Skip to main content

வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் பிதாமகர் சிவச்சந்திரதேவன்...! - ந.அனந்தராஜ்

வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் பிதாமகர் சிவச்சந்திரதேவன்...!

வடமராட்சியில் கடந்த 30 வருடமாக தமிழ், ஆங்கிலச் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் திறன்களை பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்றுப் பயனடைவதற்காகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த நண்பர் திரு.க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

"வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் என்ற பெயரில் 1985ஆம் ஆண்டு பாரிய பயிற்சி நிறுவனத்தை தனியொருவராக நின்று ஆரம்பித்து, அதற்கென ஒரு கழக கீதத்தைம், கழகக் கொடியையும் உருவாக்கி தனித்துவமான நிறுவனமாக வளர்த்தெடுத்தார். அதனை ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல சிரமங்கள், சவால்களை எதிர் நோக்கியபோதும், அந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக் கான இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சிகளை வழங்கி, அவர்களைத் தட்டச்சு, சுருக்கெழுத்துத் துறையில் தகைமைபெற்ற கல்வியாளர்களாக மாற்றிய பெருமை திரு.க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சிகளைப் பெற்றுத் தகைமைச் சான்றிதழுடன் வெளியேறிய பல இளைஞர் யுவதிகளை நீதிமன்றங்கள், வங்கிகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்வாங்கி உயர்ந்த வேதனத்தில் அமர்த்தியதால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்தக் கழகம் கால் கோளாக இருந்தது. தனிமனித இலாபம் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாது, தமிழ் இளஞ்சந்ததியை தொழில்நுட்பத் துறையில் மேலோங்கச் செய்வதன்மூலம் அவர்களின் ஆற்றலை உயர்த்துவதற்காகத் தனியொரு மனிதராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை நடத்தி வந்திருக்கின்றார்.

போர்க்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தபோதும், இடம்பெயரும் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை இயக்கி வந்தபொழுது, அவர் எத்தகைய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்திருந்தார் என்பதை நான் அறிவேன். சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுக் கலையின் தேவைகள் குறைந்து நவீன கற்றல், கற்பித்தல் சாதனங்களான கணினிகளின் வருகையினால் தட்டச்சுக் கலையைக் கற்க வருபவர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியதும் தனது பணிகளைக் கணினிக் கற்கைக்கும் விஸ்தரித்து, கணினித் தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாகத் தேவையான தட்டச்சுப் பொறியையும் பயன்படுத்தி மிக இலகுவான முறையில் கணினிக் கற்கை நெறியையும் சிறப்பாக முன்னெடுத்தார்.

வடமராட்சியில் 1950இல் பிறந்த அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள், தனது இளம் வயதிலேயே சுருக்கெழுத்து, தட்டச்சில் ஆர்வம் கொண்டதால் அவற்றைக் கற்றுத் தேர்ச்சி அடைந்து, மக்கள் வங்கியில் ஆங்கிலச் சுருக்கெழுத்தாளராக இணைந்து கொண்டார். 1978ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை மக்கள் வங்கியில் கடமையாற்றிய காலத்திலேயே 1995ஆம் ஆண்டில் அவரது சேவையின் நம்பகத்தன்மை அவரது வினையாற்று கையின் காரணமாக மக்கள் வங்கியின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் "அந்தரங்க செயலாளராகப் பதவிஉயர்வு பெற்று மக்கள் வங்கியின் உயர் அதிகாரிகளின் மட்டத்தில் நம்பிக்கைக்குரிய ஓர் அதிகாரியாகக் கடமையாற்றி, 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

அவர் மக்கள் வங்கியில் வல்வெட்டித்துறைக் கிளை உட்பட யாழ்ப்பாணத்தின் பல கிளைகளில் கடமையாற்றிய காலத்தில் வங்கிக்கு வருகைதரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் செய்து கொடுப்பதற்காகத் தனது இருக்கையில் இருந்தும் எழுந்து வந்து, சிரித்த முகத்துடன் உதவிகளைச் செய்து வந்ததை நான் நேரில் கண்டிருக்கின்றேன். அவரது இந்தப் பண்பு வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பையும் அவர் மீதான அன்பையும் ஏற்படுத்தி யிருந்தது.

மக்கள் வங்கியில் கடமையாற்றிய காலத்திலேயே வங்கிக் கடமைகளில் பாதிப்பு ஏற்படாதவகையில், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்து வந்தார். இதில் தன்னிடம் கற்ற மாணவர்களின் உதவியைப் பெற்று, தனது மேற்பார்வையுடன் சிறப்பாக முன்னெடுத்து வந்தார். அவரது பணிகளில் பொருளாதார ரீதியில் அல்லது நிர்வாக ரீதியில் தடங்கல்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்ட நேரங்களில் என்னுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியும் உள்ளதை நினைத்துப் பார்க்கும்பொழுது கற்றவர்களிடம் இருந்து தேவைக் கேற்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் பெறக்கூடிய மனப்பாங்கைக் கொண்டுள்ள அவரது பெருந்தன்மையையும் பார்த்திருக்கின்றேன்.

கொழும்புக்கு நான் சென்றிருக்கும் நேரங்களில் அவரை வெள்ளவத்தை வீதிகளில் சந்திக்கும்போது, தனது இயலாமையின் நிலையிலும், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் நிலை, அதனை எவ்வாறு தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். அதுவே அவரது உயிர் மூச்சாக இருந்ததையும் அறிந்தேன்.  கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வாராந்த சிறப்புரையில் நான் ஆற்றிய உரையை முழுமையாக இருந்து கேட்டு, உரையின் முடிவில் வந்து என்னைப் பாராட்டிச் சென்ற அமரர் சிவச்சந்திரதேவனைச் சந்தித்த அந்தநாளே இறுதி நாளாக இருக்கும் என்று அந்தநேரம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இந்த நிலையில் 23.05.2020 அன்று திடீரென அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த இழப்பு சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினித் தொழில்நுட்பவியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

1990களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் இருந்தே அவரது மனைவி குடும்பத்தினரை நன்கு அறிந்திருந்ததால், அதனைத் தொடர்ந்து அவருடனான உறவும் மேலும் நெருக்கமடைந்தது. இதனால் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு வைபவத்திற்கும் என்னையும் விருந்தினராக அழைத்துக் கௌரவிப்பார். அவருக்கு ஏற்ற வகையில் அவரது குடும்பத்தினரும் அவரது பணி சிறக்கத் தமது பங்களிப்பையும் வழங்கியிருந்தனர். அவரது திடீர் மறைவின் துயரத்தில் துவண்டுபோய் இருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை வழங்கவேண்டும்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வடமராட்சியில் சுருக்கெழுத்து, தட்டச்சுக் கலையை வளர்ப்பதில் ஓயாது உழைத்து, புகழுடன் வாழ்ந்து எங்களை விட்டுப்பிரிந்து சென்றுவிட்ட அமரர் சிவச்சந்திர தேவன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவரைப் பிரிந்து துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில்; அவரது சேவைகளின் ஊடாக அவரிடம் கற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”

ந.அனந்தராஜ்
முன்னாள் அதிபர்,
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி,
வல்வெட்டித்துறை.

Comments