Skip to main content

தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் பயன்மிக்கதாக்கி வாழ்ந்தவர்

திரு. சிவச்சந்திரதேவனின் 23.05.2020ஆம் திகதிய திடீர் மறைவை மக்கள் வங்கி ஓய்வூநிலை ஊழியரும் எனது நண்பருமாகிய திரு.வரதானந்தன் தனது முகநூலில் "உடுப்பிட்டி நியூஸ்"இன் செய்தியைப் பகிர்ந்த காரணத்தாலேயே 24.05.2020ஆம் திகதி நான் அவூஸ்ரேலியாவில் இருப்பினும் தெரிந்துகொண்டேன். அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் முகமாக திரு. சிவச்சந்திரதேவனின் கைத்தொலைபேசிக்குத் தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் எனது அனுதாபச் செய்தியைக் குடும்பத்தாருக்குத் தெரிவித்து, சில நாட்களின் பின்னர் அவரின் துணைவியாருடன் தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கேட்டறிந்து, துயர் பகிர்ந்துகொண்டேன். 

கொரோனா தொற்று என்னும் காரணத்தால் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, பலர் ஒன்றுகூடுவதற்கான தடை என்பன அமுலில் உள்ள ஒரு காலகட்டத்தில் அவரின் திடீர் உயிரிழப்பு அவர் துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் அளவில்லாத் துயரத்தையும் கஷ்டத்தையும் கொடுத்திருக்கும் என்பதை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு எவ்வித உதவியையும் அவர்களுக்குச் செய்திட முடியவில்லை. 

1975இல் மக்கள் வங்கி கல்முனை கிளையிலே சுருக்கெழுத்தாளராகக் கடமையேற்றிருந்தார். ஆயினும், அவரை நான் மக்கள் வங்கி யாழ். பிராந்திய அலுவலகத்தில் 1998ஆம் ஆண்டு பிராந்திய முகாமையாளராக பதவியேற்றபொழுது, அங்கு அவர் கடமையில் இருந்தபொழுது முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

அவர் என்னைச் சந்தித்ததுமே, "உங்களுக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை இருக்கின்றது" என்ற பீடிகையூடன் தொடங்கி, நானும் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளனாக நியமனம் பெற்றேன். உங்களைப்பற்றி உங்களுக்குத் தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து பயிற்றுவித்த போதனாசிரியர் வகுப்புக்களிலும் கல்லூரி வைபவங்களிலும், "என்னிடம் பயின்ற மாணவன் இளம்பிறைநாதன் மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளனாக நியமனம் பெற்று இன்று உயர்பதவியில் உள்ளார். அதேபோன்று நீங்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்" என சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் கூறுவார் என்று சொல்லி மகிழ்ந்தார். அவ்வாசகங்கள் தனக்கென ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியதாகக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு மனிதர்.

அவர் தான்பெற்ற கல்வியால் தான் மட்டும் பயனடைவது போதாது, அதனால் மற்றவர்களும் பயனடைய வேண்டுமென்று விரும்பி வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை நிறுவி, தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாணவர்களுக்குக் கல்வி அறிவைப் பெறச்செய்து மற்றும் ஆசிரியர்களின் சேவைகளையும் பெற்று மாணவர்கள் பலரை நன்னிலைக்குச் செல்ல வித்திட்டார். அவரிடம் பயின்ற பலர் அரச, வர்த்தக,  வங்கி நிறுவனங்களில் நியமனம் பெற்றார்கள். இது அவரின் சேவை மனப்பாங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

ஒருமுறை கழகத்தின் ஆண்டுவிழாவிற்கு என்னை விருந்தினராக அழைத்து, மாணவர்களுக்கு அறிவூரைகள் வழங்குமாறு கேட்டது மட்டுமன்றி, பரீட்சைகளில் நற்பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கச்செய்து என்னைக் கௌரவித்த நண்பர். அவரின் துணைவியாரும் தட்டெழுத்தாளராகக் கடமையேற்று தற்போது கணினிமயமாக்கியதால் முகாமைத்துவ உதவியாளராக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றுகின்றார். 

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகாரணமாக இளைப்பாறிய பின்னர் குழந்தைகளின் நலன்கருதி கொழும்பிற்கு இடம் பெயர்ந்தார். கொழும்பிற்கு இடம்பெயர்ந்தாலும் தனது கழகத்தை தற்போதைய தேவைக்கேற்ப மாற்றியமைத்து சேவை யினை வழங்குவதிலும் ஈடுபட்டார். DAN TV, வசந்தம் தொலைக்காட்சி, நேத்ரா தொலைக்காட்சிகளின் நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது சேவைகளைப்பற்றித் தெரியப்படுத்தியமையை நான் குறித்த தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தேன். அது அவரின் சேவை மனப்பான்மையை நன்கு தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருந்தது.

குழந்தைகள் கொழும்பு றோயல் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயில்வதனாலும் துணைவியார் பம்பலப்பிட்டியில் கடமையாற்றுவதாலும் அவர்களை அடிக்கடி சந்தித்து சுகநலம் விசாரித்துக்கொள்வோம். அத்தகைய ஒரு நண்பரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியைத் தந்தது. 

"ஆண்டாண்டு தோறும் 
அழுது புரண்டாலும் 
மாண்டார் வருவாரோ!"

என்று ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே அவரின் துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் கூறமுடியூம்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையூம்
தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு ஒப்ப, இந்த மண்ணுலகில் வாழ் வாங்கு வாழ்ந்து பெருமையடைந்த உத்தமர் சிவச்சந்திரதேவன் விண்ணுலகிலும் மேன்மையடைய இறைவன் தன் திருவடி நிழலில் சுகம் கொடுக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

சி.இளம்பிறைநாதன் 
மக்கள் வங்கி வடவலயத்தின் ஓய்வூநிலை உதவி பொது முகாமையாளர்,
28, லோரன்ஸ் வீதி,
கொழும்பு - 00400.
தற்போது: 
18, Turquoise Place, 
Caloundra West, Queensland,
4551, Australia.

Comments