Skip to main content

என் நெஞ்சம் சுமக்கும் தேவன்! - செ.செல்வராசா

சிவன், சந்திரன், தேவன் என்பவற்றைச் சுமந்த மாமனிதனினே அமரர் சிவச்சந்திரதேவன். அமரர் சிவச்சந்திரதேவனுடன் பழகும் வாய்ப்பு நான் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் போது கிட்டியது. எழுவகைப் பிறப்பிலும் அரியது மானிடப் பிறவி. "அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" - இது ஒளவையாரின் வாக்கு. மனித உடல் எடுத்தோர் எல்லோரும் மனிதராகிவிட முடியாது. மனிதம் உடையவன் மனிதன் நல்மனம் உடையவன் மனிதன். நடை, உடை, பாவனை என்பவற்றைக் கொண்டே ஒரு மனிதனை மதிப்பிடலாம். இவற்றுக்கெல்லாம் இலக்கணம் படைத்தவரே அன்பர் சிவச்சந்திரதேவன்.

"நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கு இணங்க, தான் பெற்ற சுருக்கெழுத்து, தட்டெழுத்துத் திறனை ஏனையோரும் பெறவேண்டும் என்பதனை மனதில்கொண்டு கல்வியைக் கற்று வேலைவாய்ப்பு அற்றிருந்த இளைஞர் யுவதிகளுக்காக வடமராட்சிப் பகுதியில் அமைந்த வதிரியில்வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர் மக்கள் வங்கியில் கடமையாற்றியபோதும் தான் கற்ற சுருக்கெழுத்து, தட்டெழுத்தினை மாணவரின் நலன் கருதிக் கற்பித்துவந்தார். அதன் பயனாக அவரிடம் கற்ற மாணவர்கள் பலர் இன்றும் நாட்டின் பல அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் கடமையாற்றி வருவது அமரர் இட்ட அத்திவாரம் என்றால் மிகையாகாது.

அமரர் அவர்கள் தம்மைப் பற்றிப் புகழாது, வீண்வார்த்தைகள் பேசாது, பணிவுடையோனாக, அமைதியான குணப்பண்புடையவராக, நிறைகுடம்போல வாழ்ந்தவர். பல இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற குறளின் துணையுடன் மனதினை ஆறுதல்படுத்தி, தெய்வமாகி விட்ட அமரரின் ஆத்மா இறைவனிடம் அமைதிகொள்ளட்டும்!

செ.செல்வராசா (சமாதான நீதவான்)
தலைவர்,
கட்டைவேலி,
நெல்லியடி .நோ.கூசங்கம்,
கரவெட்டி.
ஓய்வு நிலை அதிபர்,
யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம்.

Comments