Skip to main content

தட்டெழுத்துச் சுருக்கெருத்தாளர்களின் நிகரற்ற தலைவன் - ஆ.சத்தியமூர்த்தி

இற்றைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தட்டெழுத்து, சுருக்கெழுத்தை தமது நாளாந்த கடித தொடர்பாடல்களுக்காகப் பயன்படுத்தினர்.

அதன் பின்னர் மெதுவாக மெதுவாக கணினி இயந்திரங்கள் கடித தொடர்பாடல்களுக்கான தொழில்நுட்ப சாதனமாக மாறத் தொடங்கியது.

இருந்தும் இன்று வரை இலங்கையில் நீதிமன்றங்களிலும் பொலீஸ் நிலையங்களிலும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மூலமான நிர்வாக நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கியாளராக பணிபுரிந்து கொண்டு வட பிராந்தியத்தில் தட்டெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர்களது பணியின் மகிமையையும் அதன் உத்தம சேவையையும் எடுத்துக்காட்டுவதற்காக மிகவும் முனைப்புடன் செயற்பட்டவர் திரு...சிவச்சந்திரதேவன்; என்றால் மிகையாகாது.

வடபிராந்தியத்தில் பல நுhற்றுக்கணக்கான தட்டெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை சிவச்சந்திரதேவன் அவர்களைச் சாரும்.

தட்டெழுத்து, சுருக்கெழுத்தாளர்களுக்கான சலுகைகள், உரிமை களை வென்றெடுப்பதற்காக வடமாகாண தட்டெழுத்தாளர், சுருக் கெழுத்தாளர் தொழிற்சங்கத்தை உருவாக்கி அரும்பணியாற்றியுள்ளார். இதன் மூலம் இப்பதவிகளை வகித்த பல உத்தியோகத்தர்கள் பெரும் நன்மைகளை பெற்றுள்ளனர்.

சங்கத்தினுடாக தட்டெழுத்து, சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புக் களை நடாத்தி அரசாங்க, தனியார் நிறுவனங்களின் தேவைகளை எமது மண்ணிலேயே அதற்கான தகைமையுள்ள வளத்தை பெற்றுக் கொடுத்தார்.

அரசாங்க தனியார் நிறுவனங்களினால் அவ்வப்போது தட்டெழுத்தாளர்,  சுருக்கெழுத்தாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரும்போது இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை ஊக்குவித்து குறிப்பிட்ட நியமனங்களை பெறுவதற்கு ஏற்ற உதவிகளையும் புரிந்துள்ளார்.

இப்பதவிக்கான எழுத்து செய்முறை, தடைகாண் பரீட்சைகள் இலங்கையில் எந்த மாவட்டத்தில் நடைபெற்றாலும் அதற்கான தட்டெழுத்து இயந்திரங்களையும் வழங்கி, வாகன ஏற்பாடுகள் செய்து வழங்குவதில் ஒருபோதும் பின்நிற்கமாட்டார்.

நியமனங்களில் ஏற்படக்கூடிய தடைகள், இடையுறுகள் போன்றவற்றை தொழிற்சங்கத்தின் மூலம் உரிய அதிகாரிகளுடன் நேரடியாகவும் கடிதங்கள் மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்தி நியமனங்களை பெற்றுக்கொடுப்பதில் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தவர்.

உயர்கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கும் பல்கலைக் கழகத்திற்கான தகைமையைப் பெற முடியாதவர்களையும் நிரந்தர கௌரவ வாழ்வியலை பெற்றுக்கொடுப்பதற்காக தட்டெழுத்து, சுருக்கெழுத்துப் பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்ததன் மூலம் இன்று பலரை பெருமையுடன் கூடிய நிரந்தர வருமானத்துடன் கௌரவமான குடும்ப வாழ்க்கைக்கு வித்திட்டவர்.

அன்றைய தட்டெழுத்து சுருக்கெழுத்தாளர் பதவியில் இணைந்து கொண்டவர்கள் இன்று பெருமைதரும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாகி அரசாங்கத் திணைக்களங்களின் கிளைத் தலைவர்களாகவும் நிர்வாகத்திற்கான முக்கியமான கடமை களையாற்றுவதற்கும் ஒருசிலர் பெருமை சேர்க்கும் பதவிகளை தக்கவைப்பதற்காக சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்த உத்தமர்.

தட்டெழுத்து இயந்திரங்கள் அரசாங்க, தனியார் நிறுவனங்களிலிருந்து மறைந்து தற்போது கண்காட்சிப் பொருளாக மாறிவிட்டன. ஆனால் இதன் மூலம் வாழ்வியலைப் பெற்றுள்ளவர்கள் சிவச்சந்திரதேவனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

பொதுசேவை செய்வதிலும் விருப்பமும் நல்ல மனமும் நல்ல தலைமைத்துவ பண்புகளுடன்; சிநேகபூர்வமான முகாமைத்துவ சிறப்புமிக்க பக்குவமுமிருக்க வேண்டும். இவையெல்லாம் கண்டோம் சிவச்சந்திரதேவனிடம்.

தானமும் பிச்சையும் தற்காலிகமான மகிழ்வு. ஆனால் நிரந்தர வாழ்வளிப்தென்பது நிரந்தரமானதும் மகத்தானதும்.

சிரித்த முகமும் நற்குணங்கள் கொண்ட வடமராட்சி பிரதேசம் பெற்றெடுத்த புதல்வனான சிவச்சந்திரதேவனை யாராலும் மறக்க முடியாது.

அவரது ஆத்மா சாந்தி அடைவதாக

 ஓம் சாந்திஓம் சாந்திஓம் சாந்தி

அன்பின்
.சத்தியமூர்த்தி
நிர்வாக உத்தியோகத்தர்,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.


Comments