
மாலினி அவர்களுக்கும் தேவன்
சேருடன் கழகப் பணிகளில் நீண்டகாலமாகப் பயணித்த குலசிங்கம் சேருக்கும் தகவலைப் பகிர்ந்து கொண்டேன்.
எம்மைவிட்டு
நிரந்தரமாகப் பிரிந்து சென்ற
தேவன் சேர் அவர்கள்
மக்கள் வங்கியில் உயர்பதவி வகித்ததோடு
மட்டும் நின்று விடாமல் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டும், குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு செய்யும் தொழிற்கல்வி உதவியானது நிலைபேறுடையதாக நிலைத்திருக்கும் எனக்கருதிய மனஉந்துதலால் வடமராட்சிச் சுருக்கெழுத்துக் கழகம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, மூன்றாம்நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவும் செய்து, கொடி, கீதத்துடன் கூடிய சமூக நிறுவனம் என்ற
அந்தஸ்துடன் பெருவிருட்சமாக வளர்த்தெடுத்தார். கலையாகப்
பேணப்பட்ட சுருக்கெழுத்தையும் தட்டச்சையும் தொழில்முறைக் கல்வியாக மாற்றிய பெருமை தேவன் சேர் அவர்களையே
சாரும்.
தேவன் சேர் அவர்கள் வங்கித்துறையில்
பணியாற்றிய காலப் பகுதிகளில் தனக்குக் கிடைத்த உயரதிகாரிகளின் தொடர்புகள், வாய்ப்புக்கள்
யாவையுமே இளைஞர் யுவதிகளுக்கு உதவி செய்வதற்கே
பயன்படுத்திக் கொண்ட, பலருக்கு வழிகாட்டிய பெருமகன் ஆவார் . இதனால் தான் கழகத்தில் கல்வி பயின்ற இளைஞர் யுவதிகள் பலர் இன்று நாட்டின்
பெரும்பாகங்களிலுமுள்ள அரச திணைக்களங்கள், வங்கிகள், நீதிமன்றங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பதுடன், பலர், மேலும் தம்மை
வளர்த்துக் கொண்டு உயர்பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இன்றைய
காலப்பகுதியில் பல தொழிற்கல்வி நிலையங்கள்
தோன்றிவிட்டாலும் தேவன் சேர் அவர்கள்
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை ஆரம்பித்த காலப்பகுதியானது நாட்டின் அசாதாரண காலப்பகுதியாகும். அக்காலப்பகுதியில் தொழிற்கல்வி நிலையங்கள் யாழ். மாவட்டத்தில் மிகச் சொற்பமானவையே காணப்பட்டன. எனவே காலமறிந்து உருவான
கழகத்தின் ஆரம்பம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்துப் போற்றப்படவேண்டிய காரியமாகும்.
தேவன் சேர் அவர்கள் சமூகப்
பணிகளில் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கினார். கழகத்தில் கல்வி பயிலும் இளைஞர் யுவதிகளுக்கும் ஆன்மீக ஈடுபாட்டை விருத்திசெய்யும் நோக்குடன் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாளன்று அனைவரும் கூட்டாக இணைந்து தில்லையம்பலப் பிள்ளையாருக்கு பொங்கல் வழிபாடுகள் செய்வித்து இறையானந்தத்தையும் ஊட்டி மகிழ்ந்தர் .
இவ்வாறு
இன்று பலரின் வாழ்வில்
ஒளியேற்றிய தீபத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. என்றென்றும் சுறுசுறுப்புடன் பணிசெய்தவரை நாம் இழந்து தவிக்கின்றோம். "பிறப்புண்டேல் இறப்புமுண்டு” என்பதனை உணர்ந்து, தேவன் சேர் அவர்கள் அவ்வப்
பருவத்தில் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! நம் எல்லோரையும் வாழ
வைக்கும்‚
என்றும்
மறவாத,
கழக
மாணவன்
வ.மகீபன்
Comments
Post a Comment