இறப்பு, பிறப்பு என்பன இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றாகும். மனிதனாகப் பிறந்தவருக்கு ஆறறிவு உள்ளது என்பார்கள். ஆறறிவு என்பது ஜீவராசிகளுக்கு இல்லாத ஒன்றாகும். இந்த விஷேட சக்தி மற்றைய ஜீவராசிகளின் வாழ்க்கை முறை களிலும் வேறுபட்டதாகும். நாம் எமது வாழ்வில் ஒருவரைச் சந்தித்து சில காலம் பிரிந்திருந்து மீண்டும் சந்திக்க நேர்கையில் எம்மை அறியாமலேயே ஒருவித உணர்வு தோன்றுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் நான் சந்தித்த ஒரு முக்கியமான நண்பர் திரு. சிவசந்திரதேவன் ஆவார். இவர் கிழக்கு மாகாணத்திலே கல்முனை மாநகரில் மக்கள் வங்கியில் பணியாற்றிய வேளையில் அறிமுகம் ஆனார். இவர் மிகுந்த சாந்த குணமும் இளமைத் துடிப்பும் நிறைந்தவர். அங்கு ஆலயத்திற்கு வரும் வழக்கம் மட்டுமல்லாது, எமது இல்லத்திற்கும் வந்து அனைவருடனும் பழகி எம்மில் ஒருவரானார். அத்துடன் எனக்கு ஆங்கிலமொழிப் பயிற்சி, சுருக்கெழுத்து ஆகியவற்றைக் கற்பித்த ஆசிரியரும் ஆவார். காலத்தின் மாற்றத்தினால் அவரிடமிருந்து விலகி இருந்து மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. இரத்மலானை மற்றும் வெள்ளவத்தையில் வசித்து வந்த காலங்களில் அவருக்கு வேண்டிய உதவிகளை நானும் செய்யத் தவறியதில்லை. இத்தகைய காலகட்டத்தில் அவரின் துயரச் செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. இறப்புக்கு வயதில்லை. ஆறிலும் வரும், நூறிலும் வரும். இத்தகைய தருணம் எவராலும் தாங்கிக்கொள்ளமுடியாத ஒன்றாகும். குடும்பத் தலைவனை இழந்து துயரத்தில் வாடும் அனைவருக்கும் இறைவன் மன அமைதியையும் சாந்தியையும் அளிக்கவேண்டிப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பிரம்மஸ்ரீ ர. நாகராஜா குருக்கள்
புதிய கதிரேசன் கோயில்,
பம்பலப்பிட்டி.
Comments
Post a Comment