Skip to main content

எமது பயணத்தின் சில நினைவுகள் - லோ. சசிகலாதேவி

அமரர் திரு.சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, அவருடனான எமது பயணத்தின் சில நினைவுகளை மீட்க விரும்புகிறேன்.

முதன்முதலில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இலவச சுருக்கெழுத்து, தட்டச்சு பயிற்சி வகுப்புகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பயிற்றப்பட்ட முதல் மாணவ தொகுதியை சேர்ந்தவர் என்ற பெருமை எனக்குண்டு.

அதேபோல், யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் மட்டுமன்றி மல்லாகம், புத்தூர், கோப்பாய் என பல பிரதேசங்களிலும் அவரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று இலங்கை முழுவதுமுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் எனப் பலவற்றிலும் பெருமையுடன் தொழில்புரிய அடித்தளமிட்டுக் கொடுத்தது எமது ஆசானே!

அவரது சேவையைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்டதே வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம். இக்கழகத்தை உருவாக்கி சுருக்கெழுத்து, தட்டெழுத்து என்பவற்றுடன் ஆங்கிலம், கணினிக் கல்வி என்பவற்றையும் வழங்கி, மாணவரை நவீன உலகிற்கு வாழத் தயார் செய்தார்.

அவரது சேவையை அறிந்தோரும், அவரால் பயன்பெற்றோரும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்திற்கு தேவையான இடம், தட்டச்சுப் பொறிகள், கணனிகள் என பல்வேறு உதவிகளை வழங்கினர். அதுமட்டுமன்றி கல்வியை இக்கழகத்தில் நிறைவு செய்தபின் மேலதிக பயிற்சிகளை பிரதேச செயலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்கு வழங்கின. இவ்வாறான உதவிகள் தனி ஒருவருக்குக் கிடைத்ததெனில் அது அவரது தன்னலம் கருதாத சேவைக்குக் கிடைத்த சன்மானமேயாகும்.

பயிற்சி வழங்கியதோடு நிற்காமல் தொழில் வெற்றிடங்கள் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கி. அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வழிகாட்டி, அவர்களது வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் என அவரால் பயன்பெற்ற பலர் கூறக் கேட்டிருக்கிறேன். இவ்வாறு பலரது வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்த அவர் இன்று நம்முடன் இல்லாவிடினும் எம் நினைவில் என்றும் நிலைத்திருப்பார். அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு,  அவர்களுக்கு மனத் தைரியமும் சாந்தியும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

லோ. சசிகலாதேவி
கழகத்தின் முதலாவது செயலாளர்,
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்.


Comments