அன்பாகவும் பண்பாகவும் அடக்கமாகவும் பெருமையின்றியும் பொறுமையின் சிகரமாகவும் எம்மிடையே நல்வாழ்வு வாழ்ந்த தேவன் என அழைக்கப்படும் திரு.வ. சிவச்சந்திரதேவன் வடமராட்சி, புலோலி, புற்றளை மண்ணிலே பிறந்து, வளர்ந்து, வங்கியாளனாகி, உடுப்பிட்டி மண்ணிலே மணம்முடித்து, சிறப்புக்கள் பல பெற்று வாழ்ந்த பெருமைக்குரியவர்.
மக்கள் வங்கியிலே தனது பணியை ஆற்றிக்கொண்டு, வடமராட்சிப் பிரதேசத்திலே தொழிற்கல்வியான சுருக்கெழுத்து, தட்டெழுத்தினைப் பயிற்றுவிப்பதற்காக 1985இலே வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை உருவாக்கினார். அதனூடாக பயிற்சி பெற்ற பலர் நீதிமன்றங்கள், வங்கிகள் போன்றவற்றிலே தொழில் வாய்ப்புப்பெற வாய்ப்பை ஏற்படுத்தியவர். இவர் சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பினை ஆற்றியவர். இவர் தனது சுருக்கெழுத்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டில் "முத்து" என்ற மலரை வெளியீடு செய்து கழகத்தின் பணியினை ஆவணப்படுத்தியுள்ளார்.
அன்னார் தனது குலதெய்வமான புற்றளைப் பிள்ளையாரில் அதீத பக்திகொண்டவர். தினமும் எம்பெருமானின் அருளாசியைப் பெற்று தன் கடனை ஆரம்பிப்பார். கந்தபுராண கலாசாரத்தைக் கொண்ட எமது பிரதேசத்தில் எமது ஆலயத்தில் வள்ளி திருமணப் படிப்பின் உபயகாரர்களாக தமது உபயத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வந்தவர். மேலும், ஆலயத்தில் பல்வேறு நேர்த்திக்கடன் நிகழ்வுகளை நிறைவேற்றுவார். அன்னார் 23.05.2020அன்று நம்மைவிட்டுப் பிரிந்தார். அவரின் ஆத்மா ஆண்டவன் அடியைச் சேர எல்லாம் வல்ல புற்றளைப் பிள்ளையாரை வேண்டி, அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிவஸ்ரீ சோ.ஜெயபாலசுந்தரக் குருக்கள்
ஆலய பிரதம குரு,
புற்றளை பிள்ளையார் தேவஸ்தானம்,
புலோலி.
Comments
Post a Comment