Skip to main content

சிவச்சந்திரதேவன் என்னும் சிறந்த ஆசானும் சமூக சேவையாளனும் - நாகரத்தினபூபதி இராமகிருஷ்ணன்

இலங்கையின் சிரசென விளங்கும் யாழ். குடாநாட்டின் தென் புலோலி, புற்றளையில் பிறந்த சிவச்சந்திரதேவன் அவர்கள், ஒரே துறை சார்ந்த அரச ஊழியர் என்னும் அடிப்படையில் 1984இல் இருந்தே என்னுடன் அறிமுகமானவர். இவர் பருத்தித்துறை நகரில் அமைந்த தனியார் வர்த்தகக் கல்லூரியில் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சைப் பயின்றார். இளம் சமூகத்தினரின் நன்மை கருதி அன்னார் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை ஸ்தாபித்து, இலவசமாக இளைஞர் யுவதிகளுக்குத்  தொழிற்கல்வியை வழங்கினார். இச்சேவையானது மிக உயர்வான சேவையாகும்.

நான் 1984ஆம் ஆண்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடமையாற்றியபோது வருடந்தோறும் வெளியிடப்படும் கழக ஆண்டறிக்கையின் பிரதியை எனக்குத் தருவதுடன், அவர்களின் தொழில் வளர்ச்சி பற்றிய விடயங்களில் அக்கறைகாட்டிக் கதைப்பார்.  அக்காலத்தில் வர்த்தமானியில் வரும் சுருக்கெழுத்தாளர், தட்டெழுத்தாளர் ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல் சம்மந்தமான விளம்பரங்களை தனக்கு அறியத்தரும்படி கேட்டுப்பெற்று தனது கழக பயிலுனர்களுக்குக் கொடுத்து, விண்ணப்பிக்கும்படி சொல்வார்.

"தாமின்புறுவது  உலகின் புறக்கண்டு
காமுறுவார் கற்றறிந்தார்"

என்னும் திருக்குறளுக்கு அமைவாக தான் பெற்ற கல்வியினால் அடைந்த பயனை ஏனையவர்களும் கற்றுப் பயன்பெற வேண்டும் எனும் பெரிய மனம் படைத்த பெருந்தகையாவார்.

மொறட்டுவை, சொய்சாபுர மாடிக்குடியிருப்பில் வாழ்ந்த அமரரை நானும் அங்கு வாழ்ந்தமையால் அடிக்கடி சந்ததிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சந்திக்கும் போதெல்லாம் சுருக்கெழுத்து, தட்டச்சு தொழிற்துறை பற்றியே கலந்துரையாடுவார். அவரது எண்ணமெல்லாம் மேற்படி தொழிற்கல்வி பற்றியே இருந்தது. அவரது அமரத்துவம் காரணமாக எங்களிடையே இருந்த சிறந்த ஒரு தொழிற்கல்வி ஆசனை இழந்தமை பெரிய வெற்றிடமாகத் தோன்றுகிறது. அவரது சிறந்த, பரந்த மனப்பான்மை காரணமாக அவரிடம் கல்விகற்ற, உதவிபெற்ற  அனைத்து மனங்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவரது அமரத்துவநிலை சிறப்பாக அமையுமென நம்புகின்றேன். அவரது ஆத்மா இறைவனடி சேர்ந்து மீண்டும் பிறப்பற்ற சாந்தி நிலையை அடையும். அடைய வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன். அன்னார் 23.05.2020இல் எவரும் எதிர்பாராதவிதமாக இறைவனடி சேர்ந்துள்ளார்.  அவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமன்றிஇ அவரின் பிறந்த ஊரான வடமராட்சி மக்களுக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

நன்றி!

திருமதி நாகரத்தினபூபதி இராமகிருஷ்ணன்
இளைப்பாறிய ஹன்சாட் அறிக்கையாளர்,
இலங்கைப் பாராளுமன்றம்.

Comments