பலர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள், சிலர் மனிதர்களுக்கு பயனுள்ளவர்களாக வாழ்ந்து அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நிலைபெற்று நிற்கிறார்கள். சமீபத்தில் திடீரென காலமான திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு மிகுந்த வேதனையடைகின்றேன். அவர் எனது மூத்த சகோதரனின் உற்ற நண்பன். சுமார் 40 ஆண்டு காலம் எங்கள் குடும்பத்தோடு மிக அன்பாகப் பழகியவர். நேற்றுப்போல இருக்கின்றது, எனது மூத்த சகோதரியின் திருமணவீடு. அந்தக் காலவழமை, வீட்டிலேயே பெரிய பந்தல்போட்டு, அலங்காரம் செய்து, புற்பாய் விரித்து நிலத்திலிருந்து அனைவரும் திருமண வைபவத்தில் பங்குபற்றுவார்கள்.
1978இல் எங்கள் வீட்டுத் திருமணவீட்டில் காலை 4.00 மணிக்கு கையில் விளக்குமாற்றுடன் திருமணப்பந்தலை ஒரு சிவந்த மேனியர் பன்னீர் தெளித்துக் கூட்டினார். அவரது ஆரவாரங்கண்டு நானும் நண்பர்களும் எழுந்தோம். அவர்தான் அமரர் சிவச்சந்திரதேவன். அந்த இனிய நட்பு அவரது இறப்புவரை என் குடும்பத்தோடு தொடர்ந்தது. கடைசியாக நான் சந்தித்தது கொழும்பு தமிழ்ச் சங்க விழாவில். யான் உரையாற்றிவிட்டு வரும்வரை கீழே காத்திருந்தார். கரங்களைப் பற்றி அரவணைத்தார். அந்தக் காட்சி பசுமையாகவுள்ளது. காலன் இவ்வளவு விரைவாக அழைப்பான் என்று யாருக்குத்தான் தெரியும்?
புலோலி, புற்றளையில் புகழ்பூத்த குடும்பத்தில் பிறந்தவர். மிக இளம் வயதில் வங்கி உத்தியோகத்தராக இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சுருக்கெழுத்துத் துறையில் ஆழமாகக் கற்று, பலருக்கு அத்துறையைக் கற்பித்து பலரை வாழவைத்தவர். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தைத் தோற்றுவித்து விடுமுறை நாட்களிலும் இரவு 7.00 மணிக்குப் பின்பும் பல இளையவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் அரச உத்தியோகம் பெற அயராது உழைத்தவர். முறைசாரா கல்வித் திட்டத்தின்கீழ் கல்வித் திணைக்களம் நடாத்திய பல பயிற்சி நிலையங்களில் சுருக்கெழுத்துத் துறையை கற்பித்த பெருமை இவரைச் சாரும்.
மல்லாகம் மகாவித்தியாலத்தில் 1980களில் இரவு தங்கியிருந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு சுருக்கெழுத்தைப் போதித்தார். அவரிடம் கற்றவர்கள் நீதிமன்றங்களிலும் திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புப் பெற்றனர். சேவை நோக்கமே அவரது முழுநேரத் தியானம். அத்தகையோரை இன்று சந்திக்க முடியாது. என் செய்வோம்? பலருக்குப் பயன் தந்து, பண்புடைய மனிதனாக வாழ்ந்து, மண்ணைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். இந்த இனிய மனிதனை இனிமேல் சந்திக்க முடியாது என்பது வேதனை தருகின்றது. எனது மூத்த சகோதரன் இளைப்பாறிய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்கள், தனது உற்ற நண்பன் சிவச்சந்திரதேவன் பற்றி சொல்லிக்கொண்டேயிருக்கின்றார். அன்னாரின் ஆத்மா புற்றளை விநாயகரின் திருவடியில் நிரந்த ஆறுதல்பெற பிரார்த்தித்து அமைகிறேன்.
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்
(தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை/சிவபூமி அறக்கட்டளை)
அதிபர்,
ஸ்கந்தவரோதயா கல்லூரி,
சுன்னாகம்.
Comments
Post a Comment