Skip to main content

எமக்கு ஒளியேற்றிய தீபம் ஆசான் சிவச்சந்திரதேவன்! - புவனேந்திரன் ரமேஸ்வரன்

என்னைப்போன்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் அரச திணைக்களங்கள், வங்கிகள், நீதிமன்றங்களில் பணிபுரிவதற்கு அத்திவாரமிட்ட வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் தந்தையின் மறைவினால் எமது ஈரவிழிகள் இன்னும் காயவில்லை. 

1997ஆம் ஆண்டிலிருந்து ஆசானுடன் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது. அவ்வாண்டில் தமிழ் சுருக்கெழுத்துக் கல்வியையும், ஆங்கிலத் தட்டச்சுக் கல்வியையும் பயிலத் தொடங்கினேன். 2001ஆம் ஆண்டில் அரச நியமனம் கிடைக்கும் வரை கழகத்தின் சகல நிகழ்வுகளிலும் பங்குபற்றுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. அப்போது ஆசான் சிவச்சந்திரதேவன் அவர்கள் கழகத்தின் செயலாளராகப் பதவிவகித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருநாளில் தில்லையம்பலப் பிள்ளையார் தரிசனம் மற்றும் கழக ஆண்டு விழா என்பன சிறப்பாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும். கழக மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதற்கும் சிவச்சந்திரதேவன் சேர் பின் நிற்பதில்லை. கழகத்தின் பெயர்  என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதை என்றென்றும் எமக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பார். எந்த ஒரு விடயத்தினை எடுத்துக்கொண்டாலும் அதனை நன்கு திட்டமிட்டு நேரமுகாமைத்துவத்தினைக் கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமெனக் கூறுவார்  அவ்வாறான பண்பும், மற்றவரைக் கவர்கின்ற பேச்சும்கொண்ட ஆசான் இன்று எம்முடன் இல்லை யெனக் கூற மனம் தடுக்கின்றது.

கழகத்தின் மீது ஆறாத காதல் கொண்ட ஆசான் சிவச்சந்திரதேவன் அவர்கள் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் சென்றமை எமக்கு பெரும் வேதனையளிக்கின்றது. குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் கிருஷ்ணகுமாரி அக்காவிற்கும், பிள்ளைகளிற்கும் மன ஆறுதலை இறைவன் வழங்கவேண்டுமென்றும் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”

நன்றி

புவனேந்திரன் ரமேஸ்வரன்
செயலாளர்,
பருத்தித்துறை நகரசபை.

Comments