‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”
தமிழ் மூதாட்டி ஒளவையார் மானிட வாழ்விற்குத் தேவையான, தேவையற்ற பல விடயங்களை பாடிவிட்டுச் சென்றுள்ளார். அதில், அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றுகூறி, அப்படிப் பிறந்தவன் தானமும் தவமும் தரித்தல் அரிது என்றும், அப்படித் தானமும் தவமும் தான் செய்வராகில் ‘வானவர் நாடு வழிதிறந்திடுமே” என்று கூறியதற்கிணங்கஇ காலஞ்சென்ற திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள் வாழ்ந்து இறையடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் திருமதி அருந்தவராணி கிருஷ்ணானந்தம் (சித்த ஆயள்வேத வைத்திய அதிகாரி, கைதடி) மூலம் எனக்கு அறிமுகமானவர். இவர் பார்ப்பதற்கு சாதுவாகவும் மற்றவரைக் கவரும் வண்ணம் அவருடைய நடவடிக்கைகள் காணப்படும். முதல்முதல் இவரைச் சந்தித்தபோது எனது மனதிலும் இவருடைய தோற்றம் பதிந்துவிட்டது.
2016ஆம் ஆண்டு இவரின் சொய்சாபுர வீட்டுக்கு இவரின் மைத்துனர் கிருஷ்ணானந்தத்துடன் எனது ஒரு முக்கிய தேவை காரணமாக இரவு 8.00 மணியளவில் சென்றிருந்தேன். அப்போது இவரின் அன்பான வரவேற்பு என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. நீண்ட வருடங்களுக்கு முன்னால் ஒரேயொரு தடவை அறிமுகமாகிய என்னை ஏதோ அடிக்கடி சந்தித்த நபர் போல அமர்த்தி, நிறைகுறைகளை மனம் திறந்து பேசினார்.
ஆண்டவன் நல்லவர்களை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதில்லைப்போலும். கூரிய பார்வை, எதையும் தீர்க்கமாகச் சிந்தித்துக் கடைப்பிடிக்கும் பண்பு, அடுத்தவர்களுடைய நடவடிக்கைகளுக்குள் மூக்கைநுழைக்காத பெருந்தன்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லப்படும் மனித விழுமியங்களின் மொத்த உருவம். ஆ.... இன்று இவ்வூலகில் இல்லையே!
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற முதுமொழிக் கிணங்க, திரு. சிவச்சந்திரதேவன் தன் வாழ்நாளில் பாதிப்பங்கை அதாவது, 35 ஆண்டுகள் சுருக்கெழுத்து, தட்டச்சுத் துறையில் பிரதிபலன் பாராமல் பலருக்கு இலவசமாக அக்கல்வியைப் போதித்த பெருந்தகை! இதன் காரணமாக எத்தனை குடும்பங்கள் தங்கள் வறுமையைப் போக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்லாசான் இன்று நம்மிடையே இல்லையே! என்பதை எண்ணும் போது நெஞ்சில் ஈட்டியால் பாய்ச்சிய வேதனை ஏற்படுகின்றது.
‘ஈன்று புறந்தருதல் தாயின் கடனே
சான்றௌன் ஆக்குதல் தந்தையின் கடனே”
அந்த வகையில் இவர் தனது பிள்ளைகள் நால்வரையும் நல்முத்துக்களாக, புடம்போட்ட தங்கங்களாக கல்வியில் மட்டுமல்லாது, ஏனைய துறைகளிலும் வல்லவர்களாக ஆக்கிய பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட பிள்ளைகளின் நல்ல நிலையைக் கண்டு பெருமிதமடைய இன்று அவர் இல்லையே!
சென்ற வருடம் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிஷேக நிகழ்வில் நான் ஓதுவாராகக் கலந்துகொண்டபோது, சிவச்சந்திரதேவன் அவர்கள் குடும்ப சகிதம் வந்திருந்தார். அன்றையதினம் அவருடன் உரையாடியது இன்றும் என் மனக்கண்முன் நிற்கிறது.
மானிட வாழ்க்கையானது நிரந்தரமற்றது. பிறப்பவர் யாவரும் இறப்பது உறுதி. இப்பூவூலகில் எந்தவோர் உயிரும் நிலைத்திருக்க முடியாது.
சிவச்சந்திரதேவன் அவர்கள் தன்னுடைய பிள்ளைகளை அடுத்தவர் குறை கூறாவண்ணம் கல்வியில் மட்டுமல்லாது, சமூகத்தில் ஏனைய துறைகளிலும் வல்லவர்களாக வேண்டுமென்று அவர்களுடன் தந்தை என்ற நிலையில் இல்லாது ஒரு நண்பன் போல் இருந்து அன்புடன் வளர்த்துள்ளார் என்பதைக் காணும்போது, ஒரு தந்தை தன் குடும்பத்தை எப்படி வழிநடத்த வேண்டுமென்ற முன்னுதாரண புருஷனாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சி. பொன்னம்பலம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆதீன கர்த்தா,
ஸ்கந்தபுரம்,
கிளிநொச்சி.
Comments
Post a Comment