Skip to main content

உன்னத சேவையாளர்! - சாந்தினி செல்வதாஸ்

சேவையை அரும்பணியாகக் கொண்டு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அமரர் . சிவச்சந்திரதேவன் பற்றி சில அனுபவங்கள்:

தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்ட கால நோக்கில் நன்மை கிடைக்க வேண்டுமென அரும்பணியாற்றிய சேவையாளன். வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் பணிபுரிந்த அமரர், அக்காலத்தில் மக்கள் வங்கியில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளராகவும் பணிபுரிந்தார். அக்காலத்தில் வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் சேவை அடிப்படையில் அப்பிரதேசத்தில் பாடசாலையைவிட்டு விலகிய இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிகள் 1983 1984ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டன. இச்சேவையை ஏனைய பிரதேச இளைஞர் யுவதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்காலத்தில் கரவெட்டி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு.. ஐயாத்துரை அவர்களின் உதவியுடன் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரித்தார். இதற்காக அப்பிரதேசங்களில் இளைஞர் யுவதிகளை உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் ஊடாக தெரிவுசெய்து அதற்கான இடவசதிகளையும் பெற்று உதவி அரசாங்க அதிபரின் உதவியுடனும்  யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபரின் உதவியுடனும் யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் நிறுவி 6 மாதங்கள் கொண்ட பயிற்சித் திட்டமாக சிறப்பாக நடாத்தியவர்.

இப்பயிற்சித் திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதால் தொடர்ந்து சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்தி சேவை அடிப்படையில் நடாத்த வல்வெட்டித் துறை மக்கள் வங்கி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஒத்துழைப்புடன் "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்என்ற பெயரில் 01.10.1985 அன்று நடமாடும் பயிற்சி நிலையமாக அல்வாயில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் இயங்கி, 1991ஆம் ஆண்டு வதிரிச் சந்திக்கு அருகாமையில் உடுப்பிட்டி வீதியில் அமைந்த தனியார் வீடொன்றில் போர்க்கால சூழ்நிலையிலும் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

பல இளைஞர் யுவதிகளுக்கு அந்தக் காலத்தில் சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டெழுத்தாளர் வேலைவாய்ப்பினைப்பெற இவரும் பிரதான கர்த்தாவாக இருந்தவராவார். சில காலங்களில் இடப் பிரச்சினை, போர்க்கால சூழ்நிலை காரணமாக  உதவி அரசாங்க அதிபர் திரு..ஐயாத்துரை அவர்களின் உதவியும் சேவையும் கிடைத்ததால் உதவி அரசாங்க அதிபர் பணிமனையிலேயே இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து செயற்படுத்தி வந்தார்.

இவ்வாறான பணியினைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்ததால் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இன்றும் நீதிமன்றங்களில்கூட தட்டெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அவரின் சேவை எவ்வளவு மகத்தானது என்பது புரியும்.

இக்கழகத்தை சிறப்பாக வழிநடத்தி தொடர்ந்து செயற்படுத்தி வந்தமையால், இக்கழகமானது  01.04.2015 அன்று  அதனது  30ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அதில் சிறப்பாக சேவைசெய்த பலர் கௌரவிக்கப்பட்டதுடன், அன்னாரின் சேவையும் கௌரவிக்கப்பட்டது. அத்தருணம் எனது தந்தையாரான திரு.. ஐயாத்துரை அவர்கள் விழாவில் கலந்துகொள்ள முடியாதிருந்தபோதிலும் அவருக்கான கௌரவத்தை வீடுதேடிவந்து கௌரவித்துச் சென்றமை இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இச்சேவையானது வடமராட்சி பிரதேசம் எங்கும் என்றும் வியாபித்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இவர் தனது பிள்ளைகளின் கல்விக்காக கொழும்பில் வசித்து வந்தாலும் அதனுடன் தொடர்பு இருந்துகொண்டே வந்தது. இத்தகைய சிறப்புடைய சேவையாளரை வடமராட்சி மண் இழந்து நிற்கின்றது. அவரின் சேவையைப் பெற்ற மாணவிகளில் ஒருவர் என்ற ரீதியிலும் எனது தந்தையுடன் நெருங்கிய சேவையாளராகத் தொடர்புபட்டிருந்தார் என்ற வகையிலும் இதை எழுதுவதில் பெருமைப்படுகின்றேன்.

இவரின் இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த துன்பம் அடைந்தேன். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

திருமதி சாந்தினி செல்வதாஸ்
ஆசிரியர்,
கொ/இந்துக் கல்லூரி.
(திரு.. ஐயாத்துரை குடும்பம்)


Comments