எமது திணைக்கள உத்தியோகத்தர் திருமதி கிருஷ்ணகுமாரியின் கணவர், இப்படித்தான் அவரை எனக்குத் தெரியும். வங்கி அலுவலாக வெள்ளவத்தை வந்தால் அலுவலகத்துக்கு
வந்து மனைவியை சந்திப்பார். கணவனும் மனைவியும் எனது அறைக்கு வெளியில் நின்று கதைத்துக்
கொண்டிருப்பார்கள். ஒரு 5 நிமிடம், 10 நிமிடம் சிலவேளை 15 நிமிடங்கள் கதைப்பார்கள்.
ஒருநாள் கவனித்துவிட்டு அவர் சென்றவுடன் கிருஷ்ணகுமாரியை அழைத்துக்கேட்டேன் "என்ன மிஸ்
வீட்டில் மனிசனோட கதைக்க நேரமில்லையோ" எனக் கேட்டேன். கிருஷ்ணகுமாரி வெட்கத்தோடு "இல்லை
மிஸ், எங்கடை பிரச்சினைகளை கதைத்தோம்" என்று கூறினார். வீட்டிலே சென்று சொல்லியிருப்பார்
போலும் அடுத்தமுறை அமரர் சிவச்சந்திரதேவன் வரும் போது நேரே என்னிடம் வந்து "மிஸ் நீங்கள்தான்
சரியாகப் புரிந்து கொண்டீர்கள்” என நகைச்சுவை ததும்பக் கதைத்தார். அன்றிலிருந்து எங்கு
கண்டாலும் என்னுடன் மிக நட்புரிமையுடன் கதைப்பார். சந்தை, சுப்பர் மார்க்கட் எவ்விடம்
கண்டாலும் உடனே நின்று விடுவார்.
மிக நல்ல மனிதர். எப்போதும் வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தை பற்றிதான்
கதை. ஒருமுறை கழகத்தின் ஆண்டு விழாவின் போது வெளியிடப்படும் நூலில் ஏதாவது ஒரு விடயம்
உங்களுடையது வரவேண்டும், எழுதித் தாருங்கள் என அடம்பிடித்தார். நான் எவ்வளவு மறுத்தும்
கேட்கவில்லை. பின்னர் ஏதோ எனக்குத் தோன்றியதை எழுதிக்கொடுத்தேன். வடமராட்சியில் உள்ள
ஏராளமானோர் ஏதோ ஒரு முறையேனும் பரீட்சை முடிந்தபின் இவரது கழகத்தில் தட்டச்சு சுருக்கெழுத்து, கணினிப் பயிற்சி பெற்றவர்கள் என்பது என்னுடன் கதைத்தவர்களில் பலர் சொல்லியிருக்கின்றார்கள்.
மிகவும் கண்டிப்புடன் கவனமாக சுருக்கெழுத்துப் பயிற்றுவிப்பாளராக இவர் திகழ்ந்துள்ளார்
என்பதை அறியமுடிகின்றது.
பிள்ளைகளின் முன்னேற்றத்தின் போதும் பெறுபேறுகளின் போதும் மிகவும்
மகிழ்ச்சியடைவார். பெருமை இல்லாதவர். சமூகப் பொறுப்பு நல்லெண்ணம் மிக்கவர். பிள்ளைகளின்
வளர்ச்சி கண்டு மிக மகிழ்ந்த போதிலும் முழு வளர்ச்சியையும் அதன் பயனையும் அடைய முதல்
இவ்வுலகை விட்டு நீங்கியமை பெருந்துயர். அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு
எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
கு.ஹேமலோஜினி
உதவிப் பணிப்பாளர்,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
Comments
Post a Comment