Skip to main content

சேவையால் உயர்ந்த செம்மல்! - விஜயலக்சுமி சுகுமாரன்

சேவையால் உயர்ந்த செம்மல்!

திருவாளர் சிவச்சந்திரதேவன் என்ற பெயரைக் கூறினாலே நினைவுக்கு வருவது வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமாகும். 35 வருட வரலாற்றைக்கொண்ட வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை வளர்த்தெடுத்த தந்தை அமரர் க.வ.சிவச்சந்திரதேவன் என்பதை எல்லோரும் அறிவார்கள். தட்டச்சு இயந்திரங்களுக்கு சக்தி கொடுத்த தேவன் இவர். இதன் மூலம் எத்தனையோ இளைஞர் யுவதிகளின் எதிர்கால வாழ்வின் வழிகாட்டியாக மிளிர்ந்தவர். தட்டச்சுப்பொறிகள் ஓய்வு பெறும் நிலை வந்தபோதும்கூட தொடர்ந்து சுருக்கெழுத்துக்கழகத்தின் இயக்கத்திற்கு உயிர் கொடுத்ததுடன், கணினிப் பயிற்சியையும் தொடர்ந்து இரண்டாம் மொழி சிங்களபாடக் கற்கைநெறியையும் ஆரம்பித்துவைத்து கழகத்திற்கு புத்துயிர் அளித்தவர். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் கற்ற அனைவரும் பல்வேறு நிறுவனங்களிலும் திணைக் களங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற்றதுடன், உயர் பதவியையும் வகித்தனர். இன்னமும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். எந்தப் பதவிகளில் எங்கிருந்தாலும் எல்லோர் நினைவிலும் நீங்காது நிலைத்திருப்பவர் அமரர் சிவச்சந்திரதேவன் ஆவார்.

1985ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சுருக்கெழுத்துக் கழகத்துடன் சிவச்சந்திரதேவன் அவர்களின் நாமம் இரண்டறக் கலந்துள்ளது. மக்கள் வங்கி ஊழியரான இவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்புள்ளவர். கழகத்தின் கூட்டங்களுக்கும் கழக விழாக்களுக்கும் அனைவரதும் பிரசன்னத்தைக் கொண்டுவரும் பண்பாளன். பாடசாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் சுருக்கெழுத்துக் கழகம் செய்த சேவைகள் அளப்பரியன. பாடசாலைகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிக்காக திரு. சிவச்சந்திரதேவன் பயிலுநர்களை அனுப்பி வைப்பார். பயிற்சிக்காக வரும் பயிலுநர்கள் மூலம் பாடசாலைகள் பெற்ற பயன்கள் பலவாகும். நானும் 1999இலிருந்து 2010 வரையான காலப்பகுதியில் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அதிபராக இருந்தபோது சுருக்கெழுத்துக்கழக பயிலுநர்கள்மூலம் பயன்பெற்று  சிவச்சந்திரதேவன் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

அமரர் வ.சிவச்சந்திரதேவன் கதைக்கும் வேகமும் அவரது சிரித்த முகமும் அவர் நினைக்கும் வேலையை செய்துமுடிக்கும் ஆவலை எடுத்துக்காட்டும்.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவை நெல்லியடியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடிய போது என்னையும் அழைத்து கௌரவித்தமைக்கு நன்றிகூறக் கடமைப் பட்டுள்ளேன்.

அவரது சேவை எமது மண்ணுக்கு இன்னும் தேவையாக இருக்கும் போது அவரது அமரத்துவச் செய்தியைக் கேட்கவேண்டி ஏற்பட்டுள்ளது. அவரது ஆத்ம சாந்திக்காக நானும் என் குடும்பத்தி னரும் அஞ்சலிக்கின்றோம்.

அமரர் வ.சிவச்சந்திரதேவனுடைய முன்னேற்றத்திற்கும் சேவைக்கும் உறுதுணையாக நின்று உதவியும் ஒத்துழைப்பும் நல்கியவர் அவரது துணைவியார் ஆவார். துணைவியாரும் புத்திரர்களும் புத்திரியும் அவரது ஆன்ம அமைதிக்காக வேண்டுவதுடன், நீடூழி நலமாக வாழ இறையருள் கிடைப்பதாக

ஓம் சாந்திசாந்தி!! சாந்தி!!!

திருமதி விஜயலக்சுமி சுகுமாரன்
ஓய்வுபெற்ற அதிபர்,
யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி.
ஓய்வுபெற்ற  பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி.

Comments