Skip to main content

உள்ளத்தில் நல்ல உள்ளம்! - க.தர்மலிங்கம்

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

புலோலியூரில் பிறந்து,  நல்ல மனப்பாங்கு கொண்டவனாய் வளர்ந்து,  உடுப்பிட்டியூரை புகுந்த இடமாக்கி, வள்ளுவன் காட்டிய இல்லற வாழ்வதனிலே இனிதே வாழ்ந்து, நல்ல உயர்ந்த பண்பு களைக் கொண்ட எளிமையான மனிதனே அமரர் சிவச்சந்திரதேவன். எல்லோரினதும் துன்பத்தில் பங்கெடுத்து எல்லோருக்கும் உதவி செய்வதே இவரின் முக்கிய பண்பியலாகக் காணப்பட்டது.

பாடசாலைக் கல்வி முடிந்தபின்  அடுத்து என்ன செய்வதென்று திக்குத்திசை தெரியாது தடுமாறிக் கொண்டிருந்த இளைஞர் யுவதிகளுக்கு கலங்கரைவிளக்காக வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஒரு பெருமகனார். தட்டச்சு, சுருக்கெழுத்துக் கற்பதன்மூலம் எல்லாத் திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் பல வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிந்த அமரர் சிவச்சந்திரதேவன், வடமராட்சியில் சுருக்கெழுத்துக் கழகத்தை அமைத்து, அதன்மூலம் பல மாணவர்களுக்குக் கற்பித்தார். இக் கழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்தைக் கற்றதன்மூலம்  பலர் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு அவதாரமானார். மக்கள் வங்கியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும்பொழுதே இக்கழகத்தை இயக்குவதற்குக் கடுமையாக உழைத்தார். அன்னார் அமரத்துவம் அடைந்த செய்தியை அறிந்த இவரின் பல மாணவர்கள் பத்திரிகை மூலமும் சமூகவலைத்தளங்களினூடாகவும் கண்ணீர் அஞ்சலியைப் பதிவிட்டிருந்தனர். இவற்றின் மூலம் இவர் மனித சமூகத்திற்கு ஆற்றய பணியின் மகத்துவத்தை அறியக்கூடியதாக இருந்தது.

நான் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி காலத்தில் தனது பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த அக்கறையுடைய பெற்றாராக இருந்தார். கல்லூரியைச் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை இன்னும் சிறப்பாக மேம்படுத்துவதற்காக 1AB  கல்லூரி அதிபர்களை அழைத்து, கழக சேமிப்பு நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாய் தந்துதவியதை 1AB  கல்லூரி அதிபர்கள் பலர் மனதாரப் பாராட்டி னார்கள். மேலும், சுருக்கெழுத்துக் கழகத்திற்குப் பல கணினிகளை வாங்கி, அதனைக் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கக் கடுமையாக உழைத்தார்.

சிலகாலமாக உடல் நலக்குறைவாக இருந்த சிவச்சந்திரவேதன்  இறைவனடி சேர்ந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கிவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரின் உறவுகள் மீள்நிலை பெறவும் இறைவனை வேண்டுகின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

திரு.க.தர்மலிங்கம்
முன்னாள் அதிபர்,
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி.

Comments