Skip to main content

தேநீர் கதைகள் - கீர்த்திகா மகாலிங்கம்

வாழ்க்கை தினம் தினம் எத்தனையோ நபர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறதுஇருந்தபோதிலும் அறிமுகமான எல்லோருமே நம் வாழ்வில் தங்கிவிடுவதுமில்லை,  நினைவில் நின்றுவிடுவதுமில்லை

அப்படி நம்  வாழ்வில் இடம்பிடித்த எல்லா உறவுகளாலும் இனிமையான நினைவுகளை மட்டும் வழங்கிச்செல்ல முடிவதுமில்லை.  எங்கிருந்தோ காரணமே இல்லாமல் நம் வாழ்க்கைக்குள் வந்த சிலரால் மாத்திரமே அது சாத்தியமாகிறது.

என் வாழ்க்கைப் புத்தகத்தின் சில ஏடுகளில் அது சாத்தியமாகக் காரணமாயிருந்த மனிதர்களில் இந்த தேநீர் கதைகளின் சொந்தக் காரருக்கு தனியிடமுண்டு.

நீண்ட நேரம் சிந்தித்தும் எங்களின் முதல் சந்திப்பு எங்கு நிகழ்ந்ததென்பதை சரியாக நினைவுகூர முடியவில்லை. ஆனால் சஜி அப்பா என்பது தான் அறிமுகம்.  

குடும்பத்தில் ஏனையோரைப் போலவே இயல்பான பேச்சும் புன்னகையும் முதல் சந்திப்பில் இருக்கக் கூடிய பெரியதோர் இடைவெளியை சுலபமாக நீக்கிவிட்டிருந்தது. 

அதன்பின் எங்கள் நட்பு படிப்படியாக வளர்ந்தது என்று சொல்லும்படியாக எந்தப்படிகளும் இருக்கவில்லை.  ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனும் ஏமாற்றங்களுடனும் வளரும் உறவுகளுக்குத் தான் அந்தப் படிக்கட்டுகளெல்லாம்.

சிவச்சந்திரதேவரின் குடும்பத்தில் நானும் ஒருவளைப்போல் உணர்வதற்கு எந்த எதிர்பார்ப்புகளோ, ஏமாற்றங்களோ படிகளமைக்கத் தேவையும் இருந்ததில்லை. காரணம், டீ வித் கோல்ட் மாரி பிஸ்கட் இந்த ஓர் இரசனையே போதுமாய் இருந்தது.

சொய்சாபுர, வத்தளையிலிருந்து கொஞ்சம் தூரமாகவே இருந்தபோதிலும் நான் அதிகளவில் பயணம் செய்த இடங்களில் அதுவுமொன்றாக காரணம் இவர்கள் வீடுதான். 

அலுவலக நேரங்களில் எப்பொழுது வீட்டிற்கு சென்றாலும் அங்கிள்இன் டீ தான்.  டீ போட்டுத் தருவதும் அந்த டீ குடித்து முடிக்கும் வரை ஒரு கதை சொல்வதும், அந்தக் கதையின் மிகுதியைத் தெரிந்துகொள்ள இன்னுமொரு டீ குடிப்பதென ஒரு சுழற்சி இயக்கமாகவே அமைந்தது அந்த நாட்கள்.

ஆரம்பகால தேநீர் கதைகளில் எல்லாம் அங்கிள்இன் கதாநாயகன், கதாநாயகியாக சஜி, ஸைந்தி, சுஹன், அபி மாத்திரமே இருந்தனர்.  சிறுவயதில் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடிய விதம், சஜி சுஹனுக்கு ஒரே மாதிரி வேட்டி கட்டியது, அபிக்கு ஐயர் வேஷம் போட்டது, சஜி முதல் முதலில் மேடையேறிப் பேசியது, புலமைப்பரிசில் சித்தியெய்தியது, கொழும்பிலே ஒவ்வொருவரையும் பாடசாலையில் சேர்த்தது என்று ஒவ்வொரு கதையைச் சொல்லும் பொழுதும் மீண்டும் ஒருமுறை அந்த நினைவுகளில் வாழ்ந்து இன்புற்றதை பல முறை அவர் கண்களில் நான் கண்டதுண்டு.

கதைகளையும் தாண்டி நிஜத்திலும் பல தருணங்களில் அவர்தம் பிள்ளைகளின் கனவுகளிலும், அவர்களது திறமைகளிலும், அவர்களின் வெற்றி தோல்விகளிலும் ஆரவாரமின்றி உறுதுணையாக நின்றதை அவதானித்ததுமுண்டு. 

இவ்வாறு நகர்ந்த நாட்களில் சுஹனும் நானும் ஒன்றாய் படிக்கத் தொடங்கியதும்,  சொய்சாபுரவிலிருந்து வெள்ளவத்தைக்கு இவர்கள் வீடு மாறியதும் எதிர்பாராமல் நிகழ்ந்தவை. “அக்கா வீட்ட வாறீங்களாஎன்பது அடிக்கடி வகுப்புகள் சற்று சீக்கிரமாக முடியும்போது சுஹன் கேட்கும் கேள்வி.  பெரும்பாலும் சரி என்பது தான் எனது பதில். 

தேநீர் கதைகளின் 2ஆம் அத்தியாயம் இங்கு தான் ஆரம்பமாகியது. வெள்ளவத்தை வந்ததிலிருந்து தேநீர் கதைகளில் 2 பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. 

தேநீர் போட்டுத்தருவது ஆன்ட்டி ஆகவும், கதைகளைச் சொல்வது அங்கிள் ஆகவும் மாறியது. கதைகளிலே இப்போது கதாநாயகன், நாயகி எல்லோரும் மாறியிருந்தனர்.

ஆம், இப்பொழுது அவரது எல்லாக் கதைகளிலும் அவரே மையமாய் இருந்தார். யாழ்ப்பாணத்தில் அவரது பிறப்பிடம், உறவுகள், பள்ளி நாட்கள்,  இளமையில் அவரது தனித்துவமான சிகையமைப்பு, வங்கியில் பணிபுரிந்த காலங்கள், சூறாவளிக் காற்று,  அடிக்கல் நாட்டு வைபவம், நவராத்திரி விழா கொண்டாட்டம் என அவர் கடந்து வந்த நாட்களைக் கையில் ஓர் ஆல்பத்தை வைத்துக் கொண்டு மீட்டிக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் உண்டு. 

எனக்கு இந்தக் கதைகள் யாவும் புதிதாக இருந்த போதும் ஏற்கனவே இவற்றைக் கேட்டு மனப்பாடமாய் இருந்த குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் ஒவ்வொரு முறையும் என்னுடன் சேர்ந்து கதையைக் கேட்டதுதான் சிறப்பம்சம். சிலரது பாணியில் மாத்திரமே கேட்ட கதைகளைத் திரும்பக் கேட்கும் பொழுதுகூட சலிப்படையவே மறந்திருப்போம். அப்படியொரு பாணி அவரிடம் இருநத்து.

ம்ம்ம்ம்....

நீண்ட காலமாக சொல்வதாகக் கூறியும் முழுமையாக சொல்லப்படாத காதல், திருமணம், யுத்தம், இடம்பெயர்வு, உடல்நிலை என எண்ணற்ற அனுபவங்கள்கூட தேநீர் கதைகளாகவே கடந்த ஆண்டு முழுமை கண்டது. 

இவையெல்லாவற்றையும்விட மிக அதிகமாக அவர் பற்றுக்கொண்டிருந்த இன்னும் ஒரு விடயம் இருந்தது.  சுருக்கெழுத்து!

சுருக்கெழுத்துக் கழகம் ஸ்தாபித்தது,  போட்டிகள் நடாத்தியது என ஒவ்வொன்றையும் சொல்லும்பொழுது ஒருவிதமான திருப்தியும் மகிழ்ச்சியும் பெருமையும் அவர் குரலில் வெளிப்படுவதை நான் மிகவும் இரசித்ததுண்டு. "முடிஞ்சா எனக்கு சுருக்கெழுத்து சொல்லித்தாங்க பாப்பம்" என்று வேடிக்கையாக சவால் விட்டதுமுண்டு.

எங்கள் தேநீர் கதைகள் தனித்து  அங்கிள்இன் அனுபவப் பகிர்வுகளோடு மாத்திரம் மட்டுப்பட்டிருக்கவில்லை. அரசியல், சட்டம், இலக்கியம் என்று எந்த விடயம் தொடர்பாகவும் விமர்சிக்கவும், கருத்து வேறுபாடுகளை முன்வைக்கவும் சம உரிமை கொண்டதாகவே அமைந்தது. அன்றாட வாழ்க்கையின் புலம்பல்களைக் கொட்டித் தீர்க்கவும், பின் இதுதான் நிதர்சனம் என சில விடயங்களைப் புரிந்துகொள்ளவும் தவறவில்லை. 

இத்தனை தெவிட்டாத நினைவுகளைப் பகிர்ந்த நீங்கள் தராசை சமன் செய்யக் கசப்பான அனுபவத்தையும் பகிர எண்ணினீர்களா என்ன?

ஆனால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாய் அல்லவா அது ஆனது எந்த வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் இது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களாக இன்னும் பல தேநீர் கதைகள் உங்களோடு நாங்கள் பகிர்ந்து இருக்க வேண்டும். அதுவரையாவது விண்ணுலகத்தார் பொறுத்திருந்திருக்கலாம்.

கீர்த்திகா மகாலிங்கம் 

Comments