Skip to main content

விநாயகப் பெருமான் தாள் சேர்ந்தார்

பிறப்பு என்ற நிகழ்வு இடம்பெறும் இந்தப் பூமியிலே இறப்பென்பதும் நிச்சயிக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே.  இந்தப் பிறப்பு, இறப்பு என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஒவ்வொரு ஜீவராசியினதும் வாழ்க்கைக்காலம்.  இக்காலப்பகுதியில் மானிடராகிய நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் எம்மை சமூகத்திற்கு இனங்காட்டி மதிப்பீடு செய்ய வைக்கின்றது.

அந்தவகையிலே அமரரான சிவச்சந்திரதேவன் அவர்களும் தனித்துவமாக மதிப்பீடு செய்யவேண்டிய மாமனிதராவார். பூமியின் இயல்பை அதில் வளரும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்கள் காட்டிநிற்கும்.  நல்ல குடும்பப் பிறப்பின் இயல்பை அந்த மனிதனின் பேச்சு, ஒழுக்கம், தவறுகளுக்கு அஞ்சுதல், பிறருக்கு உதவுதல் போன்ற குணங்குறிகள் காட்டி நிற்கும்.  

பிறருக்கு உதவுதல் என்ற வகையில் அமரர் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது. தான் கற்றுத்தேர்ந்த தட்டெழுத்து-சுருக்கெழுத்து பாடநெறியின் நிபுணத்துவத்தை "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்" என்ற அமைப்பை உருவாக்கி காலத்துக்கு காலம் பல நூறு மாணவர்களை இத்துறையிலே சிறப்புத் தேர்ச்சி அடைய வைத்துள்ளார்.  கணினித்துறை அறிமுகத்துக்கு முந்திய காலப்பகுதியில் அநேக அரச, தனியார் நிறுவனங்களில் தட்டெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர் பதவிகளில் இருந்தவர்களில் பெரும் பாலானவர்கள் இந்தக் கழகத்திலேயே கற்றுத் தேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
செருக்கற்ற அடக்கம் எல்லோருக்கும் நன்மையையே தரும். எனினும் பதவி, கல்வி, செல்வம் உடையவர்களின் அடக்கம் மற்றொரு செல்வமாகும். அதன்படி திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள் எல்லோருடனும் எளிமையாகவும் இனிமையாகவும் இளகிய மனத்துடனும் நடந்துகொள்வதுடன், மற்றையவர்களும் தம்முடன் எளிதாகப் பழகக்கூடிய இயல்புடனும் வாழ்ந்து வந்தார்.  

அமரரவர்கள் தமது இல்லறவாழ்வை உடுப்பிட்டியில் பண்டகை என்ற பகுதியில் விதானைவளவு என்ற பெருமைமிக்க குடும்பத்தில் அமைத்துக்கொண்டவர்.  சிற்பியானது தான் சிதைந்துபோனாலும் அழியாத பெருமைமிக்க முத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றது. இதைப்போலவே அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் நான்கு பிள்ளைச் செல்வங்களை பெறும் பெரும் பேறு பெற்றுள்ளார்.  தனது பிள்ளைகள் படித்தவர்கள் கூடிய சபையில் கல்வியாளர்கள், அறிவாளிகள், ஆற்றல்மிக்கவர்களெனப் பாராட்டும்படி செய்வதே தந்தையின் கடமையென உணர்ந்து செயற்பட்டவர்.  

பண்டகையை வசிப்பிடமாகக் கொண்ட நாளிலிருந்து அமரரின் துணைவியாரின் பாரம்பரிய குலதெய்வமாக விளங்கிய பண்டகைப் பிள்ளையாரை வணங்கிவந்தார். இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகப் பக்திபூர்வமாக செய்வதுடன் ஆலய உற்சவத்தின் மகுடமாய் விளங்கும் அவர்கள் குடும்பத்தவரின் உபயமான தேர்த் திருவிழாவிலும் தனது பக்திபூர்வமான பங்களிப்பை வழங்கிவந்தவர்.  

அன்னாரின் இழப்பானது எமது ஊருக்கும் அவரை அறிந்த அரச அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள், குறிப்பாக அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.  இந்தப் பெருந்துயரை குடும்பத்தவர் தாங்கக்கூடிய சக்தியையும் தோன்றாத் துணையாக நின்று அன்னாரின் ஆத்மா வழிகாட்ட வேண்டும் என்று பண்டகைப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் சார்பில் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.
 
பண்டகைப் பிள்ளையார் ஆலயபரிபாலன சபையினரும் அடியார்களும்

Comments