1972ஆம் ஆண்டு வவுனியா கூட்டுறவுக் கல்லூரிக்கு 6 மாத காலப் பயிற்சிக்காக நான் சென்ற சமயம் அமரர் வ.சிவச்சந்திரதேவன் பயிற்சிக்காக வந்திருந்தார். அவரும் இன்னும் இருவருடன் வவுனியா இரம்பைக்குளத்தில் ஒரு வீட்டில் ஒன்றாகத் தங்கியிருந்து கல்வி கற்றோம். பழகுவதற்கு இனிமையாகவும் அன்பாகவும் பண்பாகவும் இருந்தார். எதற்கும் முரண்படமாட்டார். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற சமூகநோக்கு அவரிடம் இருந்தது.
பின்பு
இடையிடையே சந்திப்போம். வடமராட்சியில் மாணவர்களுக்கான சுருக்கெழுத்து வகுப்புக்கள்
நடாத்தி, அத்துறையை வளர்ப்பதற்கு உற்சாகமாகச் செயற்படுவதாகவும் மக்கள் வங்கியில் வேலை
செய்வதாகவும் பின்பு அறிந்தேன். நீண்ட காலத்திற்குப் பின் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்
அங்கத்தவராக இணைந்தார். நான் பொதுச் செயலாளராக இருக்கும் காலங்களில் அடிக்கடி என்னைச்
சந்திப்பார். வேண்டிய ஆலோசனைகளை எனக்கு வழங்குவார். சங்க நூலகத்தைப் பாவிக்கவும் அவர் தவறவில்லை. சங்க நிகழ்ச்சிகளில் ஒழுங்காகப் பங்குபற்றுவார். கடந்த வருடம் தமிழ்ச் சங்கத்தின்
வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் சங்கப் பேரவை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
மனித
வாழ்வில் ஆரோக்கியமான தூய உள்ளமும் விடா முயற்சியும் சமூக ஒற்றுமையும் தமது சிந்தனையும்
நம்பிக்கையும் நிரூபணங்களும் தனது சொந்தநலனுக்கு அல்லாது நம் இனத்திற்குப் பயன்படும்
என்ற உறுதியான நம்பிக்கைகொண்ட சிலர், தமது கொள்கையிலிருந்து வழுவாது, தாம் கொண்ட இலட்சியத்திலிருந்து
விலகாது தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த வழியில் அமரர் வ.சிவச்சந்திரதேவன்
வாழ்ந்து, பல எண்ணங்களில் குடிகொண்டு, எம் நெஞ்சங்களில் நிறைந்தவராகத் திகழ்ந்தார்.
அவர் எளிய தன்மையும் சுயநலமற்ற உணர்வும் உன்னத சிந்தனையும் தூய்மையும் உடையவராக, ஆத்மீக
பலமுடையவராக, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதராக விளங்கினார். மக்களுக்குப் பயனுள்ள
மனிதரை நாம் இழந்து நிற்கின்றோம்.
திரு
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
கொழும்புத்
தமிழ்ச் சங்கம்.
Comments
Post a Comment