Skip to main content

வாழ்க்கை வரலாறு

ஈழத்திருநாட்டின் சென்னி போல் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின்  வடமராட்சியில் தென்புலோலி புற்றளை என்னும் ஊரைப் பிறப்பிடமாக்க கொண்ட அமரர் ஸ்ரீமான் சிவச்சந்திரதேவன் அவர்கள், சைவ வேளாளர் கந்தையா குமாரசுவாமி பரம்பரையில் வந்துதித்த பண்டிதர் சைவப்புலவர் வயிரவிப்பிள்ளை என்பவருக்கும் பூசாரியான சின்னகுட்டி எனப்படுகின்ற கதிர்காமர் பரம்பரையில் தோன்றிய கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மூன்றாவது மகளான அன்னம்மாள் என்பவருக்கும் சிரேஷ்ட புதல்வனாக 1950.12.17இல் இவ்வவனியில் அவதரித்தார். இவருடன் காலஞ்சென்ற கோப்பெருந்தேவி, சிவசூரியதேவன் மற்றும் சிவஅக்கினிதேவன், சிவசிம்மதேவன், செம்மனச்செல்வி, மெல்லியல் என்னும் அறுவர் உடன்பிறந்தோராய் இல்லறம் சிறக்க வந்துதித்தனர்.

பெற்றோரின் அன்பிற்கும் கண்டிப்பிற்கும் அடிபணிந்து நற்குழந்தைகளாய் வளர்ந்து பள்ளிப்பருவத்தை எட்டிய அன்னார், தனது ஆரம்பக்கல்வியை பொற்றாலை சாரதா வித்தியாலயத்திலும் மூன்றாம் வகுப்புவரை புற்றளை மகாவித்தியாலயத்திலும் நான்காம் வகுப்பினை யாழ். ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோரின் வேலைநிமித்தம் பிள்ளைகளும் தங்கள் கல்வியை இடமாற்றம் செய்யநேரிட்டதால் எட்டாம் வகுப்புவரை கண்டி மாரண தமிழ் வித்தியாலயத்திலும் கண்டி திரித்துவக் கல்லூரியிலும் கற்றார். அதன்பின்னர் க.பொ.த. (சாதாரண) தர காலத்தில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று தேர்ச்சிபெற்றார். துரதிஷ்டவசமாக தனது பாடசாலைக் கல்வியை அதற்குமேல் தொடர வாய்ப்பின்றி இடைநிறுத்தவேண்டி ஏற்பட்டது. அவ்வேளை தினமும் தனது உயர்தர கல்வியைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்த வேளையில் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து ஆங்கில சுருக்கெழுத்து-தட்டெழுத்;துப் பாடநெறியைச் செவ்வனே கற்று சிறந்த தேர்ச்சிபெற்றார். அடுத்த வருடமே பருத்தித்துறை வர்த்தகக் கல்லூரியில் தமிழ் சுருக்கெழுத்து-தட்டெழுத்தினையும் விரும்பிக் கற்றுக்கொண்டார்.

தன்னுடைய எதிர்காலம் இனி இத்துறையில்தான் என திடசங்கற்பம் கொண்டு அக்கல்விமேல் அதிக அக்கறையூம் ஈடுபாடும் கொண்டிருந்த போது யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் அவருக்கு போதனாசிரியராக இருந்த செல்வி மனோரஞ்சிதமலர் விஸ்வலிங்கம் அவர்கள் வெளிநாடு செல்ல இருந்த காரணத் தால் அப்பதவிக்கு வெற்றிடம் உருவாகியது. அச்சமயம் அவ்வாசிரியருக்கு அன்னார் மீதிருந்த அதீத நம்பிக்கையினால் இவரே இப்பதவிக்குப் பொருத்தமானவரென எண்ணி அவ்வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரைத்தார். அன்னாரும் அவ்வேலைக்கு விண்ணப்பித்த பின் முழு நம்பிக்கையூடனும் மகிழ்ச்சியூடனும் நண்பர்களுடன் அச்செய்தியைப் பகிர்ந்து காத்திருந்தார். ஆனால் விதியின் விளையாட்டு அதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களில் ஒருவர் அப்பதவிக்கு விண்ணப்பித்து வேலையையும் பெற்றுக்கொண்டார். இதனால் மனமுடைந்து போனாலும் தன்னை ஒரு தகுதியுடைய சுருக்கெழுத்தாளராக மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவருள் அன்று விதைக்கப்பட்டது.

அதன்பின்னர் சுமார் 75இற்கும் மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்றும் எங்குமே வேலை என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதன் பின்பு மக்கள் வங்கி வைத்த பரீட்சையில் சித்தியடைந்து முதன்முதலில் ஒரு வங்கி ஆங்கிலச் சுருக்கெழுத்தாளராக சம்மாந்துறைக் கிளையில் முதல் நியமனத்தை 1975ஆம் ஆண்டு பெற்றார்.

அந்தத் துறையில் அவர் வைத்திருந்த பற்று கல்முனையில் தனியார் கலாசாலையொன்றில் கற்பிக்கும் வாய்ப்பையூம் பெற்றுக்கொடுத்தது. அதே காலகட்டத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்காக கல்லாறு என்னும் ஊரிலும் சுய முயற்சியில் சுருக்கெழுத்து-தட்டெழுத்தினைக் கற்பிக்கும் வாய்ப்புக்கிட்டியது.

1979ஆம் ஆண்டு சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் முதன்முதலாக சுருக்கெழுத்து-தட்டெழுத்து கற்கைநெறி ஆரம்பித்தது. அங்கு அக்கற்கை நெறிக்கான போதனாசிரியராக வேண்டி அன்னாரை நாடினார்கள். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சுருக்கெழுத்துப் போதனாசிரியராக வரவேண்டும் என்ற தனது கனவையும் அன்றைய சபதத்தையும் நிறைவேற்றிக்கொண்டார். 

ஆறுவருட வங்கிச்சேவைக்காலத்தின் பின்னர் இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைகிளையில் தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் சமூகத்திற்கு ஏதேனும் பயனுள்ளவற்றைச் செய்யவேண்டுமென்ற ஆர்வத்தின் பிரதிபலிப்பாக நலன்புரிச்சங்கமொன்றை ஆரம்பித்து இலவசமாக சுருக்கெழுத்தையும்-தட்டெழுத்தினையும் கற்பித்தார். இதுவே அவரது அடையாளமாக பின்னாளில் மாறிய வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் அடித்தளமாகியது.  அந்த நிறுவனத்தில் படித்தவர்களின் உதவியோடு 1985இல் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. கழக நிர்வாகிகளாகவூம் போதனாசிரியர்களாகவும் அவர்களே செயற்பட்டனர்.  வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தினால் நடாத்தப்பட்ட வகுப்புக்கள் அத்தனையும் மாணவர்களின் நலன் கருதி இலவசமாகவே நடாத்தப்படவேண்டுமென்ற அவரது கொள்கையிலிருந்து இறுதிவரை அவர் பிறழவில்லை. வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 2008ஆம் ஆண்டு வரை செயலாளராகவும், அதன் பின்னர் அமரராகும் வரை தலைவராகவும் ஆலோசகராகவும் இருந்துவந்தார். அக்காலப்பகுதிகளில் பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்றம் மற்றும் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் முறைசாராக் கல்விப் பிரிவிலும் சுருக்கெழுத்து போதனாசிரியராக கடமையாற்றினார். 

1989ஆம் ஆண்டு உடுப்பிட்டி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தங்களது கழகத்தினை உடுப்பிட்டியில் ஒரு தனியார் இல்லமாகிய “இலக்ஷ்மி பவனத்தில்” மூன்று ஆண்டுகள் வகுப்புகள் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார். அதன் பயனாக அவ்வூர் இளைஞர் யுவதிகள் பலர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள உறுதுணையானார். 1990-1994வரை யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் சுருக்கெழுத்து வருகைதரு விரிவூரையாளராகவூம் கடமையாற்றினார்.

1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி உடுப்பிட்டி சைவப்பெருங்குடித் தோன்றலும் பெருநிலக்கிழாரும் செல்வந்தரு மாகிய காசிநாத உடையாரின் வழித்தோன்றலாகிய அமரரான கதிரிப்பிள்ளை பாலசிங்கம் என்பவருக்கும் அல்லையம்பதியைச் சேர்ந்த சைவ வேளான்குல திலகரும் தினகரிப்பிள்ளை உடையாரின் வழித்தோன்றலுமாகிய கனகரத்தினம் கமலினி என்பவருக்கும் சிரேஷ்ட புதல்வியான கிருஷ்ணகுமாரியைக் கரம்பிடித்து தன் இல்லற வாழ்வினுள் நுழைந்தார். அவ்வில்லற வாழ்வின் நற்பயனாக சஜிஷ்ணவன், சுஹநிதன், ஸைந்தவி, அபீஷ்டகன் என்னும் அருந்தவச் செல்வங்களைத் தனக்கு அடையாளமாகப் பெற்றெடுத்தார். திருமண பந்தத்தில் இணைந்த ஓராண்டிலேயே மக்கள் வங்கியின் அந்தரங்கச் செயலாளராக பதவியுயர்வு பெற்றார். அவ்வேளை யாழ்ப்பாண மக்கள் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் தன் கடமையை ஆற்றினார். 2006ஆம் ஆண்டுவரை மக்கள் வங்கிக்கு தனது உன்னத சேவையை வழங்கி, தனது 31 வருட சேவையைப் பூர்த்திசெய்து, வங்கிச்சேவையில் இருந்து இளைப்பாறினார்.

காலத்தின் கட்டாயத்தினால் தனது வைத்திய தேவைகள் காரணமாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் கப்பல் மூலம் கொழும்பிற்கு இடம்மாறிவர நேரிட்டது. 2007 டிசம்பர் முதல் தனது சேமிப்பில் வாங்கிய வீட்டில் குடியேறினார். அதுவரைகாலமும் முற்றுமுழுதாக சமூகத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்.  அதன் பின்னரான பெருமளவு காலத்தை தன் குடும்பத்திற்காகவூம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் அவர்களை பல்வேறு ஆளுமைமிக்கவர்களாகவும் மனிதநேயப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் வளர்ப்பதற்காக தனது காலத்தை ஒதுக்கிக்கொண்டார். இருந்தபோதும் தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்ட தீராத காதல் அவரை தமிழ்ச் சங்கத்தை நோக்கியும் தலைநகரத்தில் நடக்கும் அறிவுசார் நிகழ்ச்சிகளை நோக்கியும் ஈர்க்கத் தொடங்கியது. அதன் பயனாக கொழும்பு தமிழ்ச் சங்கப் பேரவைக்குழுவின் அங்கத்தவராக இணைந்து கொண்டார்.

தன்னுடைய பிள்ளைகள் எங்கே எந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினாலும் அந்த இடத்திற்கு தான் முதல் ஆளாகப் போய்ப்பார்க்க வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது. சொய்சாபுரவில் இருந்த நாட்களில் தினமும் வாசிகசாலை சென்று பத்திரிகை வாசிப்பதையும் தன் வயது ஒத்த நண்பர்களுடன் அளவளாவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

2019இல் வெள்ளவத்தையில் குடியேறினார். பின்னர் கொழும்பில் நடைபெறும் தமிழ் இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளில் தனது பெருமளவு நேரத்தைச் செலவிட்டார். தான் பார்த்து படித்த பழகிய விடயங்களில் எது எல்லாம் பயனுடையதோ அவை எல்லாவற்றையூம் தன் மனைவி, பிள்ளைகளுடன் பகிர்வதைத் தனது வழக்கமாக்கிக்கொண்டார்.

சுமார் 50 ஆண்டுகளாக சுருக்கெழுத்துக் கலையோடும் 35 ஆண்டுகளாக வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தோடும் தன் வாழ்வை அர்ப்பணித்த இவர் தனது 70வது அகவையில், 2020 வைகாசி 23ஆம் நாள் மீளாத்துயில் கொண்டார். அன்னார் தன் பிள்ளைகளையும் தனது மாணவர்களில் பலரையும் நற்பிரஜைகளாகச் செதுக்கிச் சமூகத்திற்கு கொடுத்துச் சென்றுள்ளார். அவருடைய வெற்றிடம் யாராலும் நிரப்பப்பட முடியாததாய் இருந்தாலும் நிச்சயம் அவர் விதைத்த விதைகள் விருட்சமாகி இன்னும் பல தலைமுறைகளுக்குப் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.

Comments