வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக ஸ்தாபகர் அமரர் வ. சிவச்சந்திர தேவன் அவர்கள் சிறந்த சிந்தனையாளர், செயற்பாட்டாளர். எதிர்கால இலட்சியக் கனவைத் தனது நிறுவன செயற்பாடுகள் மூலம் நிறைவேற்றப் பணியாற்றியவர்.
இலட்சியக் கனவின்மூலம் எதிர்கால வேலை
உலகிற்குத் தன்னை நாடிவந்தோருக்கு நல்வழிகாட்டியாகச் செயற்பட்டு, பல்லாயிரக் கணக்கானவர்களை
உருவாக்கியவர். அவ்வாறு உருவாக்கும் போது இயற்கை, செயற்கை அனர்த்த காலங்களில் இடம்பெயரும்
நிலை ஏற்பட்டது. அவ் இடப்பெயர்வுகளின் போதெல்லாம் தமது கழகக் கட்டமைப்புக்களை இடம்பெயரச்செய்து, சென்று தங்கிய இடங்களில் தமது கழக செயற்பாடுகளைக் குறைகளின்றி நிறைவு செய்தவர். அதுமட்டுமல்ல, தங்கி செயற்பட்ட கல்விக் கூடங்களை தமது வாழ்நாளில் மறவாது செய்ந்நன்றி மூலம் வெளிப்படுத்தி, அக்கூடங்களில் பின்னைய காலங்களில் கல்வி கற்கின்ற மாணவ மணிகளின் அறிவுப் பெருக்கத்திற்காக
அக்கல்விக்கூடங்களின் நூலகங்களை மனதிற்கொண்டு மாணவ மனங்களில் இடம்பிடித்தவர்.
ஆம், மல்லாகம் மகா வித்தியாலயத்தில் அன்றையநாள் அதிபராக இருந்த, இந்திய இராணுவ கெடுபிடிக் காலத்தில் இறை பதம் அடைந்த திரு.அ.மகாதேவன்
அவர்களின் கடமைக் காலத்தில் வடமராட்சிச் சுருக்கெழுத்துக்
கழகம் தனது செயற்பணியை செவ்வனே நிறைவேற்ற அங்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதன் நன்றிக் கடனாக ஓய்வுபெற்ற முன்னாள்
அதிபர் திரு.ந.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் 2012ஆம் ஆண்டு மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கும்
வடமராட்சி கல்வி வலய 10 பாடசாலைகளுக்கும் தலா ஓர் இலட்சம் ரூபாய் வீதம் நூலகக் கொள்வனவிற்காக
வழங்கப்பட்டது. இதில் விசேடம் யாதெனில், வடமராட்சி
கல்வி வலயத்திற்கு வெளியே அதுவும் வலிகாமம் கல்வி வலயத்தின் ஒரு பாடசாலையகாகத்தான் எமது பாடசாலை
அமைந்தது. அப்போதுதான் எமக்கு அன்னாரது நன்றிப்
பெருக்கு விளங்கியது. அவரது நூலக அன்பளிப்பு மூலம் அன்றும் இன்றும் என்றும் அறிவு பெறும் மாணவர்கள் அவரை நினைவுகூர்வர் என்பதில்
ஐயம் இல்லை.
அது போலவே எமது பாடசாலைச் சமூகமும் அவரது
செயற்பணியைப் போற்றி அன்னாரது பிரிவிற்கு அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதுடன், அவரது
குடும்பத்தினருக்கு ஆறதல் கூறி நிற்பதுடன், அவரது
ஆத்மா சாந்தி அடையவும் அமரரடி சேரவும் பணிந்து இறைஞ்சுகின்றோம்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பாடசாலை சமூகம் சார்பாக
திருமதி யோகராணி தில்லைநாதன்
அதிபர்,
யா/மல்லாகம் மகாவித்தியாலயம்,
மல்லாகம்.
Comments
Post a Comment