Skip to main content

எம் நினைவுகளில் என்றென்றும் வாழ்வீர்கள் - தனுஜா நாகராஜா

அங்கிளை எனக்கு "சஜிஷ்ணவன்ட அப்பா" என்று தான் அறிமுகம். பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப்போட்டிகளில்தான் சஜிஷ்ணவனைச் சந்தித்திருக்கிறேன். சாதாரணமாக ஆரம்பித்த அறிமுகம் பின்னாளில் அந்த வீட்டின் மூத்த பிள்ளையாக இருந்த சஜிஷ்ணவன் உட்பட சுஹன், ஸைந்தி, அபிக்கு ஒரு தமக்கை என்ற நிலையில் போய் முடிந்தது.

அதன் பிற்பாடு என்னை பொதுவிடங்களில் காண்கிற போதெல்லாம் மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பார். குறிப்பாக, "என்னம்மா, உங்கட தம்பி நேரத்துக்கு வீட்டுக்கு வாரேல. கொஞ்சம் சொல்லுங்கோ?" என்ற கோரிக்கை கட்டாயம் இருக்கும். தமிழ்ச்சங்கத்தில், தமிழ்ச்சங்கத்திற்கு வெளியில், கம்பன் விழாவில் - இப்படி அறிவுக்குத் தீனி போடுகிற இடங்களில்தான் பெரும்பாலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சஜிஷ்ணவன் வாசிப்பதற்கென ஒருதொகை ஆனந்தவிகடன் புத்தகங்களைக் கொடுத்தனுப்பியிருந்தேன். அந்தப் புத்தகங்களை அவன் வாசிக்கவேயில்லை என்றும், நான் கொடுத்தபடி அடுக்குக் குலையாமலிருந்த புத்தகங்களைத் தான் வாசித்ததாகவும் பிறிதொருநாள் அங்கிள் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது.

அவர்களுடைய வீட்டிற்குப் போயிருந்தபோது அவர் அதிகம் பேசியது அவருடைய பிள்ளைகளைப் பற்றித்தான். சஜிஷ்ணவன் எப்போதும் நேரத்திற்கு வீடு வந்து சேர்வதில்லை என்ற முறைப் பாட்டை அப்போதும் பதிவுசெய்ததாக ஞாபகம். உண்மையில் நானறிந்த வரையில், தன்னாலானவரை தன் பிள்ளைகளுக்கு அனைத்தையும் பெற்றுக்கொடுத்து விடவேண்டும் என்ற அவா அவரிடமிருந்தது. அவர் பிள்ளைகளை நிறையவே நேசித்தார். பிள்ளைகளின் சிறு வெற்றிகளிலும் குதூகலமடைகின்ற, அந்த வெற்றியின் நிமித்தமான பரிசுகளையும், அதன் பின்னணிக் கதைகளையும் மகிழ்வோடு பிறரிடம் பகிர்கின்ற ஒரு குழந்தை மனதுக்காரராக இருந்தார்.

மிகநெருக்கமாகப் பழகி அறிந்துகொள்ளாவிடினும், சில மனிதர்களுடைய இழப்புக்களை ஜீரணித்துக்கொள்ளப் பெரும் அவகாசம் தேவைப்படும். அவர்களுடைய இருப்பு தற்போது வெற்றிடமாகவில்லை என்று நம்பவே விரும்புவோம். அதற்கேற்றாற் போல்  எதுவுமே மாறவில்லையென நமக்கு நாமே சொல்லிக் கொள்கிற சமாதானங்களைக் கடந்தும், சில மனிதர்களின் வெற்றிடங்களை ஜீரணித்துக்கொள்ள காலம் பழக்கிவிடுகிறது. ஆனால் அவர்தம் நினைவுகள் மட்டும் என்றென்றைக்கும் மனதோடு தங்கிவிடுகிறது. அன்பு, ஆதுரம், அக்கறை என நேர்மறை  நினைவுகளை மாத்திரமே தந்தவர் "சஜிஷ்ணவன்ட அப்பா"

தனுஜா நாகராஜா

Comments