வடமராட்சியிலே
சுருக்கெழுத்து என்று சொன்னால் முதன்முதலில் ஞாபகத்துக்கு வரும் பெயர் திரு. வ. சிவச்சந்திரதேவன் அவர்கள்.
இவர் சிறந்த தமிழ் உணர்வாளர், சமயப்பற்றாளர், சமூகசேவையாளர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக
நல்லதோர் மனிதர். 2007இல் எனது மகனது
சகபாடியான இவரது மூத்த மகன் சஜிஷ்ணவன் மூலம்
இவரது குடும்பத்தினர் எனக்கு அறிமுகமாகினர். அன்று முதல் அவருடனான நட்பு தொடர்ந்தது.
அவரது
தமிழ் ஆர்வமும் நல்லுள்ளமுமே அவருடனான நட்புத் தொடரக் காரணமாக அமைந்தது எனில் மிகையில்லை. அடிக்கடி
தமிழ் பற்றியும் இலக்கியம் பற்றியும் என்னோடு உரையாடுவார். நான் கலந்துகொண்ட கம்பன்
விழாக்கள் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள் எதிலும் அவரைக் காணத்தவறியதில்லை. இலக்கிய விமர்சனங்கள் எதுவும் அவர் எழுதியதாகத் தெரியவில்லை.
ஆனாலும் என்னோடு நிறையவே பேசியிருக்கிறார்.
சுருக்கெழுத்தும்
தட்டெழுத்தும் பாடத்துறை தொடர்பாக அவரது சேவை அளப்பரியது. ஆனாலும்
அது எனது துறை அல்லாததனால் அது பற்றி அவர்
என்னோடு அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. எனினும் இத்துறையிலே இன்றைய இளைஞர்களின் பங்களிப்பு மிகக் குறைவு என்ற ஆதங்கத்தை அவர்
சில வேளைகளில் என்னிடம் வெளியிட்டிருக்கிறார். இப்பாடத்துறைக்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும்
என்பதற்காக உயர் கல்வி நிறுவனங்களின் துறைசார் உத்தியோகத்தர்கள் வரை சந்தித்து முயற்சிகள்
மேற்கொண்டமை பற்றியும் நான் அறிவேன்.
சுமார்
பதினான்கு ஆண்டுகள் அவருடனான நட்புத் தொடர்ந்த போதும் தனது தொழில்சார்
திறமைகள், சாதனைகள் பற்றி அவர் பெருமைப்பட்டுப் பேசிக்கொண்டது கிடையாது. எனினும் தனது தொழில் சார்ந்து
மிகுந்த திறமைசாலியாகவும் தனது தொழில் மீது
பற்றுதலும் பக்தியும் கொண்டவராகவும் விளங்கினார் என்பதே உண்மை. தனது தொழிலிலிருந்து ஓய்வு
பெற்ற பின்னரும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் என்ற அமைப்பினூடாகத் தனது
சேவையைச் சமூகத்துக்கு வழங்கியே வந்தார். பல்லாயிரம் மாணவர்கள் இத்துறை சார்ந்து தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடிய வகையில் தொழிற்பயிற்சிகளையும் வழங்கும் ஓர் அமைப்பாக இவ்வமைப்பு
விளங்கியது.
கடமை
- கண்ணியம் - கட்டுப்பாடு என்பவற்றோடு சொல்ல வேண்டிய விடயம் எதுவானாலும் அதனை உணர்ச்சிவசப்படாமல் காய்தல் - உவத்தல்
இன்றி நேர்த்தியாகச் சொல்லிவிட்டு நல்லதைக் கொண்டு அல்லதை மறந்துவிடும் நல்லுள்ளம் கொண்டவர் அவர். இவர் யாரைப் பற்றியும்
யாரிடத்தும் குறைகூறி நான் கண்டதோ கேட்டதோ
இல்லை. இவரது பெருமைகள் பற்றி யார் புகழ்ந்து பேசினாலும்
ஒரு புன்சிரிப்பே அவரது பதிலாகும். அந்தளவுக்குப் புகழைக் கண்டு போதை கொள்ளாத பெருமனிதர்
அவர்.
இத்தகைய
பெருமைபெற்ற பெருமனிதரின் தூலசரீரம் இன்று எம்மத்தியில் இல்லை. அவரது பிரிவுத் துயரினால் அல்லலுறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின்
ஆத்மா சாந்தியடைவதாக
சோமசுந்தரம்
முரளி
அதிபர்,
தெகிவளை
தமிழ் மகா வித்தியாலயம்.
Comments
Post a Comment