Skip to main content

என் ஆருயிர் நண்பன்


"நெருநெல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு" 

நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற நிலையாமையை பெருமையாக உடைய இவ்வுலகில், என்றும் சிரித்தமுகத்துடன் காணப்படும் எனது அருமை நண்பன் சிவச்சந்திரதேவன் அவர்களும் இணைந்துவிட்டார் எனும் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்

கடந்த பங்குனி மாதம், திங்கட்கிழமை (2020.03.16) அன்று அவரை வெள்ளவத்தை மக்கள் வங்கிக் கிளையில் சந்தித்தேன். அவர் தனது வெள்ளவத்தை வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்று இன்முகத்துடன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து அறிமுகம் செய்துவைத்தார். கூடவே சிற்றுண்டி அருந்தும் வேளையில் வங்கியில் வேலை செய்தவர்கள் பற்றி விசாரித்ததோடு, தாம் தொடர்ந்து செய்துவரும் சமூக சேவைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவ் இன்பமான சந்திப்பு நடைபெற்று ஒரு கிழமைக்குள் நாடு  பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு யாவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை உண்டானது

இந்நிலையும் தெரிந்து, இறைவனடி சேரப்போகின்றோம் என்ற நிலையும் முன்கூட்டியே தெரிந்துதானோ என்னைச் சந்தித்தார், வீட்டுக்கும் அழைத்துக் கதைத்தார் என எண்ணத் தோன்றுகின்றது. தனது மனைவியுடன் திருகோணமலைக்கு வந்திருந்தபோதும் மறவாது எனது வீட்டிற்கு வருகைதந்து நலம் விசாரித்து சென்றிருந்த நல்ல நண்பன் ஆவார்

என்னாலேயே தாங்கிக்கொள்ள முடியாத இத்துயரத்தை இவர் துணைவியார், பிள்ளைகள் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ என எண்ணி எண்ணிக் கவலையுறுகின்றேன்

"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது"

ஆம், தனக்கு உவமை இல்லாதவனாகிய இறைவனாகிய மாதுமை உடனுறை கோணேஸ்வரப் பெருமான் திருவருளை வணங்கி, அன்னாரின் ஆத்மா சாந்தி பெறவும் அன்னாரின் குடும்பத்தினர் மனக்கவலை படிப்படியாக நீங்கி வளம்பெறவும் பிரார்த்திக்கின்றேன்

அன்பு நண்பன்,
சு. நடராசா
முன்னாள் முகாமையாளர்,
மக்கள் வங்கி,
திருகோணமலை.

Comments