Skip to main content

நீத்தார் நினைவுப் பகிர்வு - பொன்னையா அரவிந்தன்

நீத்தார் நினைவுப் பகிர்வு

ஈழமணித் திருநாட்டில் வடமராட்சியின் புலோலி, புற்றளையூர் மண் பெற்றெடுத்த நல்முத்துக்களுள் ஒன்றாக அமரர் க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் அறியப்படுகிறார். அவர் ஒரு வங்கி உத்தியோகத்தர் எனப் பொதுவாக அனைவராலும் அறியப் பட்டாலும் அவருள் இறைவன் சிருஷ்டித்த மற்றொரு விடயம், அவரின் சுருக்கெழுத்துக் கலையின் ஆர்வம் என்பதனை அவரிடம் சுருக்கெழுத்துக்கலை பயின்றவர்கள் சான்றிடுவர்.

இதுவே அவரை எமது பாரம்பரிய மண்ணில் சுருக்கெழுத்துக் கலையின் பிதாமகனாக சிறக்க வைத்துள்ளமை நாம் அனைவரும் பின்னாளில் அறிந்த வரலாறாகும். அன்னாரின் கைவண்ணத்தில் இளைய தலைமுறையினரின் தொழில்வாய்ப்பை நோக்காகக் கொண்டு 1985ஆம் ஆண்டில் உதயமாகியதுதான் "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்" ஆகும்.

இக்கழகம் மூலமாக சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்ற பலர் இலங்கைத் தீவின் பல்வேறு இடங்களில் சுருக்கெழுத்துப் பணிசெய்து வருவதனைக் காணமுடிகிறது. எனினும் இன்றைய கணினித் தொழில் நுட்பத்தின் வருகை இவரின் சுருக்கெழுத்துக்கலைத் தொண்டுப் பணியை இம்மண்ணில் இருந்து ஓரம்கட்டியுள்ளது.

"இதற்கு அப்பால் அமரர் க.வ.சிவச்சந்திரதேவன் எழுதிய சுருக்கெழுத்து தட்டச்சுத் தொழில்நுட்பக்கலை வரலாறு (2001)”இ ‘தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி நூல் பகுதி-01 (1991)’, "விசைப்பலகைப் பயிற்சிகள் போன்ற மொழியியல் சார்ந்த படைப்பு நூல்கள் மூலமாக அவரை சிறந்த ஒரு படைப்பாளியாகவும் அறியமுடிகிறது.

அமரர் க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் இயல்பாக வாசிப்பு ஆர்வம் உள்ளவராகக் காணப்படுகிறார். தான் வாசித்த நூல்களை மற்றையவர்களும் வாசித்துப் பயன்பெறவேண்டும் என்ற சமூக நோக்கின் வெளிப்பாடாக எமது விக்னேஸ்வரக் கல்லூரியின் நூலக அபிவிருத்திக்கு பல்வேறு நூல்களைப் பெற்றுக்கொள்ள உதவியுள்ளமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சிறந்த சமூகப்பணியாளராகவும், ஆன்மீகப் பணியாளராகவும், ஆளுமை நிறைந்த ஒருவராகவும் எம்மண்ணில் திகழ்ந்த உயர்திரு. க.வ.சிவசந்திரதேவன் அவர்கள் 23.05.2020 அன்று இறைபதம் அடைந்தமை அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, எமது வடமராட்சி மண்ணில் உள்ளவர்களையும் அயலவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாததொன்றாகும். அவரின் ஆத்மா ஆடவல்லோனின் பாதமலர்களை அடைந்து மாதம் ஒன்று ஆகிறது. அவர் பேரின்பப் பேறு பெறப் பிரார்த்திப் போமாக

திரு. பொன்னையா அரவிந்தன்
அதிபர்,
யா/விக்னேஸ்வாக் கல்லூரி,
கரவெட்டி.

Comments