Skip to main content

கண்ணியமான கனவான் தேவன் கலந்தனன் தேவருடன்! - சு. வாசுகி (ச.நீ.)

அன்று வயது 11 இருக்கும். சகோதரர்களும் தாய், தந்தையும் நானும் கால்நடையில் போகும் இடம் அறியாது சென்றவேளை (ஒப்பரேஷன் லிபரேஷன்) பருத்தித்துறை ஓராம் கட்டைச் சந்தியில் அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் எனது தந்தையை (இருவரும் வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில்  வேலை பார்ப்பவர்கள்) வழிமறித்து தனது இல்லத்தில் தங்கவைத்தார். அவரது பண்பும் கனவான் தன்மையும் கண்ணியமும் என் மனதில் ஆழ நின்று கொண்டது.

மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறை கிளையில் கடமையாற்றிய எனது தந்தைமூலம் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் திரு. சிவச்சந்திரதேவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியதை அறிந்தேன். உவகையுடன் கழகத்தில் கற்கும் பாக்கியத்தைப் பெற்றேன். சுருக்கெழுத்து, தட்டச்சுக் கலைகளை கற்பித்தவர்தான் சிவச்சந்திரதேவன் ஆசிரியர் அவர்கள். இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் போதிப்பார். விளங்கவில்லையென்று கேட்டால் கடும் தொனியில் பேசி கண்ணியமாக விவரணம் செய்வார். அதுமட்டு மல்ல, தனது சொந்தப் பணத்தில் ரோணியோ பண்ணி,  புத்தகங்க ளாகக் கட்டி நோட்சும் தந்து எனது முன்னேற்றத்துக்கு உதவிய பெருந்தகைமேலும் பொறுப்புவாய்ந்த நிர்வாகத்திலும் கழக வேலைகளிலும் என்னை ஒருவராகத் தெரிவுசெய்ய வேண்டுமென்று என்னிடம் மறைமுகமாக எனக்கு நிர்வாகக் ஷ்டங்களை உணரச் செய்தவரும் தேவன் சேர் அவர்களே

அண்மையில் தேவன் சேர் அவர்கள் தொலைபேசியில் அழைத்து பற்பல விடயங்களைப் பற்றிக் கலந்தாலோசித்தமை இவர்தம் மேலுலகப் பயண ஏற்பாடென்றே நினைக்கின்றேன். தொலைபேசியை எனது தந்தையாரிடமும் கொடுக்கச் சொல்லி பலமணி நேரம் உரையாடினார். உரையாடல்களில் முக்கியம் வாய்ந்த விடயங்களே பரிமாறப்பட்டன என்றுதான் நினைக்கின்றேன்.

தனது மனைவி, பிள்ளைகள், வாழ்விடமாற்றங்கள்,  ஊர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஏனைய முக்கியம் வாய்ந்தவையில் கவனம் செலுத்தியே அவரின் உரையாடல் இடம்பெற்றது. இவை மனதில் யோசிக்க வேண்டிய முக்கிய விடயங்கள். எது எவ்வாறாயினும் தேவன் குரு அவர்கள் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, எல்லோருக்கும் அவரவருக்கு ஏற்ற தொழிலினைக் காட்டி, நல்வழிப்படுத்தி, மனநிறைவுடன் தேவலோகத்தில் சிற்சில கருமமாற்றச் சென்றுள்ளார் என்பதே நிச்சயம்

இறைவனின் கடன் தீர்ந்தது பிள்ளைகள், மனைவியவர்களின் சுமை கூடுகின்றதுஇது இறைவன் நியதி

பூத்தமலர் சருகாகி போவதுண்டு
புதுவானில் ஒளி இருளைக் காண்பதுண்டு
ஆர்த்தெடுத்த நீர் ஆவியாதலுண்டு
அழுவாரும் நீறாக அழுவாருண்டு
சீர்த்த மகன் தேவன் செழும்பொற்சோதிச்
சீரிறையின் திருவடிக்கே சேர்ந்துபோனான்
ஆர்த்தழுவார் தௌpந்துமனம் ஆறுவீரே
ஆண்டவனார் வகுத்தவிதி அழுதால் மாறுமா?

திருமதி சு. வாசுகி (.நீ.)
நீதிமன்றப் பதிவாளர், நீதவான் நீதிமன்றம்
யாழ்ப்பாணம்  


Comments