நட்பொன்று
நெடுநாள் தொடர்வது சிறப்பு. தசாப்தங்கள் தாண்டி தொடருமெனில் அது தெய்வங்கள் நமக்கு
வரமெனத் தரும் பிறிதோர் உறவு. சுஹநிதன் எனக்கு அவ்வாறானவனே. என்னுடைய நண்பன் என்பதைக் கடந்து குடும்பத்தின் ஓர் இரண்டாம் நிலை
உறுப்பினன் என்றே ஆகிவிட்டான். வீட்டுக்கு வரும்போதெல்லாம் எனக்கே உரியதான அத்துணை உரிமைகளுடனும், என்னைவிட இயல்பாக இருந்துவிட்டுப் போகும் அவனை அநேகம் தடவைகள்
எனக்குள்ளே வியந்ததுண்டு. "சுஹன் அப்பா தவறிட்டார்" என்ற செய்தியை கேட்டதுமே
அது பொய்யென ஆகிவிடவேண்டும் என எல்லா நியாயப்படுத்தல்களையும்
மீட்டிக்கொண்டேன். ஆனால் நிதர்சனம் இரக்கமற்றது.
சுஹன்
குடும்பத்தில் எனக்கு மிகவும் அணுக்கமாகத் தெரிபவர் சிவசந்திரதேவன் அப்பாவே. "சுஹன் வீடு" என்ற பேச்சோ, சிந்தனையோ
வரும்போதெல்லாம் அப்பாவின் இருப்பையும், முகத்தையுமே மனம் முதலில் எண்ணிக்கொள்ளும்.
அதற்கேற்றாற் போல் அங்கு செல்லும்
போதும் சுஹன் அப்பாவின் முகமே வரவேற்கும், எந்தைக்கு நிகரி ஸ்தானத்தில் இருந்தபோதிலும் எப்போதும் அவரிடம் இறுக்கத்தை உணரமுடிந்ததே இல்லை. அதேபோல பேசும் போதும், செவிமடுக்கும் போதும் அவரில் குடிக்கொள்ளும் சிரத்தையும், கூர்மையும் என்னை ஆகர்ஷிக்கத் தவறியதும் இல்லை. தந்தை என்ற ஒற்றை பரிமாணத்தோடு
மாத்திரம் நின்றுவிடாமல் அன்னையாகவும், தோழனாகவும் மாறி அனைத்தையும் தன்
கட்டுப்பாட்டில் நிறுத்தும் ஆளுமையின் வசீகரம் அப்பாவில் எப்போதும் மிளிர்ந்து கொண்டே இருக்கும். சுஹன் அம்மாவின் கைகளில் உண்டதைக் காட்டிலும் அப்பாவின் கைகளில் உண்டதே அதிகம். அவைதான் அநேகம் நினைவிலும் நிற்கின்றன. வீட்டையும், பாடசாலையும் கடந்து சுஹன் அப்பாவோடு பொதுவெளிகளில் நிகழும் சந்திப்புகள் குறிப்பானவை. வெள்ளவத்தையில் அவ்வப்போதென தென்படும் போதெல்லாம் சிறியவர்கள் நாங்கள் வந்து பேசவேண்டும் எனக் காத்திராமல் தானாக
முன்வந்து மலர்ந்த முகத்துடன் பேசும் இவரிடம் தற்கால "பெரியவர்கள்" பலரிடம் இல்லாத பெருந்தன்மை மிக்க அன்பு நிரம்பவும் தெரியும்.
சுஹன்
அப்பாவின் இழப்பைக்கேட்டு அவன் வீட்டுக்குச் சென்று
அழுது ஆசுவாசம் அடைந்த பின்பு தான் இழப்பின் பொருள்
என்றால் என்னவென்பது அர்த்தப்பட்டது. அந்தக் கணத்தில் என்றோ செல்போனில் பார்த்த பட்டிமன்றப் பேச்சொன்றின் ஓர் அங்கம் சுருக்கென
மனதைத்தொட்டது. பாரி மகளிர் பாடிச்சென்ற
பாடல் பற்றியதான பேச்சொன்று. சென்ற முழுநிலவில் எம்மோடு தந்தை இருந்தார், எங்கள் கோட்டையும் எங்களுடையதாய் இருந்தது. ஆனால் இந்த முழுநிலவில் எம்
தந்தையும் எம்மோடு இல்லை, எங்கள் கோட்டையையும் எதிரிகள் கவர்ந்து விட்டனர் என்றவாறு செல்லும் "அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்.." பாடல் இழப்பின் வலி எவ்வாறானது என்று
அர்த்தப்படுத்தியது. இன்று இழப்பு தந்துள்ள இன்மையையும், வெறுமையையும் விட இன்று போன்றதொரு
நாளில் என்னோடு இருந்தாரே என்கிற நினைவலைகளே வேதனையை வீரியப் படுத்துகிறது.
கூற்றெனும்
கேள் மனிதத்துக்கு முதற்பேரியற்கை வழங்கிய தலையாய வாழ்த்து. உயிர் கொடுத்தார், உடன்பிறந்தார், உற்றார் உறவினர், நண்பர் என பலரும் கூடியிருக்கும்
மனிதர்களுக்கு கூட சமயங்களில் ஆறுதல்
என யாரும் இல்லாது போகலாம். ஆனால் எப்போது நாம் தளர்ந்து பிடிமானம்
பிறழ்ந்து சரிகிறோமோ அப்போது நம்மை அணைத்துக்கொள்ள என எப்போதும் நமக்கு
அருகாமையில் காத்திருக்கும் பேரன்புக்காரன் கூற்றுவன். அவனன்றி மானுடத்துக்கு நித்தியமான நண்பன் வேறெவனும் இல்லை. ஏதோ ஒரு நிறைவை
அன்று உணர்ந்தமையாலேயே நித்திரையிலேயே கூற்றத்தை தழுவிக் கொண்டார் அப்பா. சென்றொழிந்த காலம் மீழுவதும் இல்லை. அழுது புரள்வதால் மாண்டார் மீழ்வதுமில்லை. அன்றைய இரவில் அமரர் சிவச்சந்திரதேவனார் உணர்ந்த முழுமையையும், நிறைவையும் தென்புலத்தார் நகரிலும் அவர் அடைவதாக என
விண்ணளந்தோனை வேண்டுகிறேன்.
நேஷிகன் கணேசன்
Comments
Post a Comment