1972ஆம்
ஆண்டு
யாழ்.
தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆங்கில
சுருக்கெழுத்துப் பயிற்சியை செல்வி
மனோரஞ்சிதமலர் விஸ்வலிங்கம் அவர்களிடம் பெற்றேன்.
1973 இல்
நான்
பெற்ற
பயிற்சியை ஏனையோருக்கும் போதிக்க விரும்பினேன். இதற்கான இடவசதியைப் பெறுவது கஷ்டமாக இருந்தது. இருந்தும் யாழ்.
பிறவுன் வீதியில் இயங்கிய தனியார் கல்வி
நிறுவனம் ஒன்றில் மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா
2/=
கொடுத்து வகுப்பொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்தேன். எனினும் அது
சாத்தியப்படவில்லை.
யாழ். பஸ் நிலையத்திற்குப் பின்னால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Frajmal Enterprises என்ற நிறுவனம் ஆங்கிலச் சுருக்கெழுத்துப் போதிக்க ஒருவர்
தேவை
என
விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு
நான்
விண்ணப்பித்திருந்தும் எனக்கு
அந்த
வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இக்கால கட்டத்தில் தொழில்
ஒன்றைப் பெறவேண்டுமாயின் தொழில்
திணைக்களத்தில் எமது
பெயரைப் பதிவு
செய்து
இலக்கம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதனை
நான்
முன்னர் அறிந்திருக்கவில்லை. இதன்
பிரகாரம் என்னுடன் படித்த
கோண்டாவில்லைச் சேர்ந்த சுந்தரம் சிவலிங்கம் என்ற
நண்பர், தொழில்
திணைக்களத்தில் தமது
பெயரைப் பதிவு
செய்ததன் காரணமாக, யாழ்.
ஸ்ரான்லி வீதியில் உள்ள
மக்கள்
வங்கிக் கிளைக்கு ஆங்கில
சுருக்கெழுத்தாளர்-தட்டெழுத்தாளர் நியமனம் தற்காலிக அடிப்ப
டையில்
கிடைத்தது. இதன்
பின்னர் ஒரு
நாள்
அவர்
என்னுடன் கதைத்தபோது பின்வருமாறு கூறினார், “நீ
தொழில்
திணைக்களத்தில் பெயரைப் பதிவு
செய்திருந்தால் உனக்கு
இந்நியமனம் கிடைத்திருக்கும்”. ஏனென்றால் இதற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்தியவர் உனது
ஊரவரான
திரு.
செல்வநாயகம், (உதவி
பிராந்திய முகாமையாளர், மக்கள்
வங்கி,
அநுராதபும்) என்றார். பின்னர் அவரெனக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு விடைபெற்றார்.
1973 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய Air Ceylon நிறுவனத்திற்கு ஆங்கிலச் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு ஆள்
தேவையென ஈழநாடு
பத்திரிகை விளம்பரம் மூலம்
அறிந்து விண்ணப்பித்திருந்தேன். ஒரு
குறித்த தினத்தில் என்னை
நேர்முகப் பரீட்சைக்கு அழைத்தார்கள். அங்கு
நான்
சென்றபோது என்னுடன் படித்து மக்கள்
வங்கியில் வேலை
செய்யும் எனது
நண்பர்
சிவலிங்கமும் வேறு
சிலரும் வந்திருந்தனர். அன்று
அவர்
என்னுடன் பெரிதாகக் கதைக்கவில்லை. அதன்
பின்னர் இந்த
நியமனம் தொடர்பாக எதுவும் எனக்குத் தெரியவில்லை.
ஒரு தடவை வேம்படி வீதி
வழியாக
அவர்
Air Ceylon சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளைச் சீருடையுடன் செல்வதைக் கண்டு
அவர்
அங்கு
நியமனம் பெற்று
வேலை
செய்கிறார் என
அறிந்து கொண்டேன். அவர்
தனக்கு
நியமனம் கிடைத்தமையை நண்பன்
என்ற
முறையில் தெரிவித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்.
இதேவேளை பருத்தித்துறை
வர்த்தகக் கல்லூரியில் 6 மாத
கால
தமிழ்
சுருக்கெழுத்து-தட்டெழுத்துப் பயிற்சியைப் பெற்றேன். இப்பயிற்சியைப் போதித்தவர் அதன்
உரிமையாளரும் இலங்கையில் தமிழ்
சுருக்கெழுத்துக்கலையின் முன்னோடியுமான திரு.வே.வா. வேலுப்பிள்ளை ஆவார்.
இக்காலப்பகுதியில்
பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த சுருக்கெழுத்தாளர் தட்டெழுத்தாளர் பதவிக்கான விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பித்தேன். செயன்முறைப்பரீட்சைஇ நேர்முகப் பரீட்சை என்பவற்றிற்கு கொழும்பிற்கு சென்ற
நிறுவனங்களில் ஞாபகத்தில் இருப்பதில் சிலவற்றைக் கீழே
தருகிறேன்.
இலங்கை மத்திய வங்கி
தேசிய சேமிப்பு வங்கி
அரச ஈட்டு முதலீட்டு வங்கி
இலங்கை துறைமுக அதிகாரசபை
தேயிலை ஆராய்ச்சி நிலையம்இ தலவாக்கலை
கூட்டுறவு மொத்த வர்த்தக நிலையம் (C.S.E.)
இலங்கை புகையிரதக் கூட்டுத்தாபனம், கண்டி
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
ஹற்றன் நஷனல் வங்கி
காங்கேசன்துறை
சீமெந்துக் கூட்டுத்தாபனம்
மக்கள் வங்கி
மற்றும் பல தனியார் நிறுவனங்கள்
எனக்கு நினைவில் உள்ளவரை சுமார்
75ற்கு
மேற்பட்ட தடவைகள் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் பரீட்சைக்காகக் கொழும்பிற்குச் சென்றிருப்பேன். சிலவேளைகளில் தட்டச்சு இயந்திரத்தினையும் நானே
கொண்டு
செல்ல
வேண்டியிருக்கும். அக்காலப் பகுதிகளில் தட்டச்சு இயந்திரங்களைச் சொந்தமாக வைத்திருப்போர் குறைவு.
அப்படி
வைத்திருந்தாலும் கூட
அதனை
இரவலாகக் கொடுக்க மனம்
உள்ளவர்களைக் காணமுடியாது.
ஒரு தடவை கூட்டுறவு மொத்த
விற்பனை நிலையத்திற்கு (C.S.E.)
செயன்முறைப் பரீட்சைக்குத் தட்டச்சு இயந்திரத்துடன் வரும்படி கடிதம்
வந்தது.
நண்பர்
ஒருவரின் உதவியுடன் கண்டியில் ஆங்கிலத் தட்டச்சு இயந்திரமொன்றை இரவலாகப் பெற்று
கொழும்புக்குக் கொண்டுசென்று செயன்முறைப் பரீட்சையைச் செய்தேன். எனக்குப் பரீட்சை முடிவடைந்த சமயம்
அங்கு
பரீட்சைக்கு வந்த
சிங்களச் சகோதரர் தாம்
பரீட்சைக்குத் தோற்ற
எனது
தட்டச்சு இயந்திரத்தை இரவலாகக் கேட்க
நானும்
கொடுக்க அவர்
பரீட்சையை செய்தபின் அதனை
திருப்பித்தந்தார். நான்
அதனைக்
கண்டிக்குச் சென்று
உரிமையாளரிடம் கொடுத்த பின்
எனது
வீடு
வந்தடைந்தேன். என்னிடம் தட்டச்சு இயந்திரத்தைப் பெற்ற
நண்பரின் பெயர்இ
முகவரியைப் பெற்றுக்கொண்டு எனது
விபரத்தையும் அவரிடம் கொடுத்தேன். சில
மாதங்கள் சென்றபின் அந்த
நண்பரிடம் இருந்து எதிர்பாராத வகையில் ஒரு
கடிதம்
கிடைத்தது. அது,
தான்
C.S.E. இல்
நியமனம் பெற்றுள்ளேன் என்றும், அதற்கு
எனக்கு
நன்றி
தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தார்.
நான் பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் கொழும்பிற்குத் தட்டச்சு இயந்திரத்தினைக் கொண்டுசென்று அதன்மூலம் வேறொருவர் பயன்பெற்றமையையிட்டு முதலில் கவலையடைந்தேன். பின்னர் எல்லாம் நன்மைக்கே என
எனது
மனதைத்
தேற்றிக் கொண்டேன்.
1973 இறுதிப் பகுதியில் புலோலி
கமநலசேவை நிலையத்தில் தட்டெழுத்து-லிகிதர் வேலைக்கு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்தேன். அந்த
நேர்முகப் பரீட்சையின்போது அப்பதவிக்கு நான்
தெரிவு
செய்யப்படவில்லை என்றும் பிறிதொரு திகதியில் புத்தூர் கமநல
சேவை
நிலையத்தில் என்னை
வேலைக்குச் சேர்க்கச் சொல்வதாகவும் கூறினார். இதற்கமைய சுமார்
ஒரு
மாதத்திற்கு மேல்
அங்கு
வேலை
செய்தேன். எனினும் எனக்கு
உரிய
கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பின்பு
அதுபற்றி கணக்குப் பகுதியில் விசாரித்தபோது என்னை
வேலைக்கு அனுமதித்த அதிகாரி எனது
கொடுப்பனவைப் பெற்றுள்ளார் என
அறிந்துகொண்டேன். இது
எனக்கு
அதிர்ச்சியைத் தந்தது.
இதன்
பின்னர் நான்
அங்கு
வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.
மேற்குறித்த சம்பவங்கள் எனக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத்தந்துள்ளன.
1974இல்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்காக சுவீகரிக்கும் வேலையை
யாழ்ப்பாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். இது
தொடர்பான வேலைகளைச் செய்வதற்காக தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கிலத் தட்டச்சுப் படித்த
என்போன்ற இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொண்டனர். இதற்காக காலையிலும் மாலையிலும் போய்
வருவதற்காக போக்குவரத்து வசதிகளைச் செய்துதந்ததுடன் பகல்
போசனமும் தந்தனர். இதற்கான செலவுகள் பற்றி
எமக்கு
ஏதும்
முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. பகல்
போசனம்
உண்மையிலே மிகவும் நன்றாக
இருப்பதையிட்டு சந்தோஷப்பட்டோம். ஆனால்
மாதமுடிவில் எமக்கு
ஓர்
அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் எமது
கொடுப்பனவில் கணிசமான தொகை
பகல்
போசனத்திற்காகக் கழிக்கப்பட்டது. அதன்
பின்னர் நாம்
அங்கு
பகல்
போசனத்தை தவிர்த்துக் கொண்டோம். இங்கு
சுமார்
4 மாதங்கள் சந்தோசமாக வேலை
செய்து
ஓர்
அனுபவச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டோம்.
இதேவேளை யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் எனக்கு
சுருக்கெழுத்து-தட்டெழுத்து போதித்த ஆசிரியை வெளிநாடு செல்லப்போவதாகவும் தான்
படிப்பித்த தட்டெழுத்துப் பாடத்தைப் பகுதி
நேரமாகப் போதிக்க என்னை
விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
எனது
விண்ணப்பத்தை அதிபரிடம் கொடுத்திருந்தேன். அதிபர்
எனக்கு
அப்பதவியைத் தருவதாக இருந்தார்.
நான் என்னுடன் படித்த
நண்பர்களிடம் சகஜமாகப் பழகுவதால் இவ்விடயத்தை என்னுடன் படித்த
ஒரு
நண்பியிடம் கூறினேன். அவர்
இதனைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விண்ணப்பம் ஒன்றை
அதிபரிடம் கொடுத்து தனது
குடும்ப செல்வாக்கினைப் பயன்படுத்தி நியமனத்தைப் பெற்றுக்கொண்டார். இது
எனக்கு
மிகவும் வேதனையைத் தந்தது.
இதனை அறிந்த நேரத்தில் நான்
எனக்குள் ஒரு
தீர்மானம் எடுத்தேன். அதாவது, இந்தத்
தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு
வருடமாவது போதிக்க வேண்டுமென்று. நான்
தொடர்ந்தும் வேலை
தேடும்
முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அடிக்கடி கொழும்பிற்குப் போவதும் வருவதுமாக இருந்தேன். இதன்
காரணமாக எனக்கு
பெற்றோரிடமிருந்து பல
கண்டனங்களைக் கேட்க
வேண்டியிருந்தது.
மக்கள் வங்கியால் 1973ஆம்
ஆண்டு
இறுதியில் கோரப்பட்ட விளம்பரத்திற்கமைய நான்
விண்ணப்பித்து 1974ஆம்
ஆண்டு
முதல்
சுருக்கெழுத்துப் பரீட்சைக்காகவும் பின்னர் தட்டெழுத்துப் பரீட்சைக்காகவும் சென்றிருந்தேன். பின்னர் 3 நேர்முகப் பரீட்சை களுக்குத் தோற்றினேன். மூன்றாவது நேர்முகப் பரீட்சைக்குச் சென்றபோது, அவர்களும் (சுமார்
10பேர்)
களுபோவிலை வைத்திய சாலையில் மருத்துவ பரிசோதனைக்காக மக்கள்
வங்கி
வாகனத்தில் கொண்டுசென்று விட்டனர். இதற்காக ரூபா
32/50
ஐ
செலுத்தினோம். எமக்கு
இம்மருத்துவ பரிசோதனை பற்றி
முன்னர் ஏதும்
தெரிவிக்கவில்லை. அங்கு
விசாரித்தபோது இப்பரிசோதனைக்குக் குறைந்தது 5 நாட்களாவது தேவை
எனத்
தெரிவிக்கப்பட்டது. நானும்
என்னைப் போன்ற
பிற
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எவரும்
கொழும்பில் இவ்வளவு நாட்கள் நிற்பதற்குத்தக்க ஒழுங்குகளுடன் செல்லவில்லை. எனவே
நான்
மீண்டும் பஸ்
மூலம்
மக்கள்
வங்கி
தலைமை
அலுவலகத்திற்குச் சென்று
ஆளணி
முகாமையாளரிடம் எனது
நிலைமையை எடுத்துக்கூறினேன். பின்பு
அவர்
மருத்துவ பரிசோதனையை பருத்தித்துறை வைத்தியசாலையில் மேற்கொள்ளக் உரிய
ஏற்பாடுகள் செய்தார். இதற்காக மீண்டும் நான்
ரூபா
32/50
ஐ
செலுத்தினேன். அங்கு
மருத்துவ பரிசோதனையின்போது பல்லில் சொத்தை
இருக்கிறதாகக் கூறி
பல்
பிடுங்கப்பட்டது. அப்போது எனது
பல்லைப் பரிசோதனை செய்த
வைத்தியருக்குப் பல்லைப் பிடுங்குவது கஷ்டமாக இருந்தது. அதற்குப் பதிலாக
வேறு
ஒரு
பல்லைப் பிடுங்கிவிட்டார். அப்போது நான்
7 நாட்களில் வைத்தியப் பரிசோதனை முடித்து அதன்
அறிக்கை வைத்தியசாலை நிர்வாகத்தினால் மக்கள்
வங்கி
ஆளணி
முகாமையாளருக்கு அனுப்பப்பட்டது.
1975ஆம்
ஆண்டு
முற்பகுதியில் எனக்கு
மக்கள்
வங்கியிலிருந்து சந்தோசமான செய்தி
வந்தது.
அதாவது, நான்
மக்கள்
வங்கியில் 1975 மார்ச்
மாதம்
1ஆம்
திகதி
முதல்
ஆங்கிலச் சுருக்கெழுத்தாளர் சேவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளேன் என்றும், மார்ச்
மாதம்
7ஆம்
8ஆம்
திகதிகளில் தலைமை
அலுவலகப் பயிற்சி பாட
சாலையில் நடைபெறும் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபெற்றவேண்டும் என்றும், அதன்பின்னர் 10ஆம்
திகதிமுதல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள
சம்மாந்துறைக் கிளையில் நியமனத்தை ஏற்க
வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவ்விடம் மிகவும் தூரப் பிரதேசம் என்பதாலும் முஸ்லீம் பிரதேசம் என்பதாலும் பல
நண்பர்கள் அங்கு
செல்லவேண்டாம் என
என்னைக் கேட்டுக்கொண்டனர். எனினும் நான்
புதிய
இடங்களைப் பார்க்க வேண்டும், அந்தப்பகுதி மக்களோடு பழகவேண்டும் என
எண்ணங்கொண்டு அங்கு
செல்லத் தீர்மானித்தேன். என்னுடன் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபற்றிய பிரான்சிஸ் என்ற
கல்முனையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர்
தனது
வீட்டில் சில
நாட்கள் தங்கி
பின்னர் தங்குவதற்கு இடம்
ஒன்று
ஒழுங்குபடுத்தலாமெனத் தெரிவித்தார். அவர்
கல்முனைச் சந்தியில் இருந்து தனது
வீட்டிற்கு வரும்
பாதையையும் குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் மார்ச்
8ஆம்
திகதி
1975 இரவு
தபால்
புகை
வண்டியில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குப் புறப்பட்டேன். புகைவண்டியில் பலரது
அறிமுகம் கிடைத்தது. ஒரு
நண்பரிடம் நான்
மட்டக்களப்பில் இருந்து பஸ்
மூலம்
கல்முனைச் சந்தியில் இறங்கவேண்டும் எனவும்
எவ்வாறு அந்த
இடத்தை
அடையாளம் காண்பது எவ்வாறு எனவும்
கேட்டேன். அதற்கு
அவர்
நகைச்சுவை யாக
மட்டக்களப்பு பஸ்
நிலையத்தில் அம்பாறை செல்லும் பஸ்
நிற்கும் எனவும்
அது
கல்முனைக்கு ஒரு
மணித்தியாலத்தில் சென்று
விடும்.
சுமார்
50 நிமிடங்களுக்குப்பின் வரும்
நாற்சந்தியில் பல
மாடுகள் பாதையைத் தடைசெய்தபடி படுத்திருக்கும், அதுதான் கல்முனைச் சந்தி
எனத்தெரிவித்தார். அவ்வாறே, பஸ்சில் சென்ற
போது
நண்பன்
சொன்னது அத்தனையும் உண்மையாக இருந்தது.
நான் காலை 6.30 மணியளவில் பஸ்ஸால் இறங்கியபோது எதிர்பாராத விதமாக
நான்
படித்த
நெல்லியடி மத்திய
மகாவித்தியாலயத்தில் சமகாலத்தில் படித்த
வதிரியைச் சேர்ந்த சதானந்தராசா (Jaffna ஸ்ரோஸ்) வைச்
சந்தித்தேன். அவர்
என்னைத் தன்னுடன் சிலநாட்கள் தங்குமாறு கேட்டார். எனினும் நான்
அவருடன் தங்கமுடியவில்லை. ஏற்கனவே கதைத்த
நண்பர்
பிரான்சிஸ் வீட்டிற்குச் சென்றபோது அவரது
பெற்றோரும் சகோதரர்களும் என்னை
வரவேற்று உபசரித்தனர். நான்
அடுத்தநாள் Jaffna
ஸ்ரோஸ்
நண்பர்
சதானந்தராசாவிடம் சென்று
அவருடன் ஒருநாள் தங்கி
பல
பழைய
கதைகளைக் கதைக்கக் கூடியதாக இருந்தது.
என் வாழ்க்கையில் ஒரு
புது
அத்தியாயம் 10.03.1975இல் தொடங்கியது. அன்று
வேலைக்குச் சேர்ந்த முதல்
நாள்
வங்கிக்குச் சென்றபோது வங்கி
முகாமையாளர் திரு.எம்.எம். ஹனீபா.
இவர்
அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். சம்மாந்துறையில் திருமணம் முடித்தவர். என்னை
அன்பாக
வரவேற்று பல்வேறு அறிவுரைகளையும் கூறி
எனக்கு
வங்கியில் திருப்தியுடன் வேலை
செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தவர்.
இவ்வங்கி இயங்கியது ஒரு தனியார் மேல்மாடிக் கட்டடத்திலேயே. கட்டடத்தின் கீழ்த்தளம் மட்டுமே வங்கிக்காகப் பயன்படுத்தப்பட்டது. மேல்
மாடியில் எனக்குத் தங்குவதற்காக முகாமையாளரால் ஒழுங்குசெய்து தரப்பட்டது. அவ்விடத்தில் தங்குவதற்கு எனக்குப் பூரண
விருப்பம் இல்லை.
ஆனாலும் பொருத்தமான இடம்
கிடைக்கும் வரை
அங்கு
இருக்கவேண்டியிருந்தது. சில
நாட்கள் சென்றபின் அங்கு
தங்குவதற்கு திரு.
நந்ததிலக என்ற
சிங்களச் சகோதர்
ஒருவர்
வந்திருந்தார். எனக்கு
சிங்களம் கதைக்கத் தெரியாததால் அவருடன் இருப்பதற்கு எனக்குக் கஷ்டம்
இருக்கவில்லை. மேலும்
ஒருமாதம் சென்றபின் வங்கியில் வேலை
செய்ய
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவர் வந்து
சேர்ந்தார். மேல்மாடியில் அவரும்
எம்முடன் தங்கினர். வேலைக்கு வந்து
தங்குவதற்கு இடம்
ஒன்று
தற்காலிகமாகவேனும் கிடைத்தது. வங்கியின் எதிர்ப்பக்கத்தில் ஒரு
ஹோட்டல் இருந்தது. அது
முஸ்லீம்களுடையது. அவர்களது உணவு
வகைகள்
எனக்கு
ஒத்து
வரவில்லை. எமது
சாப்பாட்டிற்காக மாற்றுவழி ஏதும்
இல்லாத
காரணத்தால் வயிற்றிற்குச் சாப்பிடவேண்டுமே! என்று
மூன்று
நேரமும் அக்கடையில்தான் சாப்பிட்டேன். காலை,
இரவு
என்ன
சாப்பிட்டேன் என
நினைவில்லை. ஆனால்
இரு
நேரங்களும் தேநீர்
அருந்துவது ஞாபகம்.
அப்போது எனது
முதல்
மாத
சம்பளம் ரூபா
324/30
இது
அக்காலத்தில் ஒரு
பெரிய
தொகை.
தினம்
சாப்பாட்டிற்கு ரூபா
4/-
அளவில்
செலவாகும். தங்குமிடத்திற்கு மாதம்
ரூபா
25/-.
வீட்டிற்கு ரூபா
100/-
அனுப்புவேன். மிகுதி
எனது
எதிர்பாராத செலவுகளுக்கும் சேமிப்புமாக வைத்துக் கொள்வேன்.
பல நேர்முகப்பரீட்சைகள்ஃசெயன்முறைப் பரீட்சைகளுக்கும் தோற்றி
தொழில்
கிடைக்காத நிலையில் இறுதியாக மக்கள்
வங்கியில் தூர
இடத்தில் கஷ்டப்
பிரதேசத்தில் வேலை
கிடைத்தது எனக்கு
மிகவும் மகிழ்ச்சி.
நான் இங்கு எனது
தொழில்
அனுபவங்கள் பற்றிப் பெரிதாக எதுவும் எழுத
விழையவில்லை. எனினும் நான்
தொழில்
செய்த
காலத்தில் நான்
செய்த
வங்கி
சாரா
வேலையில் கிடைத்த அறிமுகங்கள் மற்றும் அனுபவங்கள் பற்றியே.
கல்முனை மக்கள் வங்கியில் முதன்முதலாக 1977 இல்
வாணி
விழா
மிக
சிறப்பாக நடாத்தியிருந்தோம். இது
வங்கிக்கு பெரும்
விளம்பரத்தைத் தேடித்தந்தது.
சூறாவளியில் சிக்கி மயிரிழையில் உயிர்
தப்பினேன். இதன்
பின்னர் இரவு
முழுவதும் சேதமடைந்த மக்கள்
வங்கியில் நண்பர்களுடன் இருக்க
கிடைத்தது.
சூறாவளி ஏற்பட்டது 1978 நவம்பர் 26ஆம் திகதி அன்றையதினம் கடல்
அலை
ஒரு
பனையளவு உயரத்திற்கு வீசுகிறதெனப் பலர்
தெரிவித்தனர். அன்றைய
தினம்
கல்முனைப் பிரதேசம் எங்கும் மின்சாரம் தடைப்பட்டது. நானும்
என்னுடன் வேலை
செய்யும் இரு
நண்பர்களும் பகல்போசனவேளையில் இதனைப்
பார்க்க கடற்கரைக்கு சென்றோம். அப்போது வீசிய
அலையைப் பார்த்து ஏதோ
நிகழப்போகிறது என
எண்ணியபடி பகல்போசனத்தையும் வழமையாகச் சாப்பிடும் அம்பலத்தடி கோவிலுக்கு முன்
உள்ள
ராஜூ
கடையில் சாப்பிட்டபின் வங்கிக்கு வந்தேன். அப்போது வங்கியில் வேலை
செய்யும் எல்லோர் முகத்திலும் ஓர்
பயப்பீதி நிலவியது. மின்சாரம் தடைப்பட்டமையால் வங்கியின் அன்றாட
வேலைகளைக்கூட செய்ய
முடியவில்லை. முகாமையாளர் திரு.எம்.எம்.ஹனீபா
ஒரு
தற்றுணிவான தீர்மானம் எடுத்து பெற்றோமக்ஸ் விளக்கை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.
ஏதோ
அசம்பாவிதம் நடைபெறுவதற்கே கடல்
அலை
வித்தியாசமாக அடிக்கிறது என்பதனை உணர்ந்து, வங்கியின் மேல்
மாடியில் அவரது
வாசஸ்தலத்தில் தங்கியிருந்த தன்
குடும்பத்தினரை உடனடியாக பி.ப. 3 மணியளவில் சம்மாந்துறையில் உள்ள
தனது
வீட்டிற்கு கொண்டுசென்று சேர்த்துவிட்டு வந்தார். பிற்பகல் 4 மணியளவில் வங்கிக்கு வெளியே
இருட்டிவிட்டது. மின்சாரம் இல்லாததால் கல்முனை நகரமே
அல்லோல
கல்லோலப்பட்டது.
மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. பிற்பகல் 6 மணியளவில் வங்கியில் வேலைசெய்யும் அனைத்து ஊழியர்களும் தமது
அன்றாட
வேலைகள் முடியாமல் வீடுசெல்ல முடியாது எனவும்
தமது
வீடுகளில் என்ன
நிலைமையோ எனவும்
அந்தரப்பட்டனர். நான்
சுயநலமாக எனக்குரிய இரவு
சாப்பாட்டை வழமையாகச் சாப்பிடும் வங்கிக்கு சமீபமாக (200 மீற்றர் தூரத்தில்) உள்ள
ராஜூ
கடைக்கு சென்று
பார்சலாக கட்டி
எடுத்து கொண்டு
வங்கிக்கு வர
ஆயத்தமானேன். இவ்வேளையில் இருந்து மழை,
காற்று
என்பவற்றின் வேகம்
அதிகரித்தது. கடையில் சாப்பிட வந்தவர்கள் சுமார்
25பேருக்கு மேல்
இருந்தனர். காற்றின் வேகத்தால் கடையின் கூரைத்
தகரங்கள் நாலாபக்கமும் பறந்தன.
அருகில் உள்ள
பாடசாலைக் கூரை
ஓடுகள்
விழும்
சத்தம்
கேட்டது. கோவிலுக்கு முன்
(கடைக்கு எதிரே)
உள்ள
மரத்தின் கொப்புகள் முறிந்து விழுந்தன. கடைக்
கூரைத்
தகரம்
ஒன்று
காற்றில் அடித்து செல்லப்பட்டு அதன்
ஒரு
மூலை
மரத்தில் செருகியது. கூரைத்
தகரங்கள் எந்நேரம் எங்கு
பறக்கும் என்ற
சந்தேகம் கடையில் நின்ற
அனைவருக்கும் இருந்தது. இதற்கு
நானும்
விதிவிலக்கல்ல.
நேரம் இரவு 10மணிக்கு மேலாகிவிட்டது. வங்கியில் இருந்து 6மணிக்கு சாப்பாடு எடுக்க
வந்ததன் காரணமாக நானும்
வேறு
திணைக்களங்களில் வேலை
செய்யும் என்னைப்போல் சாப்பாடு எடுக்க
வந்தவர்கள் இருவரும் என்ன
ஆகுமோ
என்ற
பயத்தினால் கடையில் இருந்து வங்கிக்கு ஓடிச்
செல்லத் தீர்மானித்தோம். திடீரென மூவரும் ஓட
ஆரம்பித்தோம். கடையில் இருந்து வங்கி
சொற்ப
தூரம்
எனினும் பாதையின் இரு
பக்கமும் வயல்வெளியாகக் காணப்பட்டதால் வெள்ளம் பாயத்தொடங்கியது. வெள்ளப்பெருக்கு கூடியமையால் இடைநடுவில் என்னால் ஓட
முடியவில்லை. எனக்கு
என்ன
செய்வதென்று தெரியவில்லை. கையில்
இருந்தது பாரமாகத் தெரிந்தது. எனவே
பாரத்தை எறிந்தேன். பின்னர் காலில்
அணிந்து இருந்த
சப்பாத்தைக் கழற்றிவிட்டு பின்
சடுதியாகப் பாய்ந்தேன். வங்கிக்குப் பக்கத்தில் இருந்த
சைக்கிள் கடைக்கு முன்
இருந்த
தூண்
ஒன்றைக் இறுகப்பிடித்துக் கொண்டேன். குளிர்
தாங்க
முடியாது உடல்
நடுங்கி பல்லெல்லாம் நெறுட
ஆரம்பித்தது. சுற்றிலும் முழு
இருட்டு. எனினும் வங்கிக்குள் இருந்து பெற்றோமக்ஸ் வெளிச்சம் தெரிவது ஆறுதலாக இருந்தது. என்னுடன் வந்த
மற்ற
நண்பர்கள் இருவரும் என்னவானார்கள் எனத்
தெரியவில்லை. நான்
மேலும்
தாமதிக்காமல் வங்கிக்குள் பாய்ந்து சென்றேன்.
அங்கு இருபதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர். வங்கியின் மேல்மாடியின் அரைப்பகுதிக்கு முகாமையாளரின் வதிவிடம் உள்ளது.
மிகுதி
அரைப்பகுதிக்கு Asbestos Sheet போடப்பட்டு இருந்தது. இவை
சூறாவளியினால் பறந்து
உடைந்து விட்டதன் காரணமாக வங்கியின் பெட்டகப் பகுதியில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டிருந்தது. ஏனைய
பகுதியில் மழை
வெள்ளம் நிறைந்திருந்தது. முகாமையாளரின் அறையில் பெற்றோமக்ஸ் எரிந்தது. நான்
எனது
மேல்சட்டை, பெனியன் என்பவற்றைக் கழற்றி
பிழிந்து அவற்றால் எனது
தலையையும் உடலையும் உணர்த்தி பெற்றோமக்ஸ் சூட்டில் குளிர்காய்ந்தேன்.
அதன்பின்னர் உடுப்பையும் கதிரையில் உலரப்போட்டுவிட்டு
மேலாடையின்றி குளிரினால் அவதிப்பட்டேன். இதேவேளையில் எங்களுடன் வேலை
செய்யும் பெண்
ஊழியர்களை முன்கூட்டியே தமது
வீடு
செல்லுமாறு முகாமையாளர் அனுப்பிவிட்டார். இதன்
காரணமாக அவர்கள் இப்பிரச்சனையின் போது
தங்களது வதிவிடத்தில் இருந்தமை அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருந்தது.
நானும் வாடிவீட்டு வீதியில் இருந்த
எனது
தங்கும் அறைக்குச் சென்றேன். அவ்வீட்டு உரிமையாளர் சிற்பி
அக்கா
என
அழைக்கப் பட்ட
திருமதி கதிர்வேற்பிள்ளை எனும்
மூதாட்டி. அவர்
சூறாவளி இரவு
வேளையில் தனியே
இருந்து கஷ்டப்பட்டு இருக்கிறார். எனக்கு
என்ன
ஆனதோ
என்று
எண்ணி
மிகவும் பயந்துவிட்டார். நான்
வீட்டிற்குச் சென்றதும் என்னைத் தன்
மகன்
போல்
கட்டிப் பிடித்து அவர்
அழுதது
இன்னமும் என்
காதுகளில் ஒலிக்கிறது.
எனது அறையில் உடைமைகள் பலதும்
மழையால் நனைந்து சேதமானது. பின்னர் நான்
அதனை
ஒழுங்குபடுத்தியதன் பின்னர் வங்கிக்குச் சென்றேன். அப்போது வங்கி
ஊழியர்கள் பலர்
அங்கு
நின்றனர். அப்போது முகாமையாளர் யாராவது வங்கியின் பாதுகாப்பிற்காக இரவு
முழுவதும் நிற்க
முடியுமா எனக்கேட்டார். வேறு
எவரும்
சம்மதிக்காத நிலையில் நான்
எந்தவித எதிர்பார்ப்புமின்றி சம்மதம் தெரிவித்தேன். வங்கி
முகாமையாளரின் அறை
மட்டுமே பாதுகாப்பானதாகும். எனவே
நான்
எனக்கு
முக்கிய தேவைக்கான சில
பொருட்களை அங்கு
வைத்தேன். இரவு
முகாமையாளரின் அலுவலக
மேசையே
எனது
படுக்கை. நான்
தினமும் எனது
அறையிருந்த வீட்டிற்கு சென்று
காலைக்கடன்களை முடித்து மற்றும் தேவையான எனது
வேலைகளையும் செய்துவிட்டு 7.30 மணிக்கு வங்கிக்கு வந்துவிடுவேன். கல்முனை நகரமும் வழமைக்கு திரும்பியது இரவு
சாப்பாடு கடையில் சாப்பிடக்கூடியதாக இருந்தது.
வங்கியை திருத்துவதற்காக
கொழும்பில் இருந்து தலைமை
அலுவலகத்திற்கு ஒப்பந்தகாரர்கள் வந்தனர். முகாமையாளர் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து
கொடுக்குமாறு என்னைப் பணித்தார். இதே
வேளையில் கொழும்பிலிருந்து வங்கி
ஊழியர்களுக்கு அரிசி,
மா,
சீனி,
மற்றும் சமையல்
பொருட்கள் மற்றும் பெட்சீட், சாரம்,
துவாய்
போன்றவையும் வந்தன.
மறுபுறத்தில் எனது நண்பர்களின் குடும்பங்கள் தமது
வீட்டில் என்னபாடோ எனவும், பிற
ஊரைச்
சேர்ந்தவர்கள் தம்மைப்பற்றி தமது
வீடுகளில் இருந்து நாம்
என்ன
ஆனோம்
என
அறியவும் செய்தனர். இரவு
முழுவதும் கடும்
சூறாவழி காரணமாக அயல்
பகுதிகளில் பல
சேதங்கள் ஏற்பட்டதை உணர்ந்தோம். நள்ளிரவைத் தாண்டும்போது வங்கியில் இருந்த
நாங்கள் ஏதாவது
சாப்பிட்டால், குடித்தால் நன்றாக
இருக்கும் என
எண்ணினோம். காற்று
தணியும் வேளையில் சில
நண்பர்கள் வீடு
சென்றார்கள் வங்கியில் இருந்த
சிங்கள
நண்பர்கள் சிலர்
முஸ்பாத்தியாக ஆடிப்பாடி தமது
கவலையைப் போக்கிக்கொண்டனர்.
வங்கியில் அதிகாலை 4.30மணியளவில் முகாமையாளர் உட்பட சுமார் 10 பேர்
வரையில் இருந்தோம். அவ்வேளையில் நாங்கள் எதிர்பாராத விதமாக
கல்முனை இலங்கை
வங்கியில் வேலை
செய்த
நண்பர்
ந.சிவரத்தினம் என்பவர் ஒரு பெரிய சுடுநீர்ப் போத்தலில் கோப்பி
கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தது கடவுளே
நேரில்வந்தததைப்போல் இருந்தது.
மறுநாள் விடிந்தது வங்கியின் அரைப்பகுதிக்கு
மேல்
கூரை
இல்லை.
வங்கியின் உட்புறம் பார்க்க அலங்கோலமாக இருந்தது. அங்கு
முகாமையாளரின் அறைமட்டுமே பாதுகாப்பாக இருந்தது. மின்சாரம் இல்லை.
தண்ணீர் இல்லை.
ஒவ்வொருவரும் தமது
வீட்டு
நிலைமை
எவ்வாறாக இருக்கும் என
அந்தரப்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் வீடு
செல்ல
வேண்டும் என்ற
எண்ணம்
மேலோங்கி இருந்தது. கல்முனைப் பிரதேசமே அல்லோல
கல்லோலப்பட்டிருந்தது. தேநீர்
கடைகள்
இல்லைஇ
போக்குவரத்து இல்லைஇ
தொலைதொடர்பு வசதியில்லை பலசரக்குக் கடைகளில் உள்ள
பொருட்களைத் தொகையாகக் கொள்வனவு செய்ய
சனங்கள் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். இதை
அவதானித்த முகாமையாளர் எமக்கும் கஷ்டம்
வரப்போகிறதென்பதை உணர்ந்து ஒரு
தொகை
பிஸ்கட் பொதிகளை கொள்வனவு செய்து
அதனை
அலுவலக
அறையில் இருந்த
அலுமாரி ஒன்றில் பூட்டிவைத்தார். இதன்பின்னர் வங்கியில் இருந்த
சிலரும் தமது
வீடுகளுக்கு சென்றனர். எல்லோருக்கும் பல
பிரச்சனைகள் தூர
இடங்களிலிருந்து வேலை
செய்தவர் கஷ்டங்களின் மத்தியிலும் தமது
ஊருக்குச் சென்றனர். இங்கு
இருந்தவர்கள் பல
கஷ்டங்களை அனுபவித்தனர். வங்கிக்குப் பாதுகாப்பில்லை. கூரையில் அரைவாசி இல்லை.
தளபாடம் எல்லாம் சேதம்.
இதனால்
வங்கி
ஒரு
நாள்
பூட்டப்பட்டது.
பணத்தை வைப்பிலிட்ட வாடிக்கையாளர்கள் தமது
பணத்தை
மீளப்பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். இவர்களுக்கு மட்டுப் படுத்தப்பட்ட சேவையை
அதாவது
ஒரு
குறிப்பிட்ட தொகைப்
பணத்தை
அவர்களது கணக்கில் இருந்து மீளப்பெற அனுமதிக்கப் பட்டது.
இதன்
காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். காலப்போக்கில் வங்கி
திறக்கப்பட்டு வங்கி
வேலைகள் வழமைபோல் நடைபெறத் தொடங்கின. சூறாவளியால் சேதமுற்ற கல்முனைப் பிரதேசம் படிப்படியாக வழமைக்குத் திரும்பியதன் காரணமாக தமது
சொந்த
இடத்திற்குத் திரும்பிய ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பினர்.
1979ம்
ஆண்டு
முதல்வாரம் சூறாவளி சேதத்திற்கும் பின்னர் கல்முனை மக்கள்
வங்கியில் நிலைமையைப் பார்ப்பதற்காக மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் வந்திருந்தார். முகாமை
யாளருடன் கதைத்து வங்கியைப் பார்வையிட்டபின் தமது
திருப்தியை முகாமையாளருக்குத் தெரிவித்தார். அப்போது சூறாவளிக்குப் பின்
வங்கியைப் பாதுகாத்து அதன்
செயற்பாட்டுக்கு உறுதுணையாக 24 மணிநேரமும் தொடர்ச்சியாக சுமார்
ஒரு
மாதம்
வங்கியில் இருந்து புனரமைப்புக்கு நான்
உதவியதாக முகாமையாளர் திரு.ஹனிபா பிராந்திய முகாமையாளரிடம் கூறினார். இதற்குச் சன்மானமாக விடுமுறை தினத்தில் கடமையாற்றியதற்காக பதில்
விடுமுறையும் அலுவலக
நேரத்திற்கு புறம்பாக வேலை
செய்தமைக்கான மேலதிக
கொடுப்பனவும் வழங்கும் படி
முகாமையாளருக்கு LOG BOOKல் எழுதினார். இது
எனது
சேவைக்குக் கிடைத்த வெற்றி
என
நான்
உணர்ந்தேன்.
சூறாவளிக்குப்
பின்னர் ஏனைய
வெளியூர் ஊழியர்களைப் போன்று
நானும்
எனது
சொந்த
ஊரான
புலோலிக்குப்போக விரும்பினேன். இந்த
கவலையை
வங்கி
உதவி
முகாமையாளரான திரு.சிற்சபேசன் என்பவரிடம் கூறினேன். நான் தகவல் கூறிய
அடுத்தநாள் வாடிவீட்டு வீதியில் தனது
பணியிடமாகத் கொண்ட
Dr.முருகேசம்பிள்ளை அவர்களைப் பார்க்க இருவரும் சென்றோம். Dr.முருகேசம்பிள்ளை,
திரு.சிற்சபேசன் மற்றும் நான் ஆகிய மூவரும் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள். அவரிடம் கதைக்கும் போது
நான்
ஊர்
செல்ல
விரும்புவதாக திரு.சிற்சபேசன், Dr.முருகேசம்பிள்ளையிடம்
கூறினார். இதற்கு
அவர்
நாம்
மூவரும் கல்முனைக்கு தொழில்
நிமித்தம் வந்து
இருக்கிறோம் இப்போது கல்முனைப் பிரதேசம் சூறாவளியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள்
பல
கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே
இக்காலத்தில் நாம்
இங்கிருந்து அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதுதான் எமது
கடமை
எனக்கூறினார். இதற்குப்பின் நான்
ஊர்
செல்வது என்ற
தீர்மானத்தில் இருந்து விலகிக்கொண்டேன். இதன்
காரணமாக நான்
வங்கிக்கு முடிந்த சேவைகளைச் செய்யக் கூடியதாக இருந்ததை மகிழ்சியுடன் இப்போது நினைவு
கூறுகிறேன்.
இச்சந்தர்ப்பத்தில்
திரு.சிற்சபேசன் அவர்களைப்பற்றி
சில
வார்த்தைகள் இங்கு
கூறவேண்டும். இவர்
கரவெட்டியைச் சேர்ந்தவர் உடுவிலில் திருமணம் செய்தவர். இவர்
தனது
குடும்பத்தினருடன் வட்டவிதானை வீதியில் அவரது
உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தவர். எல்லோருடனும் அன்புடன் பழகுபவர். தேவையான அறிவுகளை வழங்குபவர். மற்றவர்களுக்கு தேவைப்படும் போது
தன்னாலான உதவிகளையும் செய்யத் தவறுவதில்லை. இத்தகைய சிறப்புக்குணங்களை உடைய
திரு.சிற்சபேசன் அவர்கள் சூறாவளியின் பின்னர் சில வாரங்கள் தமது
வீட்டிலேயே தன்னுடன் பகல்இ
இரவு
உணவுகளை உண்ண
ஏற்பாடு செய்திருந்தார். இவரது
இரு
மகன்களில் ஒருவர்
Dr.செந்தூரன் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
இதேவேளை கல்முனை மக்கள் வங்கியில் 1978 ஆம்
ஆண்டு
வாணி
விழாவை
சிறப்பாக கொண்டாடினோம் என
ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அதன்போது எடுக்கப்பட்ட பல
புகைப்படங்கள் பிரேம்
போடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டு இருந்தது. அவையும் சூறாவளியின் போது
விழுந்து உடைந்து சீரழிந்தமை கவலைக்குரியது.
சக அலுவலர் திருமதி புஷ்பராஜா அவர்களின் கணவர்
திரு.புஷ்பராஜா (முகாமையாளர்இ மக்கள் வங்கி, சம்மாந்துறை) அவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி
கால்முறிந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற
வேளையில் கல்முனை மக்கள்
வங்கி
ஊழியர்கள் இரவு
வேளைகளில் ஒவ்வொரு நாளும்
ஒருவர்
வீதம்
அவருக்கு உதவியாக வைத்தியசாலையில் இருந்தோம். இதனை
என்னால் ஒழுங்குபடுத்தி செயற்படுத்தியமை என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.
வங்கி ஊழியர்களுக்கு இலங்கை
வங்கியாளர் பயிற்சி நிலையத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் பரீட்சை நாடு
முழுவதிலும் உள்ள
முக்கிய நகரங்களில் நடைபெறுவது வழமை.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்திற்கான பரீட்சை அம்பாறையில் நடை
பெறுவது வழமையாக இருந்தது. அப்போது இப்பரீட்சைக்குத் தோற்றும் கல்முனை அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் போன்ற
இடங்களில் உள்ள
வங்கி
ஊழியர்கள் இப்பரீட்சைக்கு தோற்ற
போக்குவரத்து மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தக்
கஷ்டங்களை அனுபவித்தவர்களில் நானும்
ஒருவன்.
எனவே
கல்முனையில் ஒரு
பரீட்சை நிலையம் அமைவதை
நானும்
வேறு
சில
வங்கி
நண்பர்களும் விடும்பினோம். எனவே
வங்கியாளர் பயிற்சி நிலையத்திற்கு கல்முனையில் பரீட்சை நிலையம் ஒன்றை
அமைக்க
கோரிக்கை ஒன்றை
அனுப்ப
முடிவு
செய்தோம். இதன்
பிரகாரம் அக்கடிதத்தை அனுப்புவதற்கு ஏற்ற
ஒழுங்குகளைச் செய்ய
ஆரம்பித்தேன்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள
கரையோரப் பிரதேச
மக்கள்
வங்கி,
இலங்கை
வங்கிக் கிளைகளில் உள்ள
ஊழியர்களிடம் இதுபற்றி கதைத்தேன். எனக்கு
உறுதுணையாக அம்பாறை மாவட்ட
இலங்கை
வங்கி
அலுவலகத்தில் கடமையாற்றிய திரு.குகதாஸ், கல்முனை இலங்கை வங்கியில் கடமையாற்றிய திரு.சண்முகசுந்தரம்,
திரு.சிவரத்தினம் அவர்கள் நான் தயாரித்த மகஜரில் இலங்கை
வங்கி
ஊழியர்கள் பலரிடம் கையொப்பம் பெற்றுத் தந்தனர். மக்கள்
வங்கியில் கடமையாற்றிய சில
நண்பர்களிடம் உதவியுடன் பல
மக்கள்
வங்கி
ஊழியர்களின் கையொப்பங்களைப் பெற்றேன். இறுதியாக இம்மகஜரை அனுப்புவதற்கு மக்கள்
வங்கி
பிராந்திய முகாமையாளர்இ இலங்கை
வங்கி
மாவட்ட
முகாமையாளர் ஆகியோரின் சிபாரிசு தேவைப்பட்டது. இலங்கை
வங்கி
நண்பர்
திரு.குகதாஸ் தமது மாவட்ட முகாமையாளரின் சிபாரிசுக் கடிதத்தைப் பெற்றுத் தந்தார். இதேபோல் கல்முனை மக்கள்
வங்கி
முகாமையாளர் திரு.எம்.எச்.எம்
ஹனிபா
மக்கள்
வங்கி,
மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளரிடம் சிபாரிசுக் கடிதம்
பெற்றுத் தந்தார்.
எனவே என்னால் இக்
கோரிக்கைக் கடிதத்தைப் பலபேரின் கையொப்பத்துடனும் இரு
உயரதிகாரிகளின் சிபாரிசுடனும் கொழும்பு உட்பட
இலங்கை
வங்கியாளர் பயிற்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கான சாதகமான பதிலை
நாம்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இதற்குச் சாதகமான பதில்
ஒன்று
இலங்கை
வங்கியாளர் பயிற்சி நிலையத்திலிருந்து எனது
வங்கி
முகவரிக்கு அனுப்பப்பட்டது எனக்கு
மகிழ்ச்சியைத் தந்தது.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்களது கோரிக்கைக்கு அமைய கல்முனையில் 1981 ஆம்
ஆண்டு
முதல்
பரீட்சார்த்தமாக பரீட்சை நிலையம் ஒன்றை
அமைப்
பதற்கு
நாம்
எமது
சம்மதத்தைத் தெரிவித்து இருக்கிறோம். எனினும் போதிய
பரீட்சார்த்திகள் எதிர்காலத்தில் விண்ணப்பிக்காத விடத்து இப்பரீட்சை நிலையம் இரத்துச் செய்யப்படும் எனக்
குறிப்பிடப்பட்டிருந்தது.
1981 ஆம்
ஆண்டுமுதல் இப்பரீட்சை நிலையம் இயங்கியது. எனினும் சில
வருடங்களின் பின்னர் போதிய
விண்ணப்பதாரிகள் இன்மையால் இப்பரீட்சையினை இரத்துச் செய்யப்பட்டதாக அறிந்து வேதனைப்பட்டேன்.
இதேபோன்று அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி
விளையாட்டுக் கழகம்
என்னால் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் சிலகாலம் மட்டுமே இயங்கியமை துரதிஷ்டமாகும்.
சக ஊழியரும் வங்கி
ஊழியர்களுக்கு நண்பருமான கு.ஏகாம்பரம் (அச்சுவேலி) திடீரென தலைமை அலுவலக செய்திமூலம் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இச்செய்தியை அவருக்கு வங்கியில் வைத்து
தெரிவிக்காமல் அவரது
அறைக்குக் கூட்டிச் சென்று
உதவி
முகாமையாளர் திரு.சிற்சபேசன் அவருடன் கலந்துரையாடி விடயத்தை தெரிவித்தார். இச்செய்தி கல்முனை இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியது இவரது
பதவி
நீக்கம் வங்கியில் களவு
எடுத்தமை அல்ல
எனப்
பின்னர் தெரியவந்தது. பின்னர் இவரது
நண்பர்கள் பலர்
ஒன்று
சேர்ந்து அவருக்குப் பணம்
கொடுத்து வெளிநாடு செல்வதற்கு உதவினர். அவரது
நண்பர்
என்றமுறையில் அவருக்கு உதவினர். ஒரு
சிறு
தொகைப்
பணம்
என்னால் கொடுக்க முடிந்தது. சில
வருடங்களின் பின்னர் அவர்தான் நன்றாக
இருப்பதாகத் தெரிவித்து. நான்
கொடுத்த தொகையைத் திருப்பித் தந்தமை
குறிப்பிடத்தக்கதாகும். இன்று
அவர்
வெளிநாட்டில் தனது
குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பது எனக்கு
மட்டுமல்ல அவரது
நண்பர்களுக்கும் சந்தோஷம்.
அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி
விளையாட்டு கழகம்
ஆரம்பிப்பதற்கு ஒழுங்கு செய்து
விளையாட்டுக் கழகத்தின் தலைமை
பொறுப்பை ஏற்று
சிறப்பாக இயங்கிவந்தவேளை துரதிர்ஷ்டவசமாக இதுவும் சிலகாலம் மட்டுமே இயங்கியமை வேதனைக்குரியது.
1979ஆம்
ஆண்டுகளில் கல்முனை மக்கள்
வங்கியில் பணிபுரிந்த அதே
காலத்தில் எனக்கு
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக சுருக்கெழுத்து-தட்டெழுத்துப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது. வங்கி
அறிமுகங்கள் மூலம்
நான்
அங்கு
பகுதிநேர சுருக்கெழுத்துப் போதனாசிரியராக நியமிக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரியது. இதனால்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல
இடங்களில் சுருக்கெழுத்தை கற்பிக்க வழிசமைத்துத் தந்ததையிட்டு மன
நிறைவடைந்தேன்.
நான் 1981 ஆம் ஆண்டு
ஜனவரி
15 ஆம்
திகதி
முதல்
வல்வெட்டித்துறை மக்கள்
வங்கிக்கு மாற்றப்பட்டேன்.
* எங்கள் அப்பாவான திரு.க.வ.சிவச்சந்திரதேவன்
அவர்கள் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தின் மறக்கமுடியாத தருணங்களை ஒரு
புத்தகமாகத் தொகுக்கவேண்டும் என்கிற
கனவோடு
இதனை
ஆரம்பித்திருந்தார். அவர்
இதுவரை
எழுதிவைத்த பிரதியை மாத்திரமே நாங்கள் இதிலே
இணைத்திருக்கின்றோம். இதற்கான சரியான
ஆரம்பமோ, முடிவோ
அவரால்
வழங்கப்படாத பட்சத்திலும் அவருடைய வாழ்க்கையின் ஏனைய
காலகட்டங்களில் அவர்
சந்தித்த ஒவ்வொரு நபர்களும் இந்தக்
கதையின் ஏதோவொரு பாகத்தை பின்னால் எழுதியிருக்கிறார்கள். அவருடைய இந்தக்
கனவை
சாத்தியமாக்கிய அத்தனைபேருக்கும் அவர்சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment