Skip to main content

வாழும் கலையை வாழ வைத்தவர் - சாந்தி நாவுக்கரசன்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

சுருக்கெழுத்துக் கலையில் ஒரு சிறந்த விற்பன்னராக விளங்கியது மட்டுமன்றி, தனது உயிர் மூச்சாகவும்கொண்டு பல ஆயிரக்கணக்கான சுருக்கெழுத்தாளர்களையும் உருவாக்கி, பயிற்றுவித்து,  வெற்றியும் கண்டுள்ளார் அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள்.

பிரபல எழுத்தாளர் நெல்லை.. பேரன், "சிற்பம், ஓவியம் போன்று சுருக்கெழுத்தும் ஒரு கலையே" எனவும், ஈழத்து தமிழ் சுருக்கெழுத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அமரர் சி. இராமலிங்கம் அவர்கள்,  "வாழும் கலை வாழவைக்கும் கலை" எனவும் இக்கலையின் பெருமையைப் பறைசாற்றியுள்ளனர் என்பதனைத் தெளிவுற எடுத்துக்கூறி,  இக்கலையை வளர்ப்பதற்கு அரிய பணியாற்றியுள்ளார் அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள்.

இன்று இக்கலையானது கணினியின் பயன்பாட்டின் வளர்ச்சியால் அருகிவிட்டது. இக்கலையின் வளர்ச்சிக்கு தன் வாழ்நாளில் பெரும் பகுதியை - சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அளப்பரிய சேவையாற்றியுள்ளமை கண்கூடு.

இவரால் 1985இல் சுருக்கெழுத்துக் கலையைப் பரப்பும் நோக்குடன் "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்" ஸ்தாபிக்கப்பட்டமை காலத்தின் தேவை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஓர் அரும்பெரும் பணியாகும். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் மட்டுமன்றி, "சுருக்கெழுத்து தட்டெழுத்துக்கலை வரலாறு" என்னும் நூலும் அமரர் அவர்களினால் எழுதப்பட்டு, சுருக்கெழுத்துக்கலை பயிலுநர்களுக்கு அரிய வரப்பிரசாதமாக வழங்கப்பட்டமை போற்றுதற்குரியதாகும். 

மேலும் சுருக்கெழுத்துக் கலையின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான அரிய முயற்சியாக அறிவுப் போட்டிகள், விவாதம், கவியரங்கு, நாடகம் எனப் பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்.

இன்று நாம் தொழில்நுட்பத் துறையில் பலவழிகளிலும் மேன்நிலையை அடைந்துள்ளோம். அன்றைய காலகட்டத்தில் இந்தச் சுருக்கெழுத்து, தட்டெழுத்துக் கலையின் பயன்பாடு மிகமிக அத்தியாவசியமும் முக்கிய தேவையுமாக இருந்தது. இக்கலையைப் பயிற்றுவிப்பது காலத்தின் தேவையாக இருந்தது.

அவ் உண்மையை உணர்ந்து "வாழும் கலை வாழ வைக்கும் கலை"க்காக தனது உன்னதமான சேவையை நல்கி, அரும்பணியாற்றிய அமரரின் மறைவு இழப்பீடு செய்யமுடியாத ஒன்றாகும்.

இக்கலையை இவரிடம் பயின்ற, பயன்பெற்ற எல்லோர் உள்ளங்களிலும் நீங்கா இடம்பெற்று விளங்குவார் என்பதில் ஐயமில்லை. அன்னாரின் ஆத்மா ஆடல்வல்லானின் திருப்பாதங்களில் சாந்தி பெற பிரார்த்திப்போம்.

திருமதி சாந்தி நாவுக்கரசன்
ஓய்வுபெற்ற செயலாளர், புனர்வாழ்வு அமைச்சு.

Comments