'நல்ல குரு வாய்ப்பது இறைவன் கொடுத்த வரம்”
1991ஆம் ஆண்டு
நான் க.பொ.த
(உ/த) எடுத்துவிட்டு தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் அவாவில் எனது உறவினர் திரு.வை.வேலும்மயிலும், AGA அவர்களிடம் 'உங்கள் அலுவலகத்தில் எனக்கொரு வேலை பெற்றுத்தாருங்கள்” என அணுகினேன். அவர் அப்போது தட்டெழுத்து
இயந்திரத்தில் ஏதோ தட்டிக்கொண்டிருந்தார். உருளையிலிருந்து வெளிப்பட்ட
காகிதத்தினை எடுத்து ஒப்பமிட்டு பதவி முத்திரையிட்டு ஒரு
பொதுமகனுக்குக் கொடுத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். விசைப்பலகையைப் பார்க்காது விரைவாகத் தட்டச்சிட்டமை எனக்கு மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்தது. 'நீங்கள் தொழிற்கல்வி ஒன்றைப் பெற்றுக்கொண்டு போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தால் வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் சிவச்சந்திரதேவன்
ஆசிரியரை அணுகும்படியும்” கூறி வழிப்படுத்தியிருந்தார்.
“அரச
சேவையாளர்களை சிறந்த புலமையுடன் உருவாக்கித் தந்த சிற்பி”
1992இல் ஆங்கில சுருக்கெழுத்து ஆசிரியராகவும் இருந்த சிவச்சந்திரதேவன் ஆசிரியரை அணுகி அப்போது ஆரம்பித்த புதிய பயிற்சி வகுப்பில் நானும் ஆங்கில சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பயிற்சியில் இணைந்து கொண்டேன். 1993இல் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கழகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட உள்ளகப் பயிற்சியினையும் நிறைவுசெய்திருந்தேன். 1992-2002 யுத்தம் இலங்கையில் உச்சமடைந்த காலப்பகுதி - தொலைபேசி வசதியில்லாத காலம் - நாம் நியமனம் ஒன்றைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம். க.பொ.த (சா/த) சுருக்கெழுத்து, தட்டச்சு பரீட்சைகளின் போதும் போட்டிப் பரீட்சைகளின் போதும் தொடர் பயிற்சி வகுப்புக்களை நடாத்தியும் வாகன வசதியுடன் தட்டச்சு இயந்திரங்களையும் வழங்கிப் பரீட்சை முடியும் வரை காத்திருந்து நாம் வெற்றியீட்டுவதற்கு உதவியிருந்தார். 1995இல் போட்டிப்பரீட்சை, 1996இல் நேர்முகப்பரீட்சை ஆகியவற்றில் தோற்றி 1997 டிசம்பரில் கொழும்பு பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தட்டெழுத்தாளருக்கான நியமனத்திற்கு அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெற்றது. அந்நாளில் யாழிலிருந்து கொழும்பு செல்வதில் ஏற்பட்ட சிரமம், போர்ச் சூழல் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் நியமனத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் மிகவும் கவலையடைந்த நேரத்தில் அன்று கழகத்தின் செயலாளராக இருந்த சிவச்சந்திரதேவன் ஆசிரியர் அவர்களினதும் கழகத்தின் காப்பாளராக இருந்த வேலும்மயிலும் உதவி அரசாங்க அதிபர் அவர்களினதும் முயற்சியினால் 1998 ஏப்ரலில் மாவட்டச் செயலகம், கச்சேரியில் எனது நியமனத்தினை - தட்டெழுத்தாளர் (தரம்-III) ஆகப் பதவியினைப் பொறுப்பேற்று ஓய்வூதியக் கொடுப்பனவுக் கிளையில் எனது பணியை ஆரம்பித்தேன். 2002இல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் தட்டெழுத்தாளர் (தரம்-II) ஆகப் பதவியுயர்வு பெற்று அரச முகாமைத்துவ உதவியாளர் (தரம்-II) ஆகப் பதவிமாற்றம் பெற்று 2013இல் கரவெட்டி பிரதேச செயலகத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் (தரம்-I) ஆகப் பதவியுயர்வு பெற்று சமூகசேவைக் கிளையில் பிரதம முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றினேன். 2019 தொடக்கம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் திட்டமிடல் கிளையில் பிரதம முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றி வருகின்றேன். எனது அரசசேவையின் உயர்வுக்கு காரணமானவர் எம் ஆசானே.
1994 முதல் 1998 வரை
எனது கழகச் செயற்பாடுகளில் தமிழ், ஆங்கில தட்டச்சு போதனாசிரியராகவும் இரு வருடங்கள் பொருளாளராகவும்
சேவையாற்றியிருந்தேன். அந்நேரத்தில் ஆசான் அவர்கள் மக்கள் வங்கி, யாழ். பிராந்திய அலுவலத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்தார். விடுமுறை நாட்களில் நேரிலும் அவ்வப்போது போக்குவரத்து வாகனங்களில் கழக அங்கத்தவர்கள் அல்லது
நலன்விரும்பிகள் ஊடாக - தொலைபேசி இல்லாத காலம் - கடிதங்கள் மூலமாக அறிவுறுத்தல்களை வழங்கி கழகச் செயற்பாடுகளில் தொய்வு ஏற்படாதவகையில் செயலாற்றியிருந்தார். பொருளாளராக இருந்த காலத்தில் ஒரு நாள் தேசிய
பயிலுநர் அதிகார சபையினூடாக படித்த மாணவர்களுக்கான பயிலுநர் கொடுப்பனவுத் தொகையினை அவர்களுக்கு அடுத்தநாள் வழங்க வேண்டியிருந்தது. அதனால் ஆசான் அவர்கள் ரூபா 80,000.00ஐ நாளை கொண்டுவந்து
மாணவர்களுக்குப் பிரித்து வழங்கும்படி கூறித் தந்திருந்தார். ஒரு பெரிய தொகையை
அன்று தந்து பொறுப்பினை ஏற்படுத்தியமை பின்னாளில் சிறாப்பராகக் கடமையாற்றும்போது தன்னம்பிக்கையுடன் செயற்படுவதற்கு உதவியாக இருந்தமை எனது வாழ்வில் மறக்கமுடியாத
சம்பவங்களில் ஒன்றாகும்.
அரச
சேவையில் இடமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இடமாற்றம் பெற்றுச் செல்லும் அலுவலகங்களில் தெரிந்த முகங்களில் கழகத்தில் படித்த ஓரிருவர் நிச்சயமாக இருப்பார்கள். அதேபோன்று எமது அன்றாடத் தேவைகளுக்காக
- பிரதேச செயலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், வலயக்கல்வி அலுவலகங்கள், பிரதேச சபைகள், நகரசபைகள், நீதிமன்றங்கள், வைத்தியசாலைகள் எங்கு சென்றாலும் எமது கழகத்தைச் சேர்ந்த
அறிமுகமானவர்கள் இருப்பார்கள்.
கழக
அங்கத்தவர்களை 3 பகுதியினராக பிரிக்கலாம். முதலாவதாக சுருக்கெழுத்துத் தட்டெழுத்துக்
கலையினூடாக நியமனம் பெற்று பதவிப்பெயர் மாற்றங்களைப்பெற்றும் பதவியுயர்வு பெற்றவர்கள், இரண்டாவதாக இக்கலையினைக் கற்று திறம்படச் செயலாற்றகின்ற ஆசிரியர்கள், அதிபர்கள், விரிவுரையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள்
போன்ற பதவியிலுள்ளவர், மூன்றாவதாக வெளிநாடு சென்று வசிப்பவர்களும் அங்கு பல்துறைகளில் கடமையாற்றுபவர்களுமாவர்.
'வடமராட்சி
சுருக்கெழுத்து கழக வரலாற்றின் நாயகன்”
30 வருடங்கள்
கொண்டது ஒரு தலைமுறை. 2015இல்
எமது கழகத்திற்கு வயது 30. “முத்து” என்ற வரலாற்றுப் புத்தகத்தினை
எழுதி வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்திற்கு ஒரு மகுடத்தைச் சூட்டி
அழகுபார்த்தார் எம் ஆசான். மேலும்
கழகத்தின் காப்பாளர்க ளாகவிருந்த வடமராட்சி வடக்கு, வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச செயலாளர்கள், கழக அங்கத்தவர்கள் பயிற்சிகளை
மேற்கொண்ட அலுவலகங்களின் திணைக்களத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் நலன்விரும்பிகள், நண்பர்கள் அனைவரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.
'ஒற்றுமையின்
பாலமானவர்”
கழக
அங்கத்தவர்கள் நியமனம் கிடைத்து எங்கு சென்றாலும் ஆண்டுதோறும் 'ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்” நிகழ்வில்
எல்லோரையும் பங்குகொள்ள அழைத்து ஒன்றுபடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவர். கழகத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள், புதிய மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள்
அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தவர்.
'சிறந்த
வழிகாட்டி”
இதுமட்டுமல்லாது, ஆசான் ஏற்பாடு செய்த சுற்றுலாக்களில் கரவெட்டி தில்லையம்பலப் பிள்ளையார் பொங்கல் நிகழ்வுகள், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கான யாத்திரை சுற்றுலாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிகாட்டுவான் படகில் இக்கரையிலிருந்து செல்லுகையில் "ஏழாற்றுப்பிரிவு” என்னும் சுழியினைக் கடந்து அக்கரையினை அடைந்து இறைவியைத் தரிசித்தது மட்டுமில்லாமல், கிழக்கில் உதித்த "சூரியோதயம்” பார்த்து வியந்தமை வாழ்வில் மறக்கமுடியாத சம்பவப்பதிவு. அதனூடாக "ஓர் இலக்கு நோக்கிய
பயணத்தில் இடர்கள் வரும். அதனை எதிர்கொண்டால் சூரியனைக்
கண்ட பனிபோல் மாறிவிடும்” என்ற உண்மையை அறிந்துகொண்டேன்.
நாம் சோர்ந்துகொள்ளும் போது தட்டிக்கொடுத்து முன்னேற்றியவர். எம்
வாழ்வில் இன்ப துன்ப நிகழ்வுகளில்
பங்குபற்றியவர். ஆனால் தனிப்பட்ட விதத்தில் எதுவித பிரதியுபகாரங்களையும் எதிர்பாராதவர்.
"தன்னலம்
கருதாச் சேவையாளன்”
"வாழும்
காலத்தில் வாழவேண்டிய இளந்தலைமுறைக்காக
வாழ்ந்து
தன்னலங்கருதா சேவை செய்த பெருமகனே, நேற்றும்
வாழ்ந்தீர், இன்றும் வாழ்கின்றீர், நாளையும் உம்
பெயர்
நீடித்து நிலைக்க மறைந்தும் வாழ்வீர்"
அன்னாரின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதுடன் அவர்தம்
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ இறைவனை
பிரார்த்திக்கின்றேன். நன்றி.
திருமதி
திருத்தேவி ஏகாந்தன்
பிரதேச
செயலகம், கோப்பாய்,
(பருத்தித்துறை
வீதி, வல்வெட்டித்துறை)
077 6687693
Comments
Post a Comment