Skip to main content

மனித நேயமுள்ள சமூக சேவைக்கு ஓர் உதாரண புருஷன்! - மாலினி அசோக்குமார்

ஆமாம், எமது ஆசானின் நீண்டகால நோக்குடனான சமூகசேவை ஆரம்பமான ஆங்கில சுருக்கெழுத்துப் பயிற்சியின் முதலாவது Batch இலே 30 பேரில் ஒருத்தியாக 01.10.1985இல் நானும் இணைந்து கொண்டேன். மிகவும் நுட்பமான அக்கல்வியை மிக இலகுவாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.

மக்கள் வங்கி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய திரு. சிவசந்திரதேவன் ஐயா அவர்கள், சனி, ஞாயிறு தினங்களில் யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபரின் அனுமதியுடன் அப்பாடசாலையிலேயே இலவசமாக இச்சேவையைத் தொடங்கினார். ஆறுமாத காலம் ஆங்கில சுருக்கெழுத்தும் தட்டெழுத்தும் பயிற்றுவித்தார். அக்கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்கள் அனைவரையும் 03 மாத கால தமிழ் சுருக்கெழுத்தும் தட்டெழுத்தும் பயில வைத்தார். அனைவரையூம் .பொ.. (சாதாரண) தரப் பரீட்சைக்குத் தோற்ற வைத்து ஆங்கிலம். தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சித்தியடைய அயராது பாடுபட்டார். அந்தக் காலத்தில் தட்டச்சு இயந்திரம் பெறுவதே மிகவும் கஷ்டமான விடயம். அந்நிலையில், பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் தானே முன்னின்று இயந்திரங்களைப் பெற்று பரீட்சைக்குக் கொண்டுசெல்வதற்கு உரிய ஒழுங்குகளையெல்லாம் மேற்கொண்டதை மறக்க முடியாது.

எமக்கு அந்த நுட்பமான மொழியிலே பல போட்டிகளை நடாத்த ஒழுங்கு செய்திருந்தார். வல்வை மகளிர் கல்லூரி, புற்றளை வித்தியாலயம், மல்லாகம் மகாஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் Quiz போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டியதைப் பார்த்துப் பூரித்தார். எமது வெற்றியே அவரது சந்தோஷமாக இருந்தது. என்றுமே சிரித்த முகம், அன்பாகவும், பண்பாகவும் பழகுவார். எல்லோர் மனங்களிலும் நிலைத்திருந்தார்.

அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையத்திற்குவடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்என்ற பெயர் பதிவையும் மேற்கொண்டு, பயிற்சி முடிவின்போது வழங்கப்படும் சான்றிதழ்களிலும் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலாளர்களையூம் அழைத்து அவர்களின் கையொப்பத்துடன் வழங்கி, சான்றிதழ்களுக்கு பெருமை சேர்த்தார்.

தன்னிடம் கல்வி பயின்ற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பயிற்சியளித்து, அவர்களையும் ஆசிரியர்களாக்கிய பெருமைக்குரியவர். இவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்று அரச துறைகளில் தலைமைத்துவப் பதவிகளிலுள்ளனர். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் முதலாவது தலைவராக நான் கடமையாற்றினேன். அன்று தெரியவில்லை, நான் ஒரு தலைமைத்துவப் பதவியை வகிப்பேன் என்று. வடமராட்சியில் தொடங்கிய கல்வி, இன்று நாட்டின் எட்டுத் திக்கும் பரவியுள்ளது. ஆமாம், யாழ்ப்பாணம், வவூனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, சம்மாந்துறை என பலவிடங்களிலுமுள்ள நீதிமன்றங்களில் எமது கழக மாணவர்கள் கடமையாற்றுவதைக் கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார்கள், இங்கு எல்லாப் புகழும் எமது அன்புக்குரிய ஆசான் திரு.சிவச்சந்திரதேவன் ஐயா அவர்களுக்கே என்றால் அது மிகையாகாது.

தன்னிடம் கல்வி பயின்றவர்களை என்றும் மறந்ததில்லை. 30ஆவது வருட ஞாபகமாகமுத்துஎன்ற மலர் வெளியிட உள்ளதாகவும் அதற்கு கழகத்தின் முதல் தலைவி என்ற வகையில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைக்குமாறும் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார். அந்நிகழ்வு வெகு விமர்சையாக நெல்லியடி முருகன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கான அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். அப்போது sir  இன் அயராத உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியை கண்டு அகமகிழ்ந்தேன். காலமெல்லாம் தன்னலம் பாராது சேவையாற்றிய நல்லதொரு சேவையாளர், மனிதநேயமிக்க தலைசிறந்த சமூக சேவகன், சிறந்த வழிகாட்டி, இவரின் இழப்பு இட்டு நிரப்ப முடியாதது.  இவ்வாறு அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.  இறுதிவரை மறக்க முடியாத அன்பும் பண்பும் நிறைந்த ஐயாவின் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்!

அன்னாரை இழந்து தவிக்கும் அன்பு மனைவி மற்றும் பாசமிகு பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென எல்லாம் வல்ல கோணேசப் பெருமானை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

திருமதி மாலினி அசோக்குமார்
செயலாளர்,
குச்சவெளி பிரதேச சபை,
திருகோணமலை.


Comments