தாயக மண்ணில் சுருக்கெழுத்துக் கழகத்தினை ஆரம்பித்து, எம் இளைஞர் யுவதிகளின் தொழில் வழிகாட்டியாக இருந்த க.வ. சிவச்சந்திரதேவன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்ற துயரச் செய்தியை முகநூல் வழியாக அறிந்தபொழுது ஒருகணம் மலைத்து நின்றேன். அன்னாரது திடீர் மறைவுச்செய்தி கழக உறப்பினர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள், அவருடன் பழகியவர்கள் என்று அவரை நேசித்த அத்தனை நெஞ்சங்களையும் கலங்கடித்துவிட்டது.
தட்டெழுத்து, சுருக்கெழுத்துக் கலையினை
இளம் மாணவ சமூகத்திற்கு வழங்கவேண்டுமென்ற நல்நோக்கில் 1985இல் “வடமராட்சி சுருக்கெழுத்துக்
கழகம்” என்ற பெயரில் யா/சின்னத் தம்பி வித்தியாலயம், அல்வாயில்
முதல் கூட்டம்கூடி அங்குரார்ப் பணம் செய்துவைத்தார். நான் பல்கலைக்கழகத்தில் பயின்ற
காலங்களில் அவர் வழங்கும் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப் பணிகளைப்பற்றி அறிந்திருந்தாலும், 1991 இலிருந்து நான் வேலை நிமித்தம்
வெளி மாவட்டத்தில் இருந்தமையால் அவருடனான நேரடித் தொடர்புகள் இல்லாமல் இருந்தது. எனினும், 2005ஆம் ஆண்டிலிருந்து நான் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளராகக் கடமையாற்றத் தொடங்கியதிலிருந்து
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் காப்பாளர்களில் ஒருவன் என்ற வகையில் அவருடனும்
கழகத்துடனுமான தொடர்புகள் அதிகரித்தன. பலதடவைகள் கழகத்திற்குச் சென்று அவர் வழங்கும்
சேவைகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன், பல்வேறு இடர்காலங்களிலும் கழகத்தின் சேவை களை
இடையறாது வழங்குவதற்கும் என்னால் முடிந்த உதவிகளை வழங்கியிருந்தேன்.
காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களுடன்
கணினிப் பயன் பாட்டினையும் ஆங்கிலமொழி அறிவினையும் மாணவர்களுக்கு வழங்கியதுடன், இக்கழகத்தில்
பயிற்சி பெற்ற, சான்றிதழ் பெற்ற பலர் நீதிமன்றங்கள், வங்கிகள், உள்ளுராட்சி மன்றங்கள்
மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப் படுவதற்கும் அதன்மூலம்
வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள் வதற்கும் வழிசமைத்த உத்தமர் அமரர் சிவச்சந்திரதேவன்
அவர்களே!
அன்னார் எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாகவும்
எதிர்கால சிந்தனையுள்ள, நல்லதையே அதை இன்றே செய்யவேண்டுமென்ற இயல்பான குணம்மிக்க, நேர்மை, நாணயம், ஒழுக்கம்மிக்க ஒரு சிறந்த மனிதராக
இருந்தார். அவர் அடிக்கடி கூறுவார், "நாங்கள் எம் சமுதாயத்திற்கு நல்லதையே விட்டுச்செல்ல
வேண்டும். பிள்ளைகளுக்குப் பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும்”
என்று அதன்படியே அவர் இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.
அன்னாருடைய இழப்பினால் ஆறாத்துயரடைந்திருக்கும்
அவர்தம் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை வழங்கவேண்டுமென்றும் இறைவனை இறைஞ்சுகின்றேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
திரு.இ. வரதீஸ்வரன்
செயலாளர்,
மகளிர் விவகார அமைச்சு,
வடமாகாணம்.
Comments
Post a Comment